கோழைகளின் பூமியாக தமிழகம் மாற்றப்பட்டு வருகிறது தமிழ்நாட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான திரு. கமல்ஹாசன் அவர்கள் நடித்து 25ம் தேதி அன்று வெளிவருவதாக இருந்த விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம் மதத்தினரை அவமதித்திருப்பதாக கூறி அப்படத்தை திரையிட 15 நாட்களுக்கு தமிழக அரசு தடை ஆணை பிறப்பித்துள்ளது.

திரு.கமல்ஹாசன் அவர்கள் குழந்தை பருவத்தில் இருந்து நடிக்க ஆரம்பித்து ஏறக்குறைய 50 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் வெற்றிகரமான ஒர் கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார்கள். தனது திரைப்படங்களில் மத ஒற்றுமையை வலியுறுத்தியும் சமூக நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தியும் பல திரைப்படங்களை உருவாக்கியுள்ளார்கள். தனிப்பட்ட முறையில் திரு. கமல்ஹாசன் அவர்கள் இந்துவாக இருந்தாலும் தனது பொதுவாழ்க்கையில் இந்து நம்பிக்கையின் மீது தனக்கு பிடிப்பு இல்லை என்பதை பலமுறை தன்னுடைய செயல்பாடுகள் மூலமாகவும் கருத்துக்கள் மூலமாகவும் காட்டியுள்ளார்கள்.

கமல்ஹாசனின் இக்கருத்துக்கள் இந்து மத நம்பிக்கை கொண்டவர்களின் மனதை பலமுறை புண்படுத்தியிருக்கிறது. இருப்பினும் கருத்து சுதந்திரத்தை மனதில் கொண்டு இந்துக்கள் மௌனமாக இருந்துள்ளார்கள். இத்தகு கமலஹாசன் அவர்கள் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் முஸ்லீம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்கின்ற குற்றச்சாட்டு வந்த போது ஒருபுறம் வியப்பாகவும் மறுபுறம் வேதனை நிறைந்ததாகவும் இருந்தது.

திரு.கமலஹாசன் அவர்கள் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான தணிக்கைச்சான்றிதழ் மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் அரசாங்கத்தால் தான்; வழங்கப்பட்டது. அப்படத்தில் மததுவேச ரீதியான கருத்துக்கள் சொல்லப்பட்டு அதற்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் அந்தத் தவறை செய்தவர்களில் அந்தத் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களை விட அதற்கு சான்றிதழ் அளித்த மத்திய காங்கிரஸ் அரசாங்கம் தான் குற்றவாளியாகக் கருதப்பட முடியும்.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்த மட்டில் எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் புண்படும் வகையில் எதுவும் நடக்கக்கூடாது எல்லா மத உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும என்பதில் மிகத் தெளிவாக உள்ளோம். ஆனால் கடந்த சில மாதங்களாக  சினிமாத்துறையைச் சார்ந்தவர்களும் பத்திரிக்கைத் துறையைச் சார்ந்தவர்களும் சில தவறான நிகழ்வுகள் நடப்பதை உள்ளது உள்ளபடி சுட்டிக்காட்டும் உரிமைகள் இல்லாதது போன்றும் சுட்டிக்காட்டினால் தாங்;கள் தம் தொழிலை நடத்த முடியாது என்றும் தொழிலை தொடர முடியாது என்பதும் போன்ற சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.

கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் இத்தகு அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் தாக்குதல்களும் தொடர்ந்தால் தமிழகம் தானாக சுடுகாடாக மாறிவிடும் என்பதை கருத்துச்சுதந்திரத்தை விரும்பும் அனைத்து மதத்தைச் சாhந்தவர்களும் உணர்கிறார்கள் இருந்தாலும் தங்கள் மீது நேரடி தாக்குதல்களும் சொத்து அழிவுகளும் தாங்கள் தொழில் செய்ய இயலாது என்ற நிலையும் வந்துவிடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக தங்கள் கடமையை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கருத்துச் சுதந்திர கழுத்தறுப்பிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய அரசியல் கட்சிகளும் பொது சிந்தனையாளர்களும் மௌனம் காத்துக் கொண்டிருப்பது கோழைகளின் பூமியாக தமிழகம் மாற்றப்பட்டு வருகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஒரு மதத்தை சார்ந்த சில தீவிரவாதிகளின் கருத்துக்களை அம்மதத்தைச் சார்ந்த அனைத்து மக்கள் கருத்தாக திரித்துப் பார்க்கப்படும் பார்வைக்கு ஒரு முற்றுப்புள்ளி; வைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையின் காரணமாக நடிகர் விஜய் அவர்கள் நடித்த "துப்பாக்கி" திரைப்படம் திரையிடப்படுவதில் தடங்கல் ஏற்பட்டு மிகுந்த சிரமங்களுக்குப் பின் அத்திரைபடம் திரையிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்ட "இன்னசன்ஸ் ஆப் முஸ்லீம்" என்ற குறும்படத்தை தடைசெய்யக் கூறி தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெரும் போராட்டம் நடைபெற்றது. அப்படத்தை தயாரித்ததிலோ வெளியிட்டதிலோ துளி கூட சம்பந்தமல்லாத தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் வகையிலும் சென்னையின் பிரதான பகுதிகளில் வாழும் மக்கள் பாதிகக்கப்படும் வகையிலும்; போராட்டங்கள் நடைபெற்றன. இதனை கண்டித்து இருக்க வேண்டிய பொது நல ஆர்வலர்களும் சர்வ கட்சி தலைவர்களும் கையை பிசைந்து ஏதும் செய்ய முடியாத பேச முடியாத மௌனிகளாய் நின்றார்கள்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட "விஸ்வரூபம்"; கேரள மாநிலத்தில் எல்லா பகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக நம் இஸ்லாமிய சொந்தங்கள் அதிகமாக வாழும் மலப்புரம் மாவட்டத்திலும் ஆந்திரா மாநிலத்தின் ஹைதராபாத்திலும் மேலும் நமது நாட்டின் எல்லா மாநிலங்களிலும் திரையிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இப்படம் முஸ்லீம் நாடான மலேசியாவிலும் திரையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஓர் திரைப்படம் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டு அனைத்து மக்களாலும் பார்க்கப்படுகிறது என்றால் அத்திரைப்படத்தில் குற்றம் சொல்லும் அளவிற்கு குறைகள் இருந்திருக்க முடியாது.

தமிழனால் தயாரிக்கப்பட்டு தமிழனால் நடிக்கப்பட்டு தமிழ்க்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஓர் தமிழ்த்திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு உலகமக்களால் பார்க்கப்படுகிறது. ஆனால் அத்திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுக்காக தமிழக மண்ணில் திரையிட முடியாத சூழ்நிலை உருவாகி இருப்பது தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் மாபெரும் அவமானம் ஆகும்.

இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லீம் தலைவர்களோடும் பல அரசியல் கட்சிகளைச் சார்ந்த முஸ்லீம் தலைவர்களோடும் தமிழக காங்கிரஸ் கட்சியை சார்ந்த திரு. இதயதுல்லா அவர்களும் கலந்து கொண்டு தன் எதிர்பை தெரிவித்துள்ளார்.

தன் எதிர்ப்பை தெரிவித்து மட்டுமல்லாமல் இதனை திரையிட்டால் ….. அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டல் விடும் அளவிற்கு இறங்கியுள்ளார். திரு. இதயதுல்லா அவர்களின் மிரட்டல் அறிக்கைக்கு எந்த காங்கிரஸ் தலைவரும் மறுப்பு தெரிவிக்காததால் இதனை காங்கிரஸ் கருத்தாகவே மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆளும் தங்கள் அரசாங்கம்தான் இந்தத் திரைப்படத்திற்கு அனுமதி கொடுத்து வெளியிட்டிருக்கிறார்கள் எனும் போது ஏன் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது? அல்லது திரு.இதயத்துல்லா கருத்துக்கு தாங்கள் கட்சி உடன்படவில்லை என்றால் அதனை ஏன் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக மறுத்து அறிக்கை விடவில்லை என்பதற்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் கொடுத்தாக வேண்டும்.

தமிழகத்தில் தங்களது கருத்துக்களை தங்களது விருப்பப்படி மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதனை மீறி வெளியிடும் பத்திரிக்கை சினிமா இணையதளம் எதையும் அனுமதிக்க மாட்டோம்; மீறி வெளியிட்டால் அதனை எந்த நிலை எடுத்தும் தடுத்தே தீருவோம் என்ற தீவிரவாதத்தோடு செயல்படும் பயங்கரவாதிகளை முறியடிக்க வேண்டிய கடமை தமிழக அரசிற்கு உள்ளது.

எனவே தமிழக அரசாங்கம் இத்திரைப்படத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் எந்த அமைப்பைச்  சார்ந்த யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இத்  திரைப்படத்திற்கு 15 நாட்கள் போடப்பட்டுள்ள தடையை நீக்கி உடனே வெளியிட ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொன். இராதாகிருஷ்ணன் மாநில தலைவர்

Leave a Reply