பல ஆண்டுகளாக பயன் படுத்தி வந்த தனது ராசியான ஸ்கார்பியோ காரை, பிரதமராக பதவி ஏற்றபிறகு நரேந்திர மோடி விட்டு கொடுத்துள்ளார். மன்மோகன்சிங் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரையே மோடியும் இனி பயன்படுத்த உள்ளார்.

பிரதமராக பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி, பல ஆண்டாக ஸ்கார்பியோ காரைத் தான் பயன்படுத்தி வருகிறார். பாதுகாப்புவசதிகள் செய்யப்பட்ட அந்த கார், குஜராத் முதல்வராக இருந்த மோடியின் ராசியான காராகவும் இருந்து வந்தது. அதில்தான் மக்களவை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மகத்தான வெற்றிபெற்ற பிறகு, பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கும் ஸ்கார்பியோ காரில்தான் வந்தார். இந்திய தயாரிப்பான மகிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ காரைத் தான், பிரதமரான பிறகும் மோடி பயன் படுத்துவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், பாதுகாப்பு, நவீன வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது ராசியான ஸ்கார்பியோவை விட்டுக் கொடுத்துள்ளார் மோடி. கடந்த 2003ம் ஆண்டு வரை அம்பாசிடர் கார் தான் இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ காராக பயன் படுத்தப்பட்டு வந்தது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பிரதமருக்காக அதிகபாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் ரகத்தைசேர்ந்த 6 கார்கள் வாங்கப்பட்டன. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு கமாண்டோ படையினருக்காக பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 ரகத்தைசேர்ந்த 12 கார்கள் வாங்கப்பட்டன. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பயன்படுத்தி வந்த பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் கார் பிரதமர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாகும். இதில் குண்டுகள் துளைக்காத புல்லட் புரூப்கதவு, கண்ணாடி, கண்ணிவெடித் தாக்குதலிலும் சேதமடையாத வலுவான அடிப்பகுதி, டயர்கள் வெடித்தாலும் ஓடும் வசதி , குண்டு வெடிப்பிலும் தீப்பிடிக்காத பெட்ரோல்டேங்க், ஏவுகணை, வெடிகுண்டுகளைக் கண்டறியும் வெப்பசென்சார்கள், செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சாதனம் என பல்வேறு அதிநவீனவசதிகள் உள்ளன.

பொதுவாக பிரதமரின் காருக்கு முன்னும்பின்னும் மொத்தம் 9 கார்கள் அணிவகுத்து செல்லும். இந்த அணி வகுப்பில் செல்லும் இரண்டு பிஎம்.டபிள்யூ கார்கள் பிரதமரின் பி.எம்.டபிள்யூ கார்போன்றே தோற்றமளிக்கும். இதர பி.எம்.டபிள்யூ. கார்களில் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வார்கள். இது போன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகள் ஸ்கார்பியோவைவிட பி.எம்.டபிள்யூ காரில் அதிகம் உள்ளதால் அந்த காரையே பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு கமாண்டோ குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். இதனால் தனது ராசியான ஸ்கார்பியோவை விட்டுக்கொடுத்துள்ளார் மோடி. இனி அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரையே பயன் படுத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply