பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த வரைவு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இதர பல துறைகளின் அபார செயல்திறன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகபட்ச வளர்ச்சி காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கு 9 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பிரதமர் மன்மோகன் சிங் வளர்ச்சி இலக்கை 9.2 சதவீதமாக உயர்த்துவதற்கான சாத்தியம் உள்ளது என கூறியுள்ளார். 9.5 சதவீத வளர்ச்சியை அடைய வேண்டுமானால் விவசாய துறையின் உற்பத்தி வளர்ச்சி இலக்கை 4.2 சதவீதமாக அதிகரிக்க வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002-2007) விவசாய உற்பத்தியை 4 சதவீதம் அதிகரிக்க மத்திய திட்டக் குழு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. எனினும் 2.3 சதவீத வளர்ச்சிதான் காண முடிந்தது. நடப்பு பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வேளாண் துறையின் உற்பத்தி வளர்ச்சி 3.3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி துறைகளின் உற்பத்தி நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்தில் 8.3 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகபட்ச வளர்ச்சி காண, 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் இதனை 11.5 சதவீதமாக உயர்த்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply