உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம்; நிலப்பரப்பில் ஏழாவது இடம்; அதிக இளைஞர்களின் எண்ணிக்கையில் முதலிடம்; உலகின் மிகப்பழமையான பராம்பரியம்; அறிவியல் உண்மை செறிந்த இலக்கியங்கள்; வற்றாத நதிகள்; ஏராளமான இயற்கை வளங்கள் என உலக நாடுகளின் உச்சத்தில் நம் நாடு இருந்து வருகிறது. 

இத்தனை வளங்கள் இருந்தும் ஊழல், லஞ்சம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், நேர்மையான அரசியல்வாதிகளுக்கு பற்றாக்குறை என பல்வேறு பிரச்னைகளால், நாடு பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த பின்னடைவிற்கு பல்வேறு காரணங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. இவற்றில், "வாரிசு'களை முன்னிறுத்தி அரசியல், தொழில்துறை ஆகியவை இயங்குவது முக்கியக் காரணமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு, பொருளாதார, சமூக வல்லுனர்களால் முன்வைக்கப்படுகிறது. 
 மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்தாலும், நம்மை விட பல மடங்கு சீனா முன்னேறியுள்ளது; அங்கு வாரிசு அரசியல் எப்போதே முடிவுக்கு வந்துவிட்டது; அங்கு, வாரிசு தலைவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அனுபவம் மற்றும் திறமைக்கே முதலிடம் தருகின்றனர். சீனாவின் வளர்ச்சிக்கு உண்மையான காரணம் இதுதான் என்பது அவர்கள் கருத்து. 
 உலகத்திலேயே, அதிகமான வாரிசு தலைவர்களை கொண்ட நாடாக, நம் நாடு உள்ளது. காஷ்மீரில் ஒமர் அப்துல்லா குடும்பத்தில் ஆரம்பித்து, மத்தியில் நேரு குடும்பத்தினரும், கர்நாடகாவில் தேவகவுடா, தமிழகத்தில் கருணநிதி குடும்பம் வரை வாரிசு அரசியல் பட்டியல் நீள்கிறது. தமிழகத்தில் வாரிசு அரசியல் என்று பேசினால், கோபப்படும் முதல்வர் கருணாநிதி வெளியிடும் அறிக்கைகளில், பல்வேறு மாநிலங்களில் நடக்கும் வாரிசு அரசியல் குறித்த பட்டியல் வெளிவந்துள்ளது. 
தமிழகத்தில் அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆருக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அந்தப் பிரச்னை வரவில்லை. ஆனால், அதன் பிறகு வந்த தலைவர்களில், கருணாநிதி- ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மூப்பனார் - வாசன், சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம், ராமதாஸ் - அன்புமணி என பட்டியல் நீள்கிறது. 
 பா.ஜ., - ம.தி.மு.க.,- கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வாரிசு அரசியலை முழுமையாக பின்தள்ளியுள்ளன. அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் வேறு பரிமாணத்தில் முளைத்துள்ளது. கட்சித் தலைவர்கள் வழியில் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் என சொற்ப எண்ணிக்கையிலேயே தங்கள் அடுத்த வாரிசுகளை பதவியில் இருக்கும்போதே உருவாக்கி வருகின்றனர். பி.எச்.பாண்டியன் - மனோஜ் பாண்டியன் உட்பட ஒருசிலர் மட்டுமே குறிப்பிடத்தக்க வாரிசுகளாக உள்ளனர். 
 "போபர்ஸ்' வழக்கிலிருந்து இன்று, "ஸ்பெக்ட்ரம்' வரை கூறப்பட்ட எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது பரபரப்பாக பேசப்படுவதோடு முடிந்து விடுகிறது; எவ்விதமான மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை; இதன் பின்னணியில் வாரிசு அரசியல் இருக்கிறது என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள். 
 இது குறித்து சமூக நல ஆர்வலர்கள் கூறியதாவது:நம் நாட்டில் வாரிசு அரசியல் என்பது மன்னர்கள் காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. ஆனால், அந்த காலத்திலேயே இவை, "சக்சஸ்' ஆகவில்லை. வாரிசு அரசியலை முன்னிறுத்திய மொகலாய மன்னர்களில், அக்பர், ஷாஜகான் போன்றவர்களை தவிர எத்தனை மன்னர்களின் பெயர்கள் நினைவில் நிற்கின்றனர்?ஒரு குடும்பத்தில் பிறந்த அனைவரும் ஒரே மாதிரியான சிந்தனை செய்வது கிடையாது. அவர்களது செயல்பாடுகள் ஒன்றாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது. ஆனால், சில அரசியல்வாதிகள் தங்கள் வாரிசுகளுக்கு பதவி வேண்டுமென்பதால், சில விஷயங்களை விட்டுக்கொடுப்பதால், ஊழலை தட்டி கேட்க முடியாமல் போய்விடுகிறது. தகுதியானவர்கள் புறக்கணிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. 
 தற்போதைக்கு, ஒரு நல்ல செய்தியாக குஜராத்தில் நரேந்திர மோடியும், பீகாரில் நிதிஷ்குமாரும் கடந்த ஐம்பதாண்டுகால தவறுகளை களையெடுத்து, மாநிலத்தை மேலே கொண்டு வர போராடி கொண்டிருக்கின்றனர்.இது போல, வாரிசுகளையே பதவியில் அமர்த்தும் அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அதன் மூலம், நாட்டிற்கு புதிய சிந்தனையுள்ள, நேர்மையான தலைமை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதனால், ஏற்படும் முன்னேற்றம் உலக நாடுகளின் உச்சத்தில் இந்தியாவை அமர வைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:

Leave a Reply