மகாராஷ்டிர மாநில பாஜக சட்டமன்ற கட்சித்தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் நாளை நடைபெறுகிறது.

மகாராஷ்டிர சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியானது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 122 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக 41 உறுப்பினர்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் அறிவித்துள்ளது.

என்றாலும் தேர்தலுக்கு முன் கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா கட்சி ஆதரவுடன் புதிய அரசு அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் காட்சே மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் விதான் பவனில் செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு கூடி தங்கள் தலைவரை தேர்வு செய்வார்கள். இதையடுத்து மாநில ஆளுநர் வித்யா சாகர் ராவை, பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோருவார். ஆளுநர் விரும்பினால் அவையில் எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்" என்றார்.

Leave a Reply