'பசு கொல்லப்பட்டது' என்ற வதந்தியை அடுத்து, உத்திர பிரதேசத்தில் நடந்த படுகொலை வன்மையாக கண்டிக்கபடவேண்டியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், இதை ஒரு காரணமாக முன்வைத்து, மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது என்று இடது சாரி இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், சில அடிப்படைவாத இயக்கங்களும், பல ஊடகங்களும் பொய்யான தகவலை பரப்பி வருவது கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட.

பசு வதை தடை என்பதை மாட்டிறைச்சி தடை என்று பொதுவானதாக்கி, பல சமுதாயத்தினரிடையே குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்த நினைக்கின்றன சில தீய சக்திகள். பாரதிய ஜனதா கட்சியின் ஆதாரகொள்கைகளில் ஒன்று பசுவதை தடை சட்டம்.ஹிந்துக்கள் தாயாக, புனிதமாக கருதக்கூடிய பசுவை காப்பது என்பது இன்று நேற்றல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக நம் பாரத நாட்டில் இருக்க கூடிய நம்பிக்கைகை மட்டுமல்ல சட்டமும் கூட என்பதை இந்த ஹிந்து விரோதிகள், துரோகிகள் உணர வேண்டும்.

முகலாயர்கள் நம் நாட்டின் மீது படையெடுக்கும் வரை பசு வதை என்பது அறியப்படாத ஒன்று. ஆனால் 1520 ம் வருடங்களிலிருந்து கூட அதாவது பாபர், ஹுமாயுன்,அக்பர், ஜெஹாங்கிர் போன்ற முகலாயர்கள் ஆட்சி நடந்த காலங்களிலும் கூட பசு வதை தடை சட்டமானது இருந்தது வரலாற்று உண்மை.

அவுரங்கசீப் ஆட்சியில் மட்டுமே இந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது.அதன் பிறகு வந்த பல ஆட்சியாளர்களின் காலங்களில் கூட பசுவதை தடை சட்டம் இருந்தது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் ஊடுருவ துவங்கிய பின் தான் பசு வதை அதிக அளவில் நடைபெற்றது. மாட்டிறைச்சியை அதிக அளவில் விரும்பிய ஆங்கிலேயர்கள், பசுவதையை செய்யுமாறு பல சமுதாயத்தினரை தூண்டி விட்டதே உண்மை.

1853ம் ஆண்டு, ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்தப்பட்ட நம் சிப்பாய்களுக்கு, புதிய ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டபோது, அந்த துப்பாக்கிகளில் வெடிமருந்தை நிரப்பி தோட்டாக்களை துப்பாக்கிகளின் உள்ளே செலுத்தும் குண்டு பொதியுரையை பற்களால் கடித்தே திறந்து செலுத்த வேண்டியிருந்தது. அந்த பொதியுரையானது இஸ்லாமியர்கள் புனிதமற்றது என்று கருதுகிற பன்றிகளின் சதைகளாலும்,ஹிந்துக்கள் புனிதமென்று கருதிய பசுவின் சதைகளாலும் செய்யப்பட்டது என்று அறிந்து மிகபெரிய அளவில் சிப்பாய்களால் கலவரம் நடைபெற்றது என்பது வரலாற்று சான்று.

மேலும் சுதந்திர போராட்டத்தின் போது அதிக அளவில் பசுவதைக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தியடிகள் 1927ல் "என்னை பொறுத்தவரை, சுயராஜ்யத்தை அடைவதற்காக கூட, பசுவை பாதுகாக்கும் எனது கொள்கையை விட்டு கொடுக்க மாட்டேன். நான் பசுவை வணங்குகிறேன்.அதை பாதுகாக்க இந்த உலகத்தையே வேண்டுமானாலும் எதிர்ப்பேன். ஹிந்துமதத்தின் ஹிருதயமே பசு பாதுகாப்பு தான். கோடிக்கணக்கான இந்தியர்களின் தாய் பசு தான்"

என்று சொன்னதை காங்கிரஸ் கட்சியினர் மறந்து விட்டனரா அல்லது மறைத்து விட்டனரா? நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பசுவதை சட்டம் குறித்த விவாதங்களில், அரசமைப்புச் சட்ட வழிகாட்டும் கோட்பாடுகளின் படி மாநில அரசுகள் பசுவதை தடை சட்டம் குறித்து தங்கள் மாநிலங்களில் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், மொத்தமுள்ள 36 மாநிலங்களில் (29 மாநிலங்கள்+7 யூனியன் பிரதேசங்கள்) தமிழகம் உட்பட , 29 மாநிலங்களில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது.

குறிப்பாக டில்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், உத்திரபிரதேசம்,போன்ற மாநிலங்களில் பசு, எருது, காளைகள் அனைத்தும் கொள்ளப்படக்கூடாது என்ற சட்டம் பல ஆண்டுகளாக அமலில் உள்ளது. பாஜக அரசுகள் வருவதற்கு முன்பிருந்தே இவை பின்பற்றபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், மகாராஷ்டிராவில் கூட ஏற்கனவே இருந்த பசுவதை சட்டத்தில், எருதுகள் மற்றும் காளைகளையும் சேர்க்கப்பட்டது என்பதே உண்மை.

ஒவ்வொரு மாநிலங்களில் இந்த சட்டங்கள் வேறுபட்டாலும், அதிக வயதான பசுக்களை இறைச்சியாக மட்டுமே விதி விலக்குகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால், பல மாநிலங்களில் சட்ட விரோதமாக பசுக்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுவதும், விற்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. கேரளா, அருணாச்சலபிரதேசம், மேகாலயா,மிசோரம்,நாகாலாந்து, திரிபுரா,லட்ச தீவுகள் போன்ற மாநிலங்களில் மட்டுமே பசுவதை சட்டம் இல்லை

. பசு வதை தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்று, இது வரை பல பொது நல வழக்குகள் உச்ச்சநீதிமன்றதில் தொடுக்கப்பட்ட போதிலும், 3,5,7 நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் பசுவதை தடை சட்டத்தை நீக்க கூடாது என்றும்,பசுவை புனிதமாக கருதும் பெரும்பான்மை சமுதாயத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து பல கால கட்டங்களில் வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், பாஜக, இஸ்லாமிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிராக மாட்டிறைச்சியை தடை செய்ய வற்புறுத்துவதாக ஒரு வதந்தியை, விஷம பிரசாரத்தை செய்து வருகின்றன எதிர் கட்சிகள். பசு வதை என்று சொல்லாமல், மாட்டிறைச்சி என்று சொல்வதன் மூலம் இஸ்லாமியர்களின், கிறிஸ்துவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துவதன் மூலம், பல்வேறு சமுதாயத்தினரிடையே பிளவை ஏற்படுத்தும் தீய சக்திகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

இஸ்லாமியர்கள் தீங்கானது, புனிதமற்றது என்று சொல்லப்படுகின்ற பன்றி இறைச்சி இந்திய அரசின் ஏர்-இந்தியா விமானங்களில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதை நாம் எதிர்க்கவில்லை. அதே போல் அரசு அலுவலகங்களில் 95 விழுக்காடுகளுக்கும் அதிகமாக ஹிந்துக்கள் பணிபுரிந்தாலும், மத சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து கடவுள்களை வணங்குவது அல்லது ஹிந்து பண்டிகைகளை கொண்டாடுவது தவறு என்று சொல்பவர்கள் வக்கிர புத்தி கொண்டவர்கள் மட்டுமல்ல ஹிந்து துரோகிகள் என்பதுமே உண்மை.

இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவரும் மதத்திற்கு கட்டுப்படாவிட்டாலும்,இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை உணர்வதோடு, பசு வதை சட்டமாக இருந்தும், அதை எதிர்ப்பது, பசு வதையை ஆதரிப்பது தேச துரோகம் என்பதையும் உணர வேண்டும்.

உண்மையை மறைத்து, பொய்யுரைத்து, பசு வதை தடை என்பதை மாட்டிறைச்சி தடை என்று அவதூறு செய்து பல்வேறு சமுதாயத்தினரிடையே பதட்டத்தை  உருவாக்கும் கொடும் செயலை தீய சக்திகள் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். மக்களை குழப்புவதன் மூலம் இந்த நாட்டின் வளர்ச்சி பணிகளை தடுத்து நிறுத்தி விடலாம் என்ற எண்ணத்தோடு செயல்படும் தீய சக்திகளை மக்கள் புறக்கணிப்பார்கள். இந்த தீய சக்திகளுக்கு முடிவு எப்போது? என்பதை, காலம் பதில் சொல்லும். அதுவரை காத்திருப்போம்.

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply