7ம் கட்டமாக 7 மாநிலங்கள் , 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 30) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பா.ஜ.க பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திரமோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர்ஜோஷி ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதிதொடங்கி அடுத்தமாதம் 12ம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 6 கட்டங்களாக 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் 7ம் கட்டமாக ஆந்திரத்தில் உள்ள தெலங்கானா (17), பிகார் (7), குஜராத் (26), ஜம்முகாஷ்மீர் (1), பஞ்சாப் (13), உ.பி., (14), மேற்கு வங்கம் (9) ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் தாத்ரா- நாகர்ஹவேலி, டையூ-டாமன் ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் (தலா ஒரு தொகுதிகள்) ஆகியவற்றில் உள்ள 89 தொகுதிகளுக்கு புதன் கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில், தெலங்கானா பகுதியில் உள்ள 17 தொகுதிகளுக்கு மட்டும் முதல் கட்டமாக புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சீமாந்திரத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 7ஆம் தேதி 2ஆவது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகள் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 4ஆவது கட்டமாக 14 தொகுதிகளுக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.

முக்கிய வேட்பாளர்கள்: 7ஆம் கட்டத் தேர்தலில் 13 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என மொத்தம் 1,295 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அவர்களில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி (வதோதரா), காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (ரேபரேலி), பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் (லக்னௌ), மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி (காந்திநகர்), முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (இருவரும் கான்பூர் தொகுதியில் போட்டி), பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் (இருவரும் அமிருதசரஸ் தொகுதியில் போட்டி) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

Tags:

Leave a Reply