தே.மு.தி.க, பா.ம.க. ம.தி.மு.க உடன் கூட்டணி அமைப்பது குறித்து பூர்வாங்க பேச்சுவாரத்தை நடத்தப்பட்டு வருவதாகவும்,பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வரும் பிப்ரவரி 8-ஆம்தேதி சென்னையின் புறநகர் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேச இருப்பதாகவும் . பா.ஜ., மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது ; பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வரும் பிப்ரவரி 8-ஆம்தேதி சென்னை வருகிறார். புறநகர் பகுதியில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான இடம் ஓரிருநாளில் அறிவிக்கப்படும்.

மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க கூட்டணியில் ம.தி.மு.க, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்துள்ளன. தேமுதிக, பாமக, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது. ம.தி.மு.க.,வுடன் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை இன்னும் இருநாள்களில் தொடங்கும்.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணி போட்டியிடும். பாஜக இடம் பெறும் அணி அதிக இடங்களில் வெற்றிபெறுவது உறுதி.

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு நிறைவுவிழா வரும் ஜனவரி 12-ஆம்தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகம்முழுவதும் அனைத்து கிராமங்களிலும் அன்று மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் படத்துக்கு முன்பு, மத்தியில் நரேந்திரமோடி தலைமையில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைய பணியாற்றுவோம் என்று பா.ஜ.க தொண்டர்கள் உறுதி மொழி ஏற்பார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் வரும் ஜனவரி 31ஆம்தேதி தமிழக மீனவர்களின் உரிமைகளை காப்பதற்காக நடைபெறும் கடல்தாமரை மாநாட்டில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் பங்கேற்கிறார்.

தமிழகத்தில் மணல் கொள்ளை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. மணல்கொள்ளை மூலம் நாள் ஒன்றுக்கு தோராயமாக ரூ. 68 கோடி மக்கள்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

இதனைத் தடுக்க வீடு கட்டுவதற்கான உரிமம்பெறும்போதே தேவையான மணலை அரசே நேரடியாக விற்கவேண்டும். மணல்தேவை அதிகமாக இருப்பதால் மாற்று மணலைக் கொண்டு வீடுகட்டுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும். இயற்கை சீற்றங்களினால் ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதனை மாற்றி பயிர்க்காப்பீடு செய்துள்ள தனி ஒருவிவசாயிக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கவேண்டும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

Leave a Reply