எங்கே போனாலும் சொந்த மண் மீது தனிக் காதல்

மணா’-வின் தொகுப்பில் வெளியான ‘ஊர் மணம்’ தொகுப்பில் தஞ்சாவூரைப் பற்றித் தன்னுடைய அனுபவங்களை விவரித்திருக்கிறார் இல.கணேசன். வாசித்துப் பாருங்கள்- தஞ்சையின் ‘ஊர் மண’த்தை!

“உலகத்திலேயே அழகான இடம் எது என்று யாராவது என்னைக் கேட்டால் சட்டென்று உடனே தஞ்சாவூரையும், அங்கிருக்கிற பெரிய கோவிலையும்தான் சொல்வேன். இதைவிடப் பல நகரங்கள் சிறப்பாக அழகாக இருக்கலாம். ஆனால் என் மனசில் அப்படியொரு சித்திரம் உருவாகிவிட்டது, கம்பீரமான பெரிய கோவிலின் அழகை சிறுவயதில் பார்க்காத நாட்களே இல்லை. பிறகு ரெவின்யூ டிபார்ட்மெண்டில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதும்அந்தக் கோவிலைச் சுற்றித் தான் தினமும் நடந்து வருவேன். எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத அற்புதத்துடன் இருக்கும் அந்தக் கோவிலின் கோபுரம். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தஞ்சாவூரில்தான். தெற்கு வீதி, மேலவீதியெல்லாம் ரொம்பவும் நெருக்கமாக நான் உணர்ந்த பகுதி. ரொம்பவும் குறுகிய சந்துகளுக்குப் பெயர் போனது தஞ்சை.

என் வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்கள் உருவானதும் இங்குதான். இளம் வயதில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச வேண்டும் என்பதற்காக நானும், நண்பர்களும் சேர்ந்து போட்டி வைப்போம். அறுபதுகளை ஒட்டின காலகட்டம் அது, ‘விவேகானந்தர் பேரவை’ என்கிற அமைப்பை அப்போது உருவாக்கியிருந்தோம். மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள்தான் அதில் அதிகமாக இருப்பார்கள். எல்லாருமாகச் சேர்ந்து பிரகதீஸ்வரர் கோவிலை ஒரு வலம் வருவோம். கோவிலை விட்டு வெளியே வருகிறவரை ஆங்கிலம் கலக்காத தமிழில் பேச வேண்டும். ஏறத்தாழ முக்கால் மணி நேரம் ஆகும்.

யாராவது இடையில் ஆங்கில வார்த்தை பேசினால் குறித்துக் கொள்வோம். யார் அதிகம் கலந்து பேசுகிறாரோ, அவர் மற்ற நண்பர்களுக்கு கோவிலுக்கு வெளியே வேர்க்கடலை வாங்கித் தர வேண்டும். அதனால் நாடகத் தமிழிலும் பேசாமல், இயல்பாகத் தமிழில் பேசிக்கொண்டு கோவிலைச் சுற்றி வந்திருக்கிறோம் தேவாரம், திருவாசக வரிகள் உச்சரிக்கப்படுகிற அந்த வளாகத்தில் எங்களுக்குக் கிடைத்த அனுபவம் – எப்பேர்ப்பட்ட பயிற்சி!

தமிழிலும் எவ்வளவு சொல்வளம் நிறைந்து கிடக்கிறது என்பதை மிகுந்த மனநிறைவுடன் அனுபவித்த நாட்கள் அவை. பிறகு தமிழில் பிழையில்லாமல் பேசுவதை ஆர்.எஸ்.எஸ்.சில் போட்டியாகவே வைத்தோம். வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு பெரிய கோவிலில் நடக்கும். தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் பகவத் கீதையின் ஆங்கிலச் சொற்பொழிவு நடக்கும். இதெல்லாம் அந்தக் கோவில் என்னுடைய சிந்தனையில் ஏற்படுத்திய மாற்றங்கள்.

பதினாறு வயது வரை தஞ்சாவூரை விட்டு நான் வெளியே போனது கிடையாது. அதனால் அது தான் எனக்கு நன்றாகத் தெரியும். நிறையப் பொதுக் கூட்டங்கள் அங்கங்கே நடக்கும். அதற்கு நண்பர்களுடன் சேர்ந்து போவேன் சுகப்பிரம்மம் என்கிறவர் ஆழமான விஷயங்களை அழகாகப் பேசுவார். மனசின் பொறிதட்டுகிற மாதிரி இருக்கும். கம்பீரமாகப் பேச வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்திய இன்னொரு தலைவர் முத்துராமலிங்கத் தேவர். மேலவீதியில் தெருவில் கூட்டம், தரையில்நானும் நண்பர்களும் உட்கார்ந்திருந்தோம்.

கதர் வேஷ்டி, கதர் ஜிப்பா, நெற்றியில் பட்டையாக விபூதி, கோவிலுக்குப் போய்விட்டு மேடைக்கு வந்து நின்று பார்வதி பதையே என்று தேவர் பாட ஆரம்பித்தார் பாருங்கள்! ஆவேசமாக மடை திறந்த வெள்ளம் மாதிரி பிறகு பேச ஆரம்பித்துவிட்டார்.

எனக்குத் தூண்டுதல் ஏற்படுத்தின இன்னொரு இடம் சங்கீத மஹால். அந்த இடமே மிகவும் அமைதியாக இருக்கும். அந்தப் படிக்கட்டுகள், அந்தக் கிணற்றடி, அங்குதான் நண்பர்களுடன் சேர்ந்து பேசுவோம். எவ்வளவோ தேசபக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறோம். இன்றைக்கும் அந்த இடத்திற்குப் போனால் உடம்பெல்லாம ஒரு அதிர்வு பரவும்.

இதையெல்லாம்விட தஞ்சாவூர்க்காரனுக்குப் பதிந்துபோன விஷயம் சலசலத்தபடி ஊருக்குள் ஓடி வரும் காவிரி ஆறு. காவிரி ஆற்றிலிருந்து கிளை பிரிந்து வரும் புது ஆற்றில் ரொம்பவும் வேகத்துடன் நீர் வரும். எங்க வீட்டில் என்னை ஆற்றுக்கு குளிக்க அனுப்பப் பயப்படுவார்கள். அதையும் மீறிப் போய் ஆற்றுக்குள் குதித்து ஜில்லென்ற அதன் குளிர்ச்சியில் நனைந்து வெடவெடத்து வீட்டுக்கு வரும்போது என்ன ஒரு சுகம் தெரியுமா?

தஞ்சையில் இன்றைக்கும் பண்டிதத் தோட்டம், நாடார்த் தோட்டம் என்கிற இடங்கள் இருக்கின்றன. பண்டிதத் தோட்டத்தில் அடர்த்தியாக மாமரங்கள் நிறைந்திருக்கும். அதில் போய்க் கள்ளத்தனமாக வாட்ச்மேனுக்குத் தெரியாமல் மாங்காய் அடிப்போம். அந்தப் பண்டிதத் தோட்டத்தின் அருமை பிறகு “தில்லானா மோகனாம்பாள்’ கதையைப் படித்தபோது தான் தெரியும்.

அதில் அபிராமிப் பண்டிதர் என்று ஒரு சித்தர் வருவார். அந்தத் தோட்டத்தில் நிறைய மூலிகைகள் இருப்பதாகவும், நாதஸ்வர வித்வான் சண்முகசுந்தரம் காயம்பட்டதும் அந்தப் பண்டிதர் வந்து மருந்து போடுவதாக வரும்.

இம்மாதிரியான பசுமையான இடங்கள் அப்போது தஞ்சையில் அதிகம். பெரிய கோவிலின் தென்புறத்தில் மேலேறி உட்கார்ந்தால் காற்று பிய்த்துக் கொண்டு வரும். அதுமாதிரி சிவகங்கைத் தோட்டத்திற்கு வெளிப்புறம் இருக்கக் கூடிய குளம்.

அங்கே சரபோஜி மகராஜா கட்டின சர்ச் ஒன்று இருக்கும். முன்னால் குளம்; அதன் சரிந்த படிகள்; அந்த அமைதியான இடம் என் மனசுக்குப் பிடித்த இடங்களில் ஒன்று.

இன்னொரு விசேஷம். தஞ்சைப் பகுதியில் அங்கங்கே காதை நிறைக்கும் இசை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து திருவையாறு சங்கீத உற்சவத்திற்குப் போவேன். நான் சங்கீதம் படிக்கவில்லை.

வீட்டில் சகோதரிகள் சங்கீதம் படிக்கப் போனபோது கூடவே ‘ஆம்பிளைத் துணையாக’ நானும் போய் ஓரத்தில் உட்கார்ந்திருப்பேன். அப்போது காதில் விழுந்த ஞானம் தான். மற்றபடி சங்கீதத்தின் ஆழமெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு ரசிகன். அவ்வளவுதான்.

இது மாதிரியான சங்கீதப் பரிச்சயம் பல தஞ்சை மாவட்டத்துக்காரர்களுக்கும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

திருப்பந்துருத்தி பக்கமெல்லாம் ‘சபதஸ்தானம்’ என்று ஏழு இடங்களுக்குப் பல்லக்கு வரும். வான வேடிக்கையுடன் ராத்திரி அது வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அப்போது தொட்டிப் பள்ளிக்கூடம்’ என்கிற வீரராகவ உயர்நிலைப்பள்ளியில் தான் படித்துக்கொண்டிருந்தேன். எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் ஒரு கொடுப்பினை.

பேசுவதற்கு ஒரு பயிற்சித்தளமாக இருந்தது அந்தப் பள்ளி. முதல் வகுப்பு படிக்கும்போதே ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன். ஆங்கில மோகத்தை விட்டு தமிழ் மொழி மீது ஒரு ஆர்வம் வரக் காரணமாக இருந்தது அங்கு தான்.

அதனால்தான் இல.கணேசன் என்று என் இனிஷியலைக் கூட மாற்றிக்கொண்டேன். அப்போதே தமிழில் தான் கையெழுத்துப் போடுவேன்.

தமிழில் கையெழுத்துப் போட்டதற்காக ஒரு உயர் அதிகாரி எனக்குச் சம்பளம் கொடுக்கத் தயங்கினபோது “அப்படின்னா நீங்களே வைச்சுக்குங்க…” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

எனது பதிவேடுகளும் தமிழிலேயே இருக்கும். எனது நண்பர்கள் ‘பைத்தியம்’ என்று சத்தம் போடுவார்கள்.

“என்ன சொன்னாலும் பரவாயில்லை” என்று தமிழிலேயே தான் எழுதுவேன்.

இப்போதும் பேண்ட் போடுவதை விட வேஷ்டி உடுப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்..

தஞ்சாவூரில் இருபத்தைந்து வருஷங்களாக இருந்திருக்கிறேன். பிறகு முப்பதாண்டு காலமாகப் பொதுச் சேவையில் இருக்கிறேன்.

அதனால் தஞ்சைக்குரிய பேச்சு வழக்கு என்னிடம் சற்று மாறிப்போயிருக்கலாம்.

இருந்தாலும் ‘சொல்றானுவ… எம்பளத்தி ஒண்ணு.. எம்பளத்தி ரெண்டு’ என்று பேச ஆரம்பித்தாலே தஞ்சாவூர் என்று அடித்துச் சொல்லிவிடலாம்.

முன்னாடி இதற்காக ஒரு கதையைச் சொல்லுவோம்.

மதுரையிலிருந்து தஞ்சாவூர் வழியாகச் சென்னைக்கு ஒரு ரயில் போகிறது. அதில் வாழைப்பழத்தைக் கொண்டு போகிறார்கள்.

மதுரையில் “வாளப்பளத்தை ஏற்றிப்பிட்டேன்” என்கிறார்கள். திருச்சியில் “வாலப்பலம்” என்கிறார்கள்.

தஞ்சையில் “வாழைப் பழம்” என்கிறார்கள் சென்னையில் ‘வாயப்பயம்” என்று சொல்லி அதை அழுக வைத்துவிடுகிறார்கள்.

இதனைத் தமாஷாகச் சொல்வோம்.

நல்ல இசை, ரசனை, நளினமான விஷயங்கள், பேச்சில் மிகுந்த சாமர்த்தியம்,

இவற்றுடன் ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற நுட்பமான பல விஷயங்கள் தஞ்சையில் வளர்ந்ததற்குக் காரணம் அங்குள்ள செழிப்பு.

திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை பாக்குப் போட்டுக்கொண்டு, நடனம், இசை என்று நன்றாக அனுபவித்திருக்கிறார்கள்.

செழிப்பு காற்றிலும் இருந்தாலும் மனசிலும் அதே செழிப்பு இருக்கும் தானே!

பச்சைப் பசேலென்ற வயல், தண்ணீர், திம்மதியான விவசாயம்,

இதெல்லாம் அங்கு நிலவுகிற மனநிலைக்கு முக்கியக் காரணம்.

வரகப்பைய்யர் சந்து என்று தஞ்சாவூரில் இருக்கிற சந்தில் ஒரு வீட்டில் தியாகப்பிரும்மத்தின் வழிவந்தவர்கள் இருக்கிறார்கள்.

தியாகய்யர் வழிபட்ட ராமர் விக்கிரகத்தை இன்னும் அங்கு வைத்திருக்கிறார்கள்.

வருஷத்துக்கொரு தடவை இன்றும் அங்கு விழா நடக்கிறது.

சங்கிலக்காரர்களுக்கு இது ஒரு ஆறுதலான விஷயம்.

நிறைய இசை அறிஞர்கள், ந.பிச்சமூர்த்தி, குபரா, தி.ஜானகிராமன் போன்ற இலக்கியவாதிகள்,

கலைஞர் கருணாதிதி, மூப்பனார் போன்ற தலைவர்கள், ராமகோபாலன், சண்முகநாதன் போன்றவர்கள் எல்லோரும் தஞ்சைப் பக்கத்துக்காரர்கள்தானே!

இன்னும் தஞ்சாவூரைப் பொறுத்தவரை மற்ற நகரங்களை மாதிரி விரைவான மாற்றங்கள் இல்லாமல் பழைய அடையாளங்களிலிருந்து விடுபடாமல் இருக்கிறது.

தஞ்சையைப் பொறுத்தவரை பெரிய கோவிலைக் கட்டின ராஜராஜன் சிலை, கோவிலுக்கு வெளியே இருப்பது எனக்கு வேதனை தருகிற விஷயம்.

மத்தியில் பாரதீய ஜனதா அரசு அமைந்த பிறகு ராஜராஜன் சிலையை உள்ளே வைக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

முன்பு மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை.

இப்போது மத்திய அமைச்சர் ஆனந்தக்குமாரிடம் பேசினபோது சிலையை வைக்க விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

கோவிலைக் கட்டினவனுக்கு கோவிலுக்குள் இடமில்லை என்றால் என்ன நியாயம்?

இந்தச் சிலையை கோவிலுக்குள் வைக்க முடிகிறபோது தான் தஞ்சைக்காரன் என்கிற முறையில் நான் பெருமைப்பட முடியும்.

இது விரைவில் நிறைவேறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இப்போதும் தஞ்சாவூரைப் பற்றி நினைக்கும்போது மனசுக்குள் ஒருவித சந்தோஷம் பரவுவதை உணர முடியும்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கிடையில் ‘தஞ்சாவூர்’ என்கிற போர்டுடன் ஒரு பேருந்தைப் பார்க்கிறபோது உடம்பெல்லாம் குப்பென்று வியர்க்கிற மாதிரி ஒரு உணர்வு மேலிடும்.

எங்கே போனாலும் சொந்த மண் மீது தனிக் காதல்தான் இல்லையா?”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...