'வேற்றுமையில் ஒற்றுமை' காண்பதே இந்தியாவின் சிறப்பு. நமது நாகரிகத்தில் பலசமூகங்கள், தத்துவங்கள் அடங்கியுள்ளன. பெரும்பான்மையான மதங்களான இந்து, புத்தம், ஜெயின், சீக்கியத்தின் பிறப்பிடமாக இந் நாடு உள்ளது. இப்படிப்பட்ட இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட நாடா… இல்லையா என்ற புதுபிரச்னையை எழுப்புகின்றனர்.சகிப்புத் தன்மை தற்போது மறைந்து வருவதாக பிரசாரம் செய்கின்றனர். இதற்கு யார்பொறுப்பு?

60 ஆண்டுகளுக்கு மேலாக காங்., தான் அதிகாரத்தில் இருந்தது. தாய் நாட்டின் மரபில் மிகவும் ஆழப்பதிந்த சகிப்புத் தன்மை, பிரதமர் மோடியின் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் மறைந்து விடுமா? காங்கிரசின் ஓட்டு வங்கி கொள்கை காரணமாக, அதன் நீண்டகால ஆட்சியில் வகுப்புவாத வன்முறைகள் வாடிக்கையாக இருந்தன. இதுபோன்ற சம்பவங்கள் தேர்தல் நேரத்தில் அடிக்கடி அரங்கேறின.

தற்போது பொருளாதாரம் புத்துயிர் பெற்றுள்ளது. நாட்டிற்கு மதிப்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. சர்வதேச முதலீட்டார்கள் இந்தியாநோக்கி ஆர்வமாக வருகின்றனர். மோடி அரசுக்கு பெருகிவரும் ஆதரவை, இந்தியாவில் உள்ள சிலகட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை.

இவர்கள் சிறிய விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கு கின்றனர். மாநிலங்களின் இயலாமைக்கு மத்திய அரசின் மீது பழி சுமத்து கின்றனர். தாத்ரி சம்பவம் சமாஜ்வாடி ஆட்சிசெய்யும் உ.பி.,யில் நடந்தது. கல்புர்கி கொலை சம்பவம் கர்நாடகாவில் நடந்தது. தபோல்கர் படுகெலை மகாராஷ்டிராவில் காங்., ஆட்சியின்போது நடந்தது. ஆனால், எதிர்கட்சிகள் மத்திய அரசை பழிசொல்கின்றன.
 

எழுத்தாளர்கள் நிலை :

தவறு நடந்திருந்தால் விமர்சிக்கும் உரிமை எழுத்தாளர்களுக்கு உண்டு. சிலர் தாத்ரி, கல்புர்கி சம்வங்களை கண்டித்து தாங்கள்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிதர விரும்புகின்றனர். இதில் பிரச்னை இல்லை. ஆனால், இது போன்ற சம்பவங்கள் மத்தியில் பா.ஜ.க., ஆட்சி செய்வதால்தான் நடக்கிறது என்று இவர்கள் சொல்ல முற்படும்போது பிரச்னை எழுகிறது.போலி மதசார்பற்ற கூட்டணியினருடன் சில எழுத்தாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சேர்ந்து கொண்டு நாட்டில் குழப்பமான சூழலை உருவாக்க முயற்சி மேற்கொள் கின்றனர். காலத்தை வென்ற காஷ்மீர் இலக்கியங்கள், கவிதைகள் எரிக்கப்பட்ட போது, இவர்களது குரல் எங்கே போனது? காஷ்மீர் பண்டிட்கள் இனப்படுகொலை, அவர்களது நாக்கு அறுக்கப்பட்ட போது, இந்த 'அறிவுஜீவிகள்' வாய் திறக்கவில்லை. ஆனால் கல்புர்கி கொல்லப்பட்டதும், இந்து அடிப்படைவாத அமைப்புகளின் சதி என்றனர். மும்பை குண்டு வெடிப்பு நடந்த போது, பயங்கரவாதத்திற்கு மதம், நிறம் கிடையாது என்றனர். அதே நேரத்தில் ஏதாவது ஒருசம்பவம் இந்துக்கள் செய்தால், அதற்கு உடனடியாக மத, நிறச்சாயம் பூசிவிடுகின்றனர். தீய எண்ணத்துடன் கூடிய திட்டமிட்ட பிரசாரம் இது.

பல்வேறு ஊழல்கள் மூலம் பல லட்சம் கோடி மக்கள் வரிப் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட போது, இந்த 'அறிவுஜீவிகள்' எதுவும் செய்யவில்லை. சக எழுத்தாளர் தஸ்லிமா தாக்கப்பட்டு, பிரஸ்கிளப்பில் இருந்து வலுக்கட்டாயமாக அடிப்படை வாதிகளால் வெளியேற்றப்பட்ட போது ஏன் மவுனமாக இருந்தனர்.இந்திராவின் அவசர நிலையின் போதும் வாய் திறக்கவில்லை. 'எல்லாம் சுமுகமாக நடக்கிறது' என எமர் ஜென்சியை புகழ்ந்தனர். நீதிபதிகள் நீக்கம், எதிர் கட்சி தலைவர்கள் கைது, ஒரு தனிநபருக்காக அரசியல் சாசனம் திருத்தப்பட்ட சம்பவங்களின் போது, இவர்கள் மவுனமாக இருந்து ஆதரவுதந்தனர்.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு வலுக்கட்டாயமாக கருத் தடை செய்த போதும் இவர்கள் வாய் திறக்கவில்லை. 1984ல் நடந்த கலவரத்தில் சீக்கிய மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், அமைதிகாத்தனர். இந்த இனப்படுகொலையை 'ஆல மரம் விழும் போது, பூமியில் அதிர்வுகள் இருக்கத் தான் செய்யும்' என, காங்கிரஸ் தலைமை நியாயப்படுத்தியது.அப்போது எல்லாம் எதிர்ப்புதெரிவித்து, ஏதாவது ஒரு எழுத்தாளர் விருதை திருப்பி கொடுத்தாரா? அப்படியானால் மக்களின் உரிமைமீதான தாக்குதலை இவர்கள் ஆதரித்தனர் என்று தானே அர்த்தம்.
 

அவமதிக்கும் செயல்:

சில எழுத்தாளர்களால் மோடியின் எழுச்சியை ஜீரணிக்க முடிய வில்லை. பதவிக்கு வந்து ஆறுமாதத்தில் இவரை 'பாசிஸ்ட்' என பகிரங்கமாக விமர்சித்தனர். தற்போது சிலமன்னிக்க முடியாத சம்பவங்கள் சில மாநிலங்களில் நடந்ததும் (காங்கிரஸ் மற்றும் அதன் நண்பர்கள் ஆளும் மாநிலங்களில்), அதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு பிரதமர் மற்றும் நாட்டை அவமதிப்பு செய்கின்றனர். இதற்கு பின்னணியில் பீஹார் தேர்தல் தான்காரணமா?

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி., மற்றும் பா.ஜ., தொண்டர்களுக்கு எதிராக இடதுசாரி மார்க்சிஸ்ட் இயக்கங்கள் நிகழ்த்திய அட்டூழியங்களை மக்கள் மீண்டும் நினைத்து பார்க்கவேண்டும். கண்ணுார் மாவட்டத்தில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணனை பள்ளி அறையில் புகுந்து, பட்டப்பகலில் கொலைசெய்ததும் அடங்கும். நக்சலைட்கள் ஆயிரக்கணக்கான அப்பாவிமக்களை கொன்று, அதற்கு தாங்களே பொறுப்பு என பகிரங்கமாக அறிவித்தபோதும், இந்த 'அறிவுஜீவிகள்' குரல் எழுப்பவில்லை.இதுபோன்ற போலியான மதச்சார்பற்றவர்கள், இடது சாரி அறிவுஜீவிகள், பல்வேறு அமைப்புகள் மூலம் அரசின் உதவியை காங்., ஆட்சியில் பெற்றவர்கள் ஏற்படுத்தும் தடைகளை தகர்த்து, நாங்கள் வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து முன் எடுத்துச்செல்வோம்.
 

தலையிட முடியுமா:


மோசமான சம்பவங்கள் நடக்கும்போது எந்த பிரதமராவது கருத்து தெரிவித்தால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய அந்த மாநிலத்தின் இயலாமையை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கும்.

இது அரசியல் ரீதியாக ஏற்புடையதாக இருக்குமா? மாநில அரசால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாதபோது, மத்திய அரசு தலையிடவேண்டும். அப்படி மத்திய அரசு தலையிட்டால், உடனே மத்திய அரசு, 'பெடரல்' அமைப்பில் அத்துமீறி செயல்படுவதாக குற்றம் சுமத்துவர்.


கடந்த 2013ல் மகாராஷ்டிராவில் காங்., ஆட்சியின்போது தபோல்கர் கொலை செய்யப்பட்டார். அப்போது காங்கிரஸ்தான் மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சிசெய்தது. இதற்கு காங்கிரஸ் தானே பொறுப்பு? அந்தசமயத்தில் ஏதாவது ஒருஎழுத்தாளர் விருதை திருப்பித் தந்தாரா?எனவே, பா.ஜ., அரசு மற்றும் பிரதமருக்கு எதிரான தீய எண்ணம் கொண்ட பிரசாரத்துக்கு வேறு காரணங்கள் உள்ளன.

சுதந்திரம் பெற்றதில் இருந்து ஒரே மாதிரியான சிந்தனைக்கு ஊக்கம் தந்தனர். ஒருகுடும்பம் முன்னிலைப்படுத்தப் பட்டது. மற்ற எண்ணங்கள், கருத்துகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இப்படி ஒரேசிந்தனையை நம்பியவர்களால், தற்போதைய கருத்துகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.இந்தியமக்கள் புத்திசாலிகள்; வளர்ச்சியை விரும்புகின்றனர். வளர்ச்சியை திசைதிருப்பும் எந்த சம்பவம் நடப்பதையும் பிரதமர் மோடி விரும்பவில்லை. இதனை அவர் பலமுறை தெளிவுபட கூறியிருப்பதால், வளர்ச்சியை நோக்கிய பயணம் தொய்வின்றி தொடரும்.

 

நன்றி ; வெங்கையா நாயுடு; தினமலர்

Leave a Reply