மூன்றாவது அணிக்கு பா.ஜ., முயற்சிக்காது; தி.மு.க.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை அ.தி.மு.க., மேற்கொள்ள வேண்டும்’ என, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அவரது பேட்டி: சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவது போல், இந்துக்களுக்கும் கல்வி உதவித் தொகை; விவசாயிகளின் நிலங்கள், வாழ்வாதாரம், காவிரி, முல்லைப் பெரியாறு,

பாலாறு உரிமை மீட்பு; அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், ஆன்-லைன் வர்த்தகம், தேவையற்ற நேரத்தில் ஏற்றுமதி என, செயற்கையாக உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு; கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும்; ஊழலற்ற ஆட்சி, நிர்வாகம் ஆகிய, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், கடந்த நவ., 19 முதல், தமிழகம் முழுவதும், 31 மாவட்டங்கள், 180 சட்டசபை தொகுதிகள் வழியாக, ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் சுற்றுப் பயணம் செய்து, மூன்று லட்சம் மக்களை சந்தித்து தாமரை யாத்திரை நடத்தியுள்ளோம். இந்த யாத்திரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. முழுக்க முஸ்லிம்களே இருக்கும் கிராமங்களில் கூட, மக்கள் எங்களை வரவேற்றனர். வரும் 29ம் தேதி (நாளை), சென்னையில் யாத்திரை முடிகிறது. அன்று, மீனம்பாக்கத்தில் நடத்தப்படும் பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தில், தலைவர் நிதின் கட்காரி பங்கேற்கிறார்.

தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதை தடுக்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை அரசின் துணிச்சலை பார்க்கும் போது, இந்திய அரசுக்கும், இலங்கைக்கும் மறைமுக ஒப்பந்தம் ஏதேனும் உள்ளதோ என தோன்றுகிறது. தமிழக மக்களுக்கு துரோகம் செய்த தி.மு.க., அரசை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும். ஆனால், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்காலம் பற்றித்தான் யோசிக்கின்றனவே தவிர, மக்களை பற்றி சிந்திக்கவில்லை. தமிழக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை, அ.தி.மு.க., செய்ய வேண்டும். மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடாது. கூட்டணி பற்றி, வரும் 1ம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

{qtube vid:=dBt9JfZ1nT8}

Tags:

Leave a Reply