தேசபக்தி, தமிழ் மொழிப்பற்று, அரசியலாண்மை என தனிப்பெரும் புகழ்பெற்று விளங்கிய பாஜகவின் மூத்த தலைவரும், நாகாலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநருமான அண்ணன் திரு. இல. கணேசன் அவர்களின் மரணம் நம்மை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரின் மறைவு நமது நாட்டிற்கே அளவிட முடியாத பேரிழப்பாகும்.
தஞ்சாவூரில் தேசியவாத பிடிப்புக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்த அவர், சிறு வயது முதலே ஷாகாக்களில் பங்கேற்று. 1970-ஆம் ஆண்டு முதல் முழுநேர சங்க சேவகராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். நான் முழுநேர ஊழியன்; உத்தியோகம், கல்யாணம் எதுவும் எனக்கு வேண்டாம்’ என்ற உறுதியுடன், தனது தனிப்பட்ட வாழ்க்கையின் சுகங்களைத் துறந்து, ஆர்.எஸ்.எஸ்., பாஜக, மற்றும் நம் பாரத தேசத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவர். திரு. கோபால் அவர்கள், திரு. கு.ஈ. இராமசாமி அவர்கள், திரு. சுப்பாராவ் அவர்கள், திரு. சூரியநாராயண ராவ் அவர்கள் போன்று சங்கத்தின் மூத்த சேவகர்களின் வழிகாட்டுதலின் மூலம் பக்குவமடைந்த திரு. இல. கணேசன் அவர்கள், நாகர்கோவில், இராஜபாளையம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பொறுப்பேற்றார்.
எமர்ஜென்சியை எதிர்த்து தீரத்துடன் போராடியவர். மீனாட்சிபுரம் மதமாற்றச் சம்பவத்தை எதிர்க்கவும், இந்து முன்னணி இயக்கத்தினை உருவாக்கவும் பெரும் பங்காற்றியவர்.
சென்னையில் பொற்றாமரை எனும் இலக்கிய அமைப்பினை நிறுவி, தமிழ்மொழியின் இலக்கிய வளர்ச்சிக்கும், இளைஞர்களை இசை, நாடகம், கலை போன்ற பல்துறைகளிலும் ஊக்குவிக்கும் பணிகளிலும், ஈடுபட்ட தமிழ் அறிஞர். “பாரதத் தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்” போன்ற பல தேசபக்திப் பாடல்களை எழுதி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்வுகளில் ஒலிக்கச் செய்தவர். 1991-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, மாநில அமைப்புச் செயலாளர்,
மாநிலத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய துணைத் தலைவர், ராஜ்யசபா உறுப்பினர் போன்ற பல முக்கிய பொறுப்புகளை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2021-23-ல் மணிப்பூர் ஆளுநராகவும், 2022-ல் மேற்கு வங்காள ஆளுநராகவும், 2023 முதல் நாகாலாந்து ஆளுநராகவும் சிறப்புடன் பணியாற்றியவர்.
கொள்கை வேறுபாடுகளைக் கடந்து, தனிப்பட்ட நட்பினை மட்டும் பிரித்துப் பார்க்கும் பெருமகனாக விளங்கியவர். ஆம், காலஞ்சென்ற முன்னாள் முதல்வர்கள் புரட்சித் தலைவி செல்வி. ஜெயலலிதா அவர்கள், கலைஞர் திரு. கருணாநிதி அவர்கள் உள்ளிட்ட தலைவர்களுடன் நல்லுறவை பேணி, கொள்கை மற்றும் கருத்து வேறுபாடுகளின் மத்தியிலும் அரசியல் நாகரிகத்தை நிலை நிறுத்தியவர். ஒழுக்கம், எளிமை, தியாகம், அர்ப்பணிப்பு இவை அனைத்திற்கும் உயிரோவியமாக இருந்தவர்.
மகாபாரதம், பாகவதம், வீரசிவாஜி வாழ்க்கை ஆகியவற்றிலிருந்து அரசியல் செய்பவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். “எண்ணிக்கையின் பலத்தை விட, தர்மமே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையின் ஒளிவிளக்காய் வாழ்ந்தவர். அண்ணன் திரு. இல. கணேசன் அவர்களின் வாழ்வு, ஒரு அரசியல் பயணம் மட்டுமல்ல. தன்னலமற்ற ஒரு தலைவர் நாட்டுக்காக எப்படி வாழ வேண்டும் என்பதற்கான பாடம். அன்னாரின் வாழ்க்கைப்பயணமும், அவரின் உயரிய சிந்தனைகளும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாக என்றென்றும் விளங்கும்.
அடுத்த ஐந்து நாட்களுக்கு அனைத்து விதமான கட்சி சார்ந்த நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன. தமிழகமெங்கும் பாஜக-வின் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.என்றும் தாயகப் பணியில்
நன்றி நயினார் நாகேந்திரன்
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |