7-வது சம்பளகமிஷன் பரிந்துரைக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.5 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் கடந்த 2008–ம் ஆண்டு அமல்படுத்தப் பட்டன.

அதையடுத்து அமைக்கப்பட்ட 7–வது சம்பள கமிஷன், தனது சிபாரிசு களை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

இந்த கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத உயர்வுடன் மொத்தத்தில் 23.55 சதவீத சம்பள உயர்வளிக்க சிபாரிசு செய்திருந்தது. குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தவும், அதிகபட்ச சம்பளத்தை ரூ.90 ஆயிரத்தில்இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தவும் சிபாரிசு செய்திருந்தது.

இருப்பினும், இந்த சிபாரிசுகளை ஆய்வுசெய்ய மந்திரிசபை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட செயலாளர்கள் குழு, குறைந்த பட்ச சம்பளத்தை ரூ.23,500 ஆகவும், அதிகபட்ச சம்பளத்தை ரூ.3 லட்சத்து 25 ஆயிரமாகவும் உயர்த்த சிபாரிசுசெய்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அதில், 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. சம்பள உயர்வை கடந்த ஜனவரி 1–ந் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கவும் ஒப்புதல் அளித்தது.

மத்திய மந்திரி சபை கூட்டத்துக்கு பிறகு, மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–7–வது சம்பளகமிஷன் சிபாரிசுகளை மத்திய மந்திரி சபை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்மூலம், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதிய தாரர்களும் பலன் அடைவார்கள்.

குறைந்தபட்ச சம்பளம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப் படுகிறது. அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரிக்கப் படுகிறது.

இதனால், மத்திய அரசுக்கு இந்தநிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 100 கோடி கூடுதல் சுமை ஏற்படும். கடந்த நிதி ஆண்டின் சம்பள நிலுவைத் தொகை (அரியர்) மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க ரூ.12 ஆயிரத்து 133 கோடி கூடுதலாக செலவாகும்.நிலுவைத்தொகை அனைத்தும் இந்த ஆண்டே வழங்கப்பட்டுவிடும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி 50 சதவீதம் உயரும் போதெல்லாம், பணிக்கொடை உச்சவரம்பு 25 சதவீதம் உயரும்.

வீடு கட்டுவதற்கான முன்பண உச்சவரம்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப் படுகிறது. உயிரிழந்த ஊழியர்கள் மற்றும் ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதி உதவி, ரூ.45 லட்சம் வரை அதிகரிக்கப்படுகிறது.

மருத்துவ சிகிச்சை, சுற்றுலா மற்றும் இடமாற்றத்துக்கான பயணப்படி, மரணம் அடைந்த குடும்பத்தினரின் பயணப்படி உள்பட 4 விதமான வட்டி இல்லாத முன்பண முறைகள் மட்டுமே நீடிக்கும். வட்டி இல்லாத மற்ற முன்பண முறைகள் ரத்து செய்யப்படும் இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply