கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார். தனது பிரசாரத்தின் போது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி. (சரக்கு, சேவை வரி) 5 சதவீதமாக குறைக்கபடும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு கோவைதொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத்தொகுதியில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த சிலநாள்களாக நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அமைப்புகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை காலை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

புலியகுளம் விநாயகர் கோயிலில் சுவாமிதரிசனம் செய்துவிட்டு, சிங்காநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி வார்டு எண் 37, 38, 39, 40, 53, 55 ஆகியவற்றில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து மாலையில் 58 முதல் 63 வரையிலான வார்டுகளில் சி.பி.ராதாகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்போது, இந்தத்தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்.

தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றால் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும். கோவையின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலைவசதிகள் செய்து கொடுக்கப்படும். கோவைக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படும்.

மேலும் 18 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி., 5 சதவீதமாகக் குறைக்கப்படும். மோடியின் முதல்கையெழுத்தே ஜி.எஸ்.டி. குறைப்புக்காகத்தான் இருக்கும். அதிமுக, பாஜக போன்றகட்சிகள் செய்த திட்டங்களை தாங்கள் செய்ததாக எதிர்க்கட்சிகள்கூறி வருகின்றன. மேலும், மாநிலத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொடுப்போம் என்றார்.

Leave a Reply