கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு இன்று (02.07.2025) முதல் 09.07.2025 வரை நான் பயணம் மேற்கொள்கிறேன்.
அதிபர் திரு ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் கானா செல்கிறேன். கானா உலகளாவிய தென்பகுதி நாடுகளில் ஒரு மதிப்புமிக்க தோழமை கூட்டாண்மை நாடாகும். மேலும் ஆப்பிரிக்க யூனியனிலும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது வரலாற்று உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வளர்ச்சிக் கூட்டாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எனது கருத்துப் பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன். சக ஜனநாயக நாடாக, கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கௌரவமிக்கதாக அமையும்.
நான் டிரினிடாட் & டொபாகோ குடியரசு நாட்டில் ஜூலை 3 மற்றும் 4-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறேன். அங்கு இரு நாடுகளுக்கு இடையேயான ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் மக்களிடையேயான தொடர்பைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்த ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிபர் திருமதி கிறிஸ்டின் கார்லா கங்காலூவையும், சமீபத்தில் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிரதமர் திருமதி கம்லா பெர்சாத் – பிஸ்ஸேசரையும் சந்திப்பேன். இந்தியர்கள் முதன்முதலில் 180 ஆண்டுகளுக்கு முன்பாக டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு சென்றுள்ளனர். இந்தப் பயணம் நம்மை ஒருங்கிணைக்கும் வம்சாவளியினரின் பிணைப்புகளைப் புதுப்பிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.
போர்ட் ஆஃப் ஸ்பெயினிலிருந்து, நான் பியூனஸ் அயர்ஸுக்குப் பயணம் மேற்கொள்கிறேன். 57 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமர் அர்ஜென்டினாவிற்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அர்ஜென்டினா லத்தீன் அமெரிக்காவில் ஒரு முக்கிய பொருளாதார கூட்டாளியாகவும், ஜி-20 அமைப்பில் நெருங்கிய ஒத்துழைப்பாளராகவும் உள்ளது. அதிபர் திரு ஜேவியர் மிலேயை சந்தித்து கலந்துரையாடுவதை எதிர்நோக்கியுள்ளேன். வேளாண்மை, முக்கிய கனிமங்கள், எரிசக்தி, வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.
ஜூலை 6 மற்றும் 7-ம் தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நான் கலந்து கொள்கிறேன். நிறுவன உறுப்பினராக, வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய தளமாக பிரிக்ஸ் அமைப்பை திகழச் செய்வதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. உச்சிமாநாட்டிற்கிடையே, நான் பல உலக நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளேன். இருதரப்பு அரசு பயணமாக பிரேசிலியாவுக்குச் செல்வேன். சுமார் 60 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவரின் முதலாவது பயணம் இதுவாகும். இந்தப் பயணம் பிரேசிலுடனான நமது நெருங்கிய நட்பை வலுப்படுத்தவும், உலகளாவிய தென்பகுதி நாடுகளின் முன்னுரிமைகளை மேம்படுத்துவதில் எனது நண்பர் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.
எனது பயணத்தின் நிறைவாக நமீபியா செல்கிறேன். அதிபர் டாக்டர் நெடும்போ நந்தி – நதைத்வாவை சந்தித்து உலகளாவிய தென்பகுதி நாடுகள், நமது பிராந்தியங்கள், நமது மக்களின் நலனுக்கான ஒத்துழைப்பு குறித்த புதிய திட்டமிடலை மேற்கொள்ள உள்ளேன். சுதந்திரம் மற்றும் மேம்பாட்டிற்கான நமது நீடித்த ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பைக் கொண்டாடும் இந்த தருணத்தில் நமீபியா நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது கௌரவமாக இருக்கும்.
ஐந்து நாடுகளில் மேற்கொள்ளப்படும் எனது பயணம், உலகளாவிய தென்பகுதி நாடுகளில் நமது நட்புறவை வலுப்படுத்தும். அட்லாண்டிக் பிராந்தியத்தின் இருதரப்பிலும் நமது கூட்டாண்மையை வலுப்படுத்தும். மேலும் பிரிக்ஸ், ஆப்பிரிக்க யூனியன், ஈகோவாஸ், கேரிகாம் போன்ற பலதரப்பு தளங்களில் ஈடுபாடுகளை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |