வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளதால் வங்கிக் கடன்களுக்கான தேவை சரிவடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக வங்கிகளின் புதிய கடன்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து போயுள்ளது.

பாரத ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 2010 மார்ச் மாதத்திலிருந்து இதுவரை முக்கிய கடன்களுக்கான வட்டி

விகிதங்களை 3.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் வங்கிகள் வீடு, வாகன கடன் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. இதன் எதிரொலியாக ஏராளமானோர் வீடு மற்றும் வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

ஏப்ரல்-செப்டம்பர் மாத காலத்தில் இந்திய வங்கிகள் திரட்டிய டெபாசிட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3,22,298 கோடியாகும். அதே சமயம் வங்கிகள் ரூ.1.51 லட்சம் கோடி அளவிற்கே கடன் வழங்கியுள்ளன. இதன் அடிப்படையில் கடன்-டெபாசிட் விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 46.87 சதவீதமாக கடுமையாக சரிந்துள்ளது. இந்த விகிதம் நடப்பாண்டு தொடக்கத்தில் 100 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இம்மாதம் 25-ந் தேதி வெளியிட உள்ள பணக் கொள்கை ஆய்வறிக்கையில் பாரத ரிசர்வ் வங்கி 13-வது முறையாக ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் கடன்களுக்கான தேவை குறைந்துள்ளது. அதே சமயம் அதிக வட்டியால் வங்கிகள் ஈர்க்கும் டெபாசிட்டுகளின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் வங்கிகளின் வட்டிச் செலவினமும் உயர்ந்துள்ளது.

Leave a Reply