உஜ்ஜயினி நகரை ஆண்டு வந்த மன்னன் போஜராஜன் என்பவன் தனது அரச சபையில் இருந்த கவிஞர் காளிதாசன். அவ்வபோது அரச சபையில் போஜராஜன் ஏதாவது கவிதைப் போல ஒன்றை கூறி அதற்கு சரியான அர்த்தம் கேட்பது உண்டு. அதற்கு சரியான விடை அளிப்பவர்களுக்கு அவன் நிறைய பரிசுகளை வழங்குவான்.

ஒருநாள் அவன் மாறு வேடத்தில் நகர் வலம் வந்து கொண்டு இருந்தபோது ஒரு குளத்தில் தாமரை மலரை பறித்துக் கொண்டு சென்று கொண்டு இருந்த பண்டிதர் தனக்குத் தானே ' புஷ்பத்தில் புஷ்பம் பூத்து இருந்தாலும், அதனால் அதைப் பார்க்க முடியவில்லையே' எனக் கூறிக் கொண்டே சென்றார். அந்த பண்டிதர் கூறியதின் அர்த்தம் மன்னனுக்கு விளங்கவில்லை. மண்டை குடைந்தது….

அவர் எதை நினைத்து அப்படிக் கூறி இருப்பார் என எத்தனை யோசனை செய்தும் அவருக்கு பொருள் விளங்கவில்லை. ஆகவே அந்த மன்னன் அரச சபையில் வந்து அந்த பண்டிதர் கூறிய வார்த்தையைக் கூறி விட்டு அதன் அர்த்தத்தைக் கூறுபவர்களுக்கு நிறைய சன்மானம் தருவதாகக் கூறினார்.

அங்கிருந்த அமைச்சர்கள் அதற்கான அர்த்தத்தை பலவாறாகக் கூறினாலும் அவை சரியான விளக்கமாக அரசனால் ஏற்க முடியவில்லை. அப்போது வெளியில் சென்று விட்டு திரும்பிய காளிதாசனை அதற்கான அர்த்தத்தைக் கூறுமாறு கேட்க அவரும் சற்றும் தயங்காமல் ' அழகிய பெண்களின் முகமே தாமரை மலரைப் போன்றது. அதில் உள்ள இரண்டு கண்களும் நீலோத்பல புஷ்பங்களைப் போன்றது. தாமரை மலர் போன்ற முகத்தில் உள்ள அழகிய கண்களான நீலோத்பல புஷ்பத்தினால் முகத்தின் அழகை நேரடியாகப் பார்க்க முடியவில்லையே' என்பதே அதன் அர்த்தம் என்று கூற அரசனும் அவையில் இருந்தவர்களும் கைதட்டி ஆர்பரித்தார்கள்.

அது முதல் போஜாராஜனுக்கு காளிதாசன் கவிதைகள் மீதான ஈடுபாடும் அவரின் எதிர்பார்ப்பும் அதிகமாக கூடியது. அடிக்கடி காளிதாசறாய் அழைத்து தன் மீதும், நாட்டு நடப்பின் மீதும் கவிதைப் பாடுமாறு கேட்டு அவர் பாடும் கவிதை நயத்தைக் கண்டு கழிப்பார். இப்படி நாட்கள் செல்கையில்

ஒருநாள் அரசன் நினைத்தான் 'காளிதாசன் என்ன கூறினாலும் நடந்து விடுகிறது என்கிறார்கள். அவர் இயற்றும் கவிதையோ அதை விட அதிக இனிமை வாய்ந்ததாக உள்ளது. இவர் என்னை புகழ்ந்து பாடுவதைக் கண்டால் நான் இறந்து விட்டால் இவர் எவ்வளவு அழகான கவிதை மூலம் என்னைப் பற்றிய தனது வேதனையை வெளிப்படுத்துவார் என்பதைக் கேட்க வேண்டும்' நான் இறந்தப் பிறகு அதை எப்படிக் கேட்பது என்பதினால் உயிருடன் உள்ளபோதே அவரை தன் மீதான இரங்கல் கவிதைப் பாடச் சொல்லிக் கேட்க வேண்டும்' என்று நினைத்தார்.

ஆகவே ஒருநாள் அவர் காளிதாசனை அழைத்து 'நான் இறந்து விட்டால் நான் இறந்த துக்கத்தை எப்படி கவிதை வடிவில் வெளிப்படுத்துவாய்' என்று கேட்க காளிதாசர் அதைப் பாட மறுத்து விட்டார். காரணம் காளிதாசருக்கு காளிதேவி கொடுத்து இருந்த வரம்தான். அவர் யாரையாவது குறித்து மனமுருகி கூறினால் அது நடந்து விடும். ஆகவே மன்னன் இறந்து விட்டதாக நினைத்து மனமுருகிப் பாடினால் அது நடந்து மன்னன் மரணம் அடைந்து விடுவார் என்ற பயத்தினால் அவர் மரண கீதத்தைப் கவிதையாகப் பாட மறுத்து விட்டார்.

அரசம் எவ்வளவோ கேட்டும் அதை பாட காளிதாசர் மறுத்ததினால் கோபமுற்ற மன்னன் இனி என் முகத்தில் விழிக்காதே, என்னைப் பொறுத்தவரை நீ என் முகத்தில் முழிக்கத் தகுதி இல்லாதவன். இங்கிருந்து வெளியே போய்விடு ' எனக் கூறி விட காளிதாசர் அங்கிருந்து சென்று விட்டார். இனி மன்னன் முகத்தில் விழிக்க வேண்டாம் என நினைத்தவர் வேறு ஊருக்குச் சென்று மாறுவேடத்தில் வசிக்கலானார். சில நாட்கள் கழிந்தன. மன்னனுடைய கோபம் மறைந்தது.

காளிதாசன் மீது நினைவு வரத் துவங்கியது. ' சேச்சே …என்ன காரியம் செய்து விட்டேன்…எதற்காக அனாவசியமாக கோபப்பட்டு அவரை துரத்தினேன். அவர் எங்கு, எந்த நிலையில் உள்ளாரோ?' என்று யோசனை செய்யத் துவங்கினாலும், காளிதாசன் தனது மரணத்தின் கவிதையை எப்படி பாடுவார் என்பதைக் கேட்கவும் ஆவலாகவே இருந்தது. காளிதாசன் இல்லாத அரச சபை அலுத்தது. ஆகவே காளிதாசனை மன்னன் தேடத் துவங்கினான். ஆனால் மாறுவேடத்தில் இருந்த காளிதாசனை கண்டு பிடிக்கவே முடியவில்லை.

ஒரு நாள் மாறு வேடத்தில் அலைந்து கொண்டு இருந்த மன்னன் எதேர்ச்சையாக ஒரு இறைச்சிக் கடையில் ஒரு சன்யாசி போல இருந்தவர் இறைச்சியின் விலையைக் கேட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டார். ஒரு சன்யாசி இறைச்சியின் விலையைக் கேட்கிறாரே என ஆச்சர்யப்பட்டு அவர் அருகில் சென்று ' ஸ்வாமி உங்களைப் போன்றவர்கள் இறைச்சியை சாப்பிடலாமா' என்று பவ்யமாகக் கேட்க, சன்யாசி கோலத்தில் மாறு வேடத்தில் இருந்த காளிதாசனோ 'என்ன செய்வது, என்னை இந்த ஊர் அரசன் பார்க்க விரும்பவில்லை. ஆகவே இப்படி மாறு வேடத்தில் சுற்றித் திரிய வேண்டி உள்ளது. இறைச்சியை சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது ஐயா' என்று கூற அரசனுக்கு பொறி தட்டியது.

'நான் இவரைப் பார்க்க விரும்பவில்லையா…என்ன கூறுகிறார் எந்த சன்யாசி …யாராக இருக்கும் எவர்…எவருக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?. நானோ மாறு வேடத்தில் இருக்கிறேன். எவரிடம் அதைப் பற்றி எப்படிக் கேட்பது ' என்று நினைத்தவாறே மீண்டும் கேட்டார் ' எந்த அரசன் உங்களைக் காண விரும்ப மாட்டார் ? சன்யாசியைக் காண விரும்பாத மன்னன் மூடனாகத்தானே இருப்பான்' என்று வேண்டும் என்றே கூறினார்.

தன் முன் நிற்பது மாறு வேடத்தில் உள்ள மன்னனே என்பதை அறியாமல் 'அட … நீங்கள் வேறு, அரசன் மூடன் அல்ல அப்பனே, மிக்க புத்திசாலி . ஆனால் என்னைப் போன்ற கவிஞர்கள்தான் அவருடைய புத்திசாலித்தனத்தால் அவதிப்பட வேண்டி உள்ளது' என்றார் மாறு வேடத்தில் இருந்த காளிதாசர். ' அப்படி என்ன பெரிய தலைவலியை உங்களுக்கு அவர் கொடுத்துவிட்டார்'? என்று மன்னன் கேட்க காளிதாசரும் ' அதை ஏன் கேட்கிறீர்கள்…அவர் இறந்துவிட்டதாக நினைத்து அவர் மீது இரங்கல் கவிதைப் பாடிக் காட்டுமாறு கேட்டு தொந்தரவு செய்ய அது முடியாது என்றவுடன் என்னை அவர் மூஞ்சியில் விழாதே என அனுப்பிவிட்டார்' என்றார்.

அரசருக்குக் புரிந்து விட்டது, சந்நியாசி கோலத்தில் உள்ளவர் காளிதாசரே என்று. ஆனால் தான் யார் என்பதை வெளிபடுத்தினால் காரியம் வீணாகி விடுமே என நினைத்தவர் வேண்டும் என்றே பெரியதாக சிரித்தார். அவர் சிரித்ததைக் கண்ட காளிதாசர் 'ஐயா, நான் என்ன நகைச்சுவையாகக் கூறி விட்டேன் என்பதற்காக இப்படி சிரிக்கிறீர்கள்?' என்று கேட்க மாறு வேடத்தில் இருந்த மன்னர் கூறினார் ' ஸ்வாமி … நீங்கள்தான் இன்னும் அந்த மன்னனை மெச்சிக் கொண்டு இருக்க வேண்டும். அந்த மன்னன் இறந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இது கூடத் தெரியாமல் இப்படி பயந்து கொண்டு வாழ்கிறீர்களே' என்று கூறியதுதான் தாமதம் காளிதாசர் கண்களில் குளம் குளமாக கண்ணீர் வழிந்ததது.

அந்த மன்னனை நினைத்து ஒரு இரங்கல் கவிதையை அங்கேயே பாடத் துவங்கினார். அதை எதிர்பார்த்தே காத்திருந்த மன்னனோ ஆனந்தமாக அதைக் கேட்டுக் கொண்டு இருக்க அந்தக் கவிதையை காளிதாசர் பாடி முடித்ததும் அப்படியே இறந்து விழுந்தார். அவர் வேஷமும் கலைந்து விழ மன்னனைக் கண்ட காளிதாசர் ' அய்யோ ..மோசம் செய்து விட்டீர்களே மன்னா….நான் எதற்கு பயந்தேனோ அது அல்லவா நடந்து விட்டது. என்னை மாறு வேடத்தில் வந்து நீங்கள் இறந்து விட்டதற்கான இரங்கல் கவிதைப் பாட வைத்து அதை நான் பாடியதால் இறந்து விட்டீர்களே ''என வெகுவாக அழுது புலம்பி அவரை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த ஆலயத்துக்குப் போய் சரஸ்வதி தேவி மீது துதி பாடத் துவங்கினார் .

சரஸ்வதி தேவியும் அவர் முன் தோன்றி 'உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள். அவரோ தனது நண்பரான மன்னனின் உயிர் மீண்டும் திரும்ப வர வேண்டும் என்று கேட்க அவளோ தன்னால் அதை தர முடியாது எனவும், வேண்டுமானால் அவருக்கு இரண்டு நாள் உயிர் பிச்சை கொடுப்பதாகக் கூறி இறந்த மன்னரை உயிர் எழச் செய்தாள்.

உயிர் பிழைத்து எழுந்த மன்னனும் தான் கேட்க நினைத்ததை கேட்டு விட்ட மகிழ்ச்சியில், காளிதாசனை கட்டி அணைத்தார். '"காளிதாசா"…..இனி என் உயிர் போனாலும் பரவாய் இல்லை. உன் கவிதைக் கேட்டப் பின் அதற்கு மேல் எதற்காக உயிர் வாழ வேண்டும். ஆனால் உயிர் பிரிவதற்குள் இருவருமாக சேர்ந்து ஏதாவது நல்ல காரியத்தை செய்து முடித்து விடுவோம்' என்று கூற அதை ஏற்றுக் கொண்ட காளிதாசரும் அவரும் சேர்ந்து ஸ்லோகங்கலாகவும், கவிதைகளாகவும் ராமாயணத்தைப் பாடி முடித்தார்கள். அதையே 'போஜ சம்பூ ராமாயணம்' என்று கூறுகிறார்கள். அதைப் பாடி முடித்ததும் மன்னான் மீண்டும் மரணம் அடைந்து விட்டாராம்.

நீதி: நாம் இந்த ஜென்மத்தில் எத்தனை நேரம் வாழுவோமோ அதற்குள் நாம் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் நல்ல காரியத்துக்காகவே செய்து முடித்து விட வேண்டும்.

காளிதாசரின், மகாகவி, காளி , காளிதாசன் பாடல் ,மகாகவி காளிதாசர், கவிதை , காளிதாஸ், காளிதாசனின் கதை,

நன்றி சாந்திப்பிரியா 

One response to “போஜ சம்பூ ராமாயணம் பிறந்த கதை”

Leave a Reply