ராகுல்காந்தி மிகப்பெரிய கோமாளி என்பது நாட்டுக்கே தெரியும், எங்களை பாஜக.,வுடன் கூட்டணி சேர்வோம் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் கடுமையாக விமர்சித்தார்.
தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்ரியசமிதி கட்சி தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கு முதல்வராக சந்திரசேகர் ராவ் இருந்து வருகிறார். இந்த ஆண்டு மேமாதம் வரை ஆட்சி இருக்கும் போது, முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க முதல்வர் சந்திர சேகர் ராவ் தீர்மானித்தார்.
இதையடுத்து, இன்று கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவையை கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்தத் தீர்மானத்தை ஆளுநர் இ.எல். நரசிம்மனிடம் முதல்வர் சந்திரசேகர் ராவ் அளித்தார்.
இன்னும் தேர்தல் குறித்த தேர்தல் ஆணையம் எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில், 105 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று அறிவித்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் 6-ம்தேதி பிரதமர் மோடியை முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார். அப்போது மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி கோரப்பட்டது அன்று முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசியல் நோக்கர்கள், தெலங்கானாவில் நடக்கவுள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து செயல்பட சந்திர சேகர் ராவ் கூட்டணி குறித்துப் பேசிவிட்டார் என்று செய்திகள் வலம் வந்தன. அதற்கு ஏற்றார் போல் அந்தச் சந்திப்புக்குப் பின் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்காமல் சந்திரசேகர் ராவ் இணக்கம் காட்டி வந்தார்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பாஜகவும், டிஆர்எஸ் கட்சியும் இணைந்து தேர்தலைச்சந்திக்குமா என்று கேட்டனர், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியும் விமர்சித்து வருவதைக் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
தெலங்கானா மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சி தான் மிகப்பெரிய எதிரி. அடிப்படையில்லாத, ஆதாரமில்லாத, நடைமுறைக்குச் சாத்தியமில்லாத குற்றச் சாட்டுகளைத்தான் எங்கள் மீது காங்கிரஸ்கூறுகிறது.
நாட்டிலேயே மிகப்பெரிய கோமாளி யாரென்றால், அது ராகுல் காந்தி என்று அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்ததையும், பின்னர் தனதுஇருக்கையில் அமர்ந்து கண்ணடித்ததையும் அனைவரும் அறிவார்கள். ராகுல்காந்தி தெலங்கானாவுக்கு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்தால்தான் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கும்.
காங்கிரஸ் என்ற சுல்தானின் இளவரசராக ராகுல் காந்தி இருந்துவருகிறார். அதனால்தான் கூறுகிறேன்,
இனிவரும் காலங்களி ல் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் யாரும் டெல்லிக்கு அடிமையாக இருக்கக்கூடாது.
தெலங்கானாவுக்கு தேவையான விஷயங்களை தெலங்கானா மக்களே முடிவு செய்வார்கள். வரும் தேர்தலில் நாங்கள் தனித்துத்தான் போட்டியிடப் போகிறோம். ஒருவேளை எம்ஐஎம் கட்சி வந்தால் வரவேற்போம். எங்களின் நண்பர்கள்தான்.
இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.