மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட இரண்டு கட்சிகளும் தலா 10 தொகுதிகளுக்கு மேல் தேராது ' தேசியவாத காங்கிரஸ்சின் சின்னமான கடிகாரத்தில் நேரம் 10:10 என காட்டுவது அதைத்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சோலாப்பூர், உஸ்மானாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் மோடி பேசியதாவது:

தேசியவாத காங்கிரஸ்சின் சின்னமான கடிகாரத்தில் நேரம் 10:10 என காட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது, எதைச் சுட்டிக் காட்டுகிறது என்று தெரிகிறதா?

நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற முடியாது என்பதையே இது காட்டுகிறது. தேசியவாத காங்கிரஸ் இயல்பிலேயே முறை கேடுகளில் ஈடுபடும் கட்சி. அக்கட்சி தொடங்கப்பட்டது முதல், அதன் தலைவர்கள் முறைகேடுகள் செய்வதிலிருந்து திருந்த வில்லை.

அவர்கள் மீண்டும் ஆட்சிக்குவந்தால், முறைகேடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

மற்றொரு புறம், இந்நாட்டின் பணப் பெட்டியை அபகரிக்க சிலர், அதன் மீது கண் வைத்துள்ளனர். அவர்களின் கைகள் கருவூலத்தை தொடுவதற்கு விட மாட்டேன்.

காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சிசெய்து, இந்த மாநிலத்தை சீரழித்து விட்டன. இந்த ஆண்டு, இந்தமாநிலத்தில் இருந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சகாப்தத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஆண்டாகும்.

அந்த இருகட்சிகளையும், இந்த மாநிலத்தில் இருந்தே அகற்றவேண்டும். இந்நாட்டு மக்களை, தங்கள் சட்டை பைக்குள் கொண்டுவர முடியும் என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்களின் மனநிலை தற்போது மாறி விட்டது. தவறுசெய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை மக்கள் விட்டு வைக்க மாட்டார்கள்.

இந்த மாநிலத்தில் ஆண்டு தோறும் 3,700 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களுக்காக, முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஒருசொட்டு கண்ணீர்கூட சிந்தவில்லை.

விவசாயிகள் கேட்ட தண்ணீரை உங்களால் அவர்களுக்கு கொடுக்க முடியவில்லை. நதிகள் இணைப்பு திட்டம்: விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்கு விரிவான திட்டம் உள்ளது. இந்தநாட்டில் ஆண்டுதோறும் சில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. சில ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன.

வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆறுகளில் இருந்து, வறண்டு காணப்படும் ஆறுகளுக்கு தண்ணீரை திருப்பிவிட வேண்டும். அவ்வாறு செய்தால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாது. நடைபெறவுள்ள தேர்தலில் ஜாதி வாரி அரசியல், மாமனார்-மருமகன் அரசியல், மகள்-மருமகன் அரசியல் ஆகியவற்றை அகற்றி விட்டு, வளர்ச்சிப் பாதையை தேர்ந்தெடுங்கள்.

கடந்த 50 ஆண்டுகளை சரியாகப் பயன்படுத்தியிருந்தால், உலக நாடுகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கும். ஏராளமானோர் புனிதயாத்திரை வரும் துல்ஜாபூர், விரைவில் சுற்றுலா மையமாக மாற்றப்படும். அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் வகையில், துல்ஜாபூர்-சோலாப்பூர் இடையே விரைவில் ரயில்வசதி ஏற்படுத்தப்படும் என்று மோடி பேசினார்.

Leave a Reply