ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தற்போது பதிலுரை ஆற்றி வருகிறார்.
அப்போது, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, அணு ஆயுத மிரட்டல் இனி எடுபடாது என்றும் இந்தியா இனி ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சாது என்றும் பேசி உள்ளார். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது என்றும் இந்தியாவுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களுக்கு தான் கண்ணாடியை காட்ட விரும்புகிறேன் என்றும் பிரதமர் மோடி பேசி உள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆயுதப் படைகள் சுதந்திரமாக செயல்படவோ மற்றும் சுதந்திரமாக வியூகங்களை வகுக்கவோ வாய்ப்பளிக்கப்படவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதை சுட்டிக்காட்டி, மத்திய அரசு ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்தது என்றும் இதனால் பாகிஸ்தானால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் பிரமதர் மோடி பேசி உள்ளார்.
– பகல்காம் தாக்குதல் நடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று நான் வெளிநாட்டில் இருந்தேன். நாடு திரும்பிய உடன் கூட்டத்தை கூட்டினேன், அந்தக் கூட்டத்தில், நாங்கள் தெளிவான வழிமுறைகளை வழங்கினோம். பயங்கரவாதத்திற்கு வலுவான பதிலடி அவசியம், அதுவே எங்கள் தேசியத் தீர்மானம்.
– இந்தியா தாக்குதல்கள் மேற்கொள்வதை எந்த நாடும் தடுக்கவில்லை. 193 நாடுகளில் 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தன. பாகிஸ்தானுக்கு ஆதரவாக 3 நாடுகள் இருந்தன. உலக நாடுகளின் ஆதரவு எங்களுக்கு கிடைத்தது, ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மட்டும் எங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
– நம்முடை ஆயுதப் படைகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. எப்போது, எங்கே, எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம். அவர்களுக்கு (பாகிஸ்தான்) நாங்கள் ஒரு கடினமான பாடம் கற்பித்தோம், இன்றும் கூட, அவர்களால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
– உலகின் எந்த தலைவரும் இந்தியாவின் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி பேசினார்.
– உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் நடவடிக்கையை நிறுத்தச் சொல்லவில்லை. மே 9ஆம் தேதி இரவு, அமெரிக்க துணை ஜனாதிபதி என்னை அழைக்க முயன்றார். அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார், ஆனால் நான் பாதுகாப்பு படைகளுடனான சந்திப்பில் மும்முரமாக இருந்தேன். நான் அவரைத் திரும்ப அழைத்தேன். பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலைத் திட்டமிடுவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கூறினார். எனது பதில், “இதுதான் பாகிஸ்தானின் நோக்கம் என்றால், அது அவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்” என்றேன்.
– பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் படைகள் இந்தியாவிடம் இருந்து ஒரு பெரிய தாக்குதலை எதிர்பார்த்தன. அவர்கள் (பாகிஸ்தான்) அணு ஆயுத அச்சுறுத்தல்களைக் கொடுத்தனர். மே 6-7 இரவு, நாங்கள் விரும்பிய வழியில் ஒரு நடவடிக்கையை (ஆப்ரேஷன் சிந்தூர்) மேற்கொண்டோம், பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. 22 நிமிடங்களில், ஏப்ரல் 22ஆம் தேதி தாக்குதலுக்கு நாங்கள் பழிவாங்கினோம்.
– நாங்கள் பாகிஸ்தானுடன் பல முறை சண்டையிட்டோம், ஆனால் இந்தியாவின் உத்தியில் பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையிலும் பயங்கரவாத முகாம்களை அழித்தது இதுவே முதல்முறை. யாரும் பாகிஸ்தானின் இந்த இடங்களை தாக்க முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நம் படைகள் பயங்கரவாத தலைமையகங்களை அழித்துவிட்டன.
– அணு ஆயுத மிரட்டல்கள் இனி எடுபடாது என்பதையும், அதற்கு பயப்பட மாட்டோம் என்பதையும் நிரூபித்தோம். பாகிஸ்தானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தி, அவர்களின் விமான தளங்கள் மற்றும் அவர்களின் பொதுச் சொத்துக்களைத் தாக்கி, இந்தியா தனது தொழில்நுட்ப வல்லமையைக் காட்டியது. இந்த விமான ஏவுத்தளங்கள் சில இன்னும் அவசர சிகிச்சை பிரிவில்தான் (ICU) உள்ளன.
– இந்த முறை நாம் பாகிஸ்தானின் மையப்பகுதியைத் தாக்கினோம். பகல்காம் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற பயிற்சி மையங்கள் தாக்கப்பட்டன. இந்த முறை, நமது படைகள் 100% வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ளன.
– இந்தியா எந்த அளவிற்கு செயல்படும் என்பதை உலகத்திற்கு இப்போது தெரிந்திருக்கும். சிந்தூர் முதல் சிந்து வரை, நாங்கள் பாகிஸ்தானைத் தாக்கினோம். இதுபோன்ற தாக்குதல்கள் சம்பவத்திற்கு பாகிஸ்தானும், அதன் பயங்கரவாதத் தலைவர்களும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் உறுதி செய்தது.
– பகல்காம் தாக்குதல் நடந்து 3-4 நாட்களுக்குள், அவர்கள் (எதிர்க்கட்சியினர்) மோடி தோல்வியடைந்துவிட்டார் என்றும் மோடி எங்கே என்றும் கேள்வி எழுப்பினர். அவர்களின் சுயநல அரசியலுக்காக, அவர்கள் என்னைத் தாக்கி பேசினர். அவர்களின் பேச்சுக்கள் பாதுகாப்பு படைகளுக்கு மனச்சோர்வை அளித்தன. அவர்கள் (எதிர்க்கட்சியினர்) பாதுகாப்பு படைகளை நம்பவில்லை. அதனால்தான் அவர்கள் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ஊடகங்களில் நீங்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பெறலாம், ஆனால் மக்களின் இதயங்களில் இடம் பிடிக்க முடியாது.
– மே 10ஆம் தேதி அன்று, இந்தியா போர் நிறுத்தத்தை அறிவித்தது. இதுகுறித்து அவையில் நிறைய விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து பரப்பப்பட்ட அதே பிரச்சாரம் இங்கும் சொல்லப்பட்டது. சிலர் பாதுகாப்பு படைகள் சொல்வதற்குப் பதிலாக பாகிஸ்தான் சொல்வதை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள்.
– இந்தியா இப்படி பதிலளிக்கும் என்று பாகிஸ்தான் நினைத்துக்கூடப் பார்க்கவே இல்லை. பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல், “நிறுத்தங்கள், எங்களால் உங்களின் தாக்குதலை தாக்கு முடியவில்லை” என கதறினார். மே 7 அன்றே இந்தியா எங்கள் இலக்கை அடைந்துவிட்டதாகவும், பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால் என்ன நடக்கிறது என்று பாருங்கள் என கூறினோம். நான் இதை மீண்டும் சொல்கிறேன். இது இந்தியாவின் தெளிவான அரசியல் மற்றும் ராணுவ நோக்கம் ஆகும். எங்கள் நடவடிக்கை பதற்றத்தை அதிகரிக்கவில்லை.
– இன்றைய நாள் விவாதம் முழுவதையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் பாகிஸ்தானில் இருந்து பிரச்சினைகளை எடுக்கிறது. இன்றைய உலகில், தகவல்களும் பொய்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு மற்றும் பொய்கள் படைகளை மனச்சோர்வடையச் செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தானின் கதையாடலுக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக செயல்படுகிறது.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |