பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை பிரதமர் மோடி வரும் அக்.24ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளார்.
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்தமாதம் நடைபெற உள்ளது. மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதியும் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்குவதால் பீகாரின் அரசியல்களம் தற்போதே சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக, அக்டோபர் 24ம் தேதி பிரதமர் மோடி சமஸ்திபூரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதைத்தொடந்து ஒருவார இடைவெளியில் மீண்டும் அக்டோபர் 30ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். குறைந்தது 10 இடங்களில் பிரதமர் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. அவரைதொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி. நட்டா உள்ளிட்டோரும் அடுத்தடுத்து பரப்புரை மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், கடந்த அக்.14ஆம் தேதி 243 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தேசிய ஜனநாயக கூட்டணிவெளியிட்டது. அதன்படி நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், சிராக் பாஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சிக்கு 29, ஹெச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு நிறைவடைந்து, பரப்புரைக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், எதிர்முகாமான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி நிலவி வருகிறது. முழுமையான தொகுதி உடன்பாடு இதுவரை எட்டப்படாத நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக அறிவித்துவருகின்றன.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி கடந்த 17ஆம் தேதி 48 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. அதேபோல தேஜஸ்வி யாதவும் காங்கிரஸ் தலைவர்கள் இல்லாமல் தனது தாய், தந்தையுடன் சென்று தன்னிச்சையாக வேட்புமனு தாக்கல்செய்தார். இதனால், இப்போது வரை இந்தியா கூட்டணி கட்சிகளில் யாருக்கு எத்தனை தொகுதிகள், யாருக்கு எந்ததொகுதி என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நீடித்து வருகிறது.
முன்னதாக, இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) தனித்துபோட்டியிட உள்ளதாக நேற்று அறிவித்தது. பீகார் தேர்தலில் சிலதொகுதிகளில் போட்டியிட ஜேஎம்எம் ஆர்வமாக இருந்ததாகவும், அதுகுறித்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் தெரிவித்த போது அதற்கு அவர் உடன்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கபட்டது. இந்தியா கூட்டணியில் உள்ள இந்தவிரிசல்கள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஜேஎம்எம் முடிவை மாற்ற காங்கிரஸ் முயற்சிசெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |