அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அளிக்கப்படும் சிறைதண்டனையை அதிக பட்சமாக 7 ஆண்டுகளாக ஆக்கிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.

இந்தியாவை ஊழல் அற்ற நாடாக ஆக்குவேன் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறிவருகிறார். இந்நிலையில் ஊழல் தடுப்புசட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கினால் முன்பு குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிக பட்சமாக 5 ஆண்டுகள்வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய சட்டத் திருத்தத்தின்படி லஞ்சம் வாங்கினால் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும்.

இந்த சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஊழல் வழக்குகளை விரைந்துமுடிக்கும் வகையில் அத்தகைய வழக்குகளை இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரித்து முடிக்கவும் சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை காலம் 8 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. ஆனால் சட்டத் திருத்தத்தின்படி 2 ஆண்டுகளுக்குள் வழக்கு விசாரணையை முடித்தே ஆகவேண்டும். இந்த சட்டத் திருத்தத்தின்படி லஞ்சம் வாங்குபவருக்கு மட்டும் அல்லாமல் லஞ்சம் கொடுப்பவருக்கும் தண்டனை அளிக்கப்படும். ஓய்வுபெற்ற மற்றும் பதவியில் இருந்து விலகிய அரசு ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முன் அனுமதி பெறவேண்டும். அரசு பதவியில் உள்ளவர்கள் பணியை செய்கையில் சிபாரிசு செய்தால் அது குறித்து விசாரிக்க லோக்பால் அல்லது லோக் ஆயுக்தாவின் அனுமதி பெற வேண்டும்.

Leave a Reply