ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் வீரமணி தொடர்பான போக்சோவழக்கில் எந்தவித அரசியல் தலையீடும், அதிகாரம் அல்லது செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமும் இன்றி விசாரணை நடைபெற வேண்டும் என்று பாஜக முன்னாள் மகளிர் தேசிய அணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், விசாரணையின் போது அடுத்தடுத்து வெளியாகி வருவதாக கூறப்படும் தகவல்களும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுமிகளின் சூழ்நிலையை பயன்படுத்தி தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக, குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கான வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போக்சோ வழக்கின் விசாரணையை முடிவுக்கு கொண்டு வர காவல்துறை ஏற்கெனவே முயன்றதாக கூறப்படும் நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பின்னர் விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாகவும் வானதி தெரிவித்துள்ளார்.
மேலும், தீவிரமான குற்றச்சாட்டுகள் தொடர்புடைய இந்த வழக்கில் அனைத்து உண்மைகளும் முழுமையாக வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுடன் மட்டுமின்றி, சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் அவர்களுக்கு உதவியவர்கள், ஆதாரங்களை மறைக்க அல்லது விசாரணையை திசைதிருப்ப முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் என யாரேனும் இருந்தால், அவர்களின் பங்களிப்பும் சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அதேபோல், முதல் தகவல் அறிக்கையில் பெயர் இடம்பெறாமல் இருப்பதற்காக பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருப்பதும் கவலைக்குரியது என வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு முழுமையான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், அவர்கள் எந்தவித அச்சமும் இன்றி விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் திமுகவும் ஆளுங்கட்சியான தவெகவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு விசாரணை தாமதமடையக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தலையீடு இல்லாமலும், அதிகாரம் அல்லது செல்வாக்கின் அடிப்படையில் எந்தவித பாரபட்சமும் ஏற்படாமலும் வழக்கு நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
விசாரணையை தமிழக அரசு விரைவாகவும் வெளிப்படையாகவும் மேற்கொண்டு, வழக்கின் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |