27 ஜூன் 1897 அன்று கடையம் கிராமத்தில் 3 திருமணங்கள் சிறப்பாக நடைபெற்றன. தெரு அடைத்துப் பந்தல்போட்டு 4 நாள் விழாவாக மகாகவி பாரதி- செல்லம்மாள், பாரதியின் தங்கை லக்ஷ்மி- பாரதியின் அத்தை குப்பம்மாளின் இளைய மகன் கேதாரம், செல்லம்மாளின் அக்கா பார்வதி- பாரதியின் அத்தை குப்பம்மாளின் மூத்தமகன் விசுவநாதன் ஆகியோருக்கும் ஒரேநாளில் திருமணம் நடைபெற்றது.

122 ஆண்டுகளுக்குப் பின், 27 ஜீன் 2019 அன்று கடையம் கிராமம் மீண்டும் விழாக்கோலம் பூண்டிருந்தது. மகாகவி பாரதியார் செல்லம்மாள் 122 ஆவது திருமணவிழாவை முன்னிட்டு சேவாலயா ஏற்பாடு செய்திருந்த ஊர்வலம் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் .வந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பாரதியார் செல்லம்மாளின் திருவுருவப்படத்தை வைத்து, நடத்தப்பட்ட ஊர்வலத்தில் சத்திரம் பாரதி பள்ளி மாணவர்கள் 700 பேர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பாரதி கவிதைகளை இசைத்தபடியும், பாரதி கவிதை வரிகள் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடியும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மகாகவி பாரதியின் வழித் தோன்றல் திரு. ராஜ்குமார்பாரதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. இலகணேசன், கடையம் அன்னதான சத்திர கமிட்டியின் செயலர் திரு. அனந்தராமசேஷன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. டி. எஸ். வெங்கடரமணா, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பூஜ்யஸ்ரீஸ்வாமி ஓம்காரானந்தா ,மற்றும் இசைக்கவி ரமணன் அவர்கள் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கினர். திரு. இல. கணேசன் அவர்கள் தனது சிறப்புரையில், செல்லம்மாள் பாரதியின் வாழ்க்கையில் பராசக்தியாக விளங்கினார் என்று குறிப்பிட்டார். வாழ்ந்தகாலத்தில் பாரதிக்கு கடையத்தில் உரியமதிப்பு கிடைக்கவில்லை என்ற அவர், காலத்தைத் தாண்டி வாழ்ந்த கவிஞனைப் புரிந்துகொள்ளாத அந்தக்கால சமுதாயம் அறியாமல் செய்த பிழைகளுக்குப் பிராயச்சித்தமாக இப்போது அதே கடையத்தில் பாரதிசெல்லம்மாள் மணவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டார். இத்தகைய விழா மாணவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் என்றும் இப்போது இருக்கும் மாணவர்களிடையே பல பாரதிகள் உருவாகக்கூடும் என்றும் கூறினார்.

திரு. ராஜ்குமார் பாரதி அவர்கள் பாரதியின் “நின்னையே ரதியென்று நினக்கிறேனடி“ கவிதையை பாரதி போட்ட மெட்டிலேயே பாடி, வாழ்த்திப் பேசினார்.

முன்னதாக சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஓவியப் போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்பட்டன. 27 பள்ளிகளிலிருந்து சுமார் 500 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக சத்திரம் பாரதி மாணவியர் பாரதி பாடல்களுக்கு நடனம் ஆடினர்.

விழாவில் பங்கேற்ற 2000க்கும் மேற்பட்டோருக்கு திருமணவிருந்தும் அளிக்கப்பட்டது.

Tags:

Comments are closed.