ஹெச்.ராஜாவுக்கு ஆதரவு, சுப.உதயகுமாருடன் கருத்துமோதல், பாக்யராஜுடன் பணத்தகராறு என சமீபமாக அதிகம் பேசு பொருளாகி இருக்கும் இயக்குநரும் நடிகருமான விசுவிடம்  சமகால அரசியல் சூழல்குறித்து ஒரு நேர்காணல்.

‘‘மாணவி ஷோபி யாவின் செயலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘எல்லோருக்கும் தங்கள் கருத்தைச்சொல்ல உரிமை உள்ளது. ஆனால், அதை எங்கே சொல்கிறோம் என்பது முக்கியம். பிஜேபி-யை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உள்ளது. மேடை போட்டு முறையாக அனுமதிபெற்றுச் சொல்லுங்கள், தவறில்லை. விமானத்திலோ, விமான நிலையத்திலோ அதை சொல்வதற்கு யாருக்கும் உரிமைஇல்லை.’’

‘‘ஹெச்.ராஜாவை ஆதரிக்கிறீர்கள். பிரிவினை வாதத்தைத் தூண்டும் விதமாக அவர் கூறிய கருத்துகளை எல்லாம் தெரிந்து கொண்டுதான் அவரை ஆதரிக்கிறீர்களா?’’

‘‘அவர் இப்போது வரை என்னவெல்லாம் பேசியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. கோயில் சொத்துகளைக் கொள்ளையடிப் பவர்களைப் பற்றி அவர் பேசியதை பார்த்தே ஆதரிக்கிறேன். எங்கள்மதத்தின் கோயில் நிலங்களை மீட்பதற்காக ஹெச்.ராஜா பேசுகிறார். கோயில் நிலங்களில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. உடனடியாக இதை சரி செய்ய வேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையை இந்து பெரியவர்களிடம் கொடுத்துவிடுங்கள். அவர்கள் அதை சரியாக பார்த்து கொள்வார்கள்.’’

‘‘உங்களை இதுவரை ஒருபொது அடையாளத்துடன்தான் பார்த்து வந்திருக்கிறோம். இப்போது ‘இந்து’ என்கிற அடையாளத்தை நீங்கள் ஏற்கக்காரணம் என்ன?’’

‘‘நான் போகிற கோயில்களில் தவறு நடக்கிறதென்றால் அதைத் தட்டிக்கேட்காமல் எப்படி சும்மா இருப்பது? இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்ததற்கு என் குடும்ப பொறுப்புதான் காரணம். இப்போது அதையெல்லாம் முடித்து விட்டேன். மாதா, பிதா, குருவுக்கு அப்புறம் கடைசியில் தானே தெய்வம். இப்போது அந்த தெய்வத்தைப் பார்க்கிறேன்.’’

‘‘மதத்தின் பெயரால் இந்திய அளவில் நடக்கிற வன்முறைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘முதலில் எங்கள் கோயில் நிலங்களை எங்கள்கையில் கொடுங்கள். இந்த வன் முறை விஷயங்களை எல்லாம் பிறகு உட்கார்ந்து பேசிக் கொள்ளலாம்.’’

‘ரஜினியின் அரசியல் பிரவேசம்?’’

‘‘நல்ல மனசு உள்ளவர். திரைப்படங்களில் தனக்கு உள்ள மிகப் பெரிய மார்க்கெட்டை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார். மக்களுக்கு ஏதாவது பண்ண வேண்டுமென அவருக்குள் ஏற்பட்டிருக்கிற ஆன்மிக எண்ணம் தான் இதற்கு காரணம். ஆனால், என்ன நடக்கப் போகிறதென்று அவருக்கே தெரியாத போது எனக்கு எப்படித் தெரியும்?’’

‘‘தமிழகத்தில் நம்பிக்கைக்குரிய அரசியல்வாதியாக யாரைப் பார்க்கிறீர்கள்?’’

‘‘கட்சியாக பி.ஜே.பி-யை விரும்புகிறேன். தலைவராக டிடிவி.தினகரனை விரும்புகிறேன். அவர் முகத்தில் ஒருவசீகரத்தன்மை இருக்கிறது. பா.ம.க-வின் டாக்டர் ராமதாஸை விரும்புகிறேன். அவரின்கருத்தில் உள்ள ஆழம் என்னைக் கவர்கிறது.’’

‘‘தமிழகத்தில் தாமரை மலருமா?’’

‘‘மலரும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தேதீரும். ஆண்டவனே, அதைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை எனக்குக் கொடு. எனக்குக் கொடுக்காவிட்டாலும், என்னை கேள்வி கேட்கிறாரே… இந்த இளைஞருக்குக் கொடு!’’
 

– தமிழ்ப்பிரபா, படம்: தே.அசோக்குமார்

நன்றி ஜூனியர் விகடன்

Leave a Reply