ஏக்நாத் மராட்டி மானிலத்தின் மிகப் பெரிய கவிஞரும் முனிவருமானவர் ஏக்நாத் என்பவர். 1533 ஆம் ஆண்டில் பிறந்த அந்த முனிவர் 1599 ஆம் ஆண்டு மறைந்தார் . பிராமணர் குலத்தில் பிறந்தவர், தனது பாட்டனாரிடம் இருந்து சாஸ்திரங்களைக் கற்றறிந்தார். அவர் விட்டலாவின் தீவீரமான பக்தர் ஆவார்.

 

ஏக்நாத் தான் ஒரு குருவிடம் சரண் அடைந்து அவரிடம் இருந்து மேலும் பல சாஸ்திரங்களைக் கற்றறிய வேண்டும் என்று விரும்பினார். ஒருநாள் அவருடைய கனவில் தோன்றிய பாண்டுரங்க விட்டலா அவரை ஜனார்த்தன ஸ்வாமி என்பவரிடம் சென்று சிஷ்யனாக இருந்து பணிவிடை செய்யுமாறு கூறினார். அதனால் வீட்டில் யாரிடமும் கூறாமல் தனது 12 வது வயதிலேயே ஆன்மீகத்தை தேடி வீட்டை விட்டு வெளியேறினார்.

தன் கனவில் விட்டலா கூறியது போலவே ஜனார்த்தன ஸ்வாமியைக் கண்டறிந்து, அவரை தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டு , அவருடனேயே தங்கி இருந்தவாறு சுமார் பன்னிரண்டு வருடங்கள் சேவை செய்தார். ஜனார்த்தன ஸ்வாமி தத்தாத்திரேயரை வணங்கி வந்தவர். அவரிடம் சென்ற ஏக்நாத் அவருடைய ஆஸ்ரமப் பணிகளுக்கு தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார்.

அப்படி இருக்கையில் தன்னுடைய சிஷ்யரின் உண்மையான குரு சேவையைக் கண்டு மனம் மகிழ்ந்த ஜனார்த்தன ஸ்வாமி தத்தாத்திரேயரிடம் அவர் தனது சிஷ்யர் ஏக்நாத்துக்கும் காட்சி தந்து அவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எப்போதும் போல ஏக்நாத் நதியில் குளித்து விட்டு வந்து கொண்டு இருந்தபோது வழியில் அவருக்கு தத்தாத்திரேயர் காட்சி தர அவரை கீழே விழுந்து வணங்கினார் ஏக்நாத்.

ஆஸ்ரமத்திற்கு வந்து சேர்ந்த ஏக்நாத்தைப் பார்த்த மட்டிலேயே ஜனார்த்தன ஸ்வாமிக்கும் நடந்த அந்த விஷயம் தெரிய வந்தது. ஏன் என்றால் அவர் மாபெரும் துறவி அல்லவா. உண்மையான ஆன்மீகத் துறவிகளுக்கு ஒருவரை பார்த்த மட்டிலேயே அவர்களுக்கு நடந்தது அனைத்தும் தெரிந்து விடும். ஏக்நாத் நடந்ததைக் கூறாமல் இருந்ததினால் அவரே அது பற்றி கூறட்டும் என ஜனார்த்தன ஸ்வாமி அது பற்றிக் கேட்காமல் இருந்துவிட்டார்.

இரண்டு நாட்கள் கழிந்தது ஏக்நாத் தான் தத்தாத்திரேயரை தரிசனம் செய்த விவரத்தை  ஏக்நாத் இன்னமும் தன் வாயால் கூறாததினால் அவரை அழைத்த ஜனார்த்தன ஸ்வாமி ' நீ தத்தாத்திரேயரின் தரிசனம் பெற்றதை என்னிடம் கூறவில்லையே. உண்மையான கடவுள் அத்தனை விரைவாக யாருக்கும் தரிசனம் தந்தது இல்லை. நீயோ அப்படிப்பட்ட அபூர்வமான தரிசனத்தைப் பெற்றப் பின்னரும் அந்த சந்தோஷத்தைக வெளிக் காட்டாமல் இருக்கிறாயே. மேலும் அவர் நேரிலே வந்தபோதும் அவரிடம் உனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்கவில்லையே '.

அதற்கு ஏக்நாத் கூறினார் 'குருஜி, நான் தெய்வங்களை விட என் குருவையே தெய்வமாக நினைப்பவன். என்னைப் பொறுத்தவரை குருவே அனைத்தையும் விட மேலானவர். அதற்குக் காரணம் குருவை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு சேவை செய்து மன மகிழ்ச்சியை பெறுவதைப் போல தெய்வங்களுக்கு நேரடியாக சேவை செய்து அந்த மகிழ்ச்சியை அடைய முடியாதே என்பதினால் தெய்வமே நேரில் வந்தபோதும், அவரை என் குருவின் குரு என்ற எண்ணத்துடன்தான் என்னால் தரிசிக்க முடிந்தது. என் குருவின் குருவான அவரை நான் வணங்குவதைத் தவிர அவரிடம் வேறு என்ன அருள் கேட்க முடியும். எனக்குத் தேவையானதை தந்தருள நீங்கள் இருக்கையில் எனக்கு அதற்கு மேல் என்ன ஆசை இருக்க முடியும் ? '. அதைக் கேட்ட ஜனார்த்தன ஸ்வாமி அவருடைய குருபக்தியை கண்டு வியந்து நின்றார்.

சில காலம் பொறுத்து ஜனார்த்தன ஸ்வாமியின் கட்டளைப்படி ஏக்நாத் திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தராகி குடும்ப வாழ்வில் இருந்தவாரே இறைப் பணியினை தொடர்ந்து கொண்டு இருந்தார். பல சமிஸ்கிருத நூல்களை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்தார். அவருடைய மனிதத் தன்மைக்கும், இறை பக்திக்கும் எடுத்துக் காட்டாக நடந்த இன்னொரு சம்பவம் இது.

ஏக்நாத் தன் வீட்டில் அடிக்கடி பஜனைகள், பிரசங்கங்களை நடத்தி வந்தவர்களுக்கு உணவு போட்டு அனுப்புவார். ஒருமுறை அவர் வீட்டில் பஜனை நடந்தது. அப்போது நான்கு திருடர்கள் அவர் வீட்டில் விருந்தாளிகளைப் போல வந்து பஜனையில் கலந்து கொண்டார்கள். அவர்கள் பூஜை அறையில் பல நகைகளை இறைவனுக்கு போட்டு இருந்ததை கவனித்தார்கள். வீட்டின் பிற இடங்களில் இருந்தவற்றையும் நோட்டம் விட்டுக் கொண்டார்கள். பஜனை முடிந்தது. உணவு அருந்திவிட்டு அனைவரும் சென்றப் பின் அவர்கள் ஒரு இடத்தில் பதுங்கி இருந்தார்கள்.

நடு இரவானது. வீட்டில் ஏக்நாத்தும் அவர் மனைவி மட்டுமே இருந்தார்கள். திருடர்கள் மெல்ல வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்து மூட்டையாகக் கட்டினார்கள். பிறகு சத்தம் போடாமல் பூஜை அறைக்குச் சென்றபோது நடு இரவாகியும் அங்கு கண்களை மூடிக் கொண்டு ஏக்நாத் தியானத்தில் அமர்ந்து இருந்ததைக் கண்டார்கள். எப்படி தெய்வத்தின் மீது போட்டுள்ள நகைகளை எடுப்பது என யோசனை செய்தவாறு அந்த பூஜை அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவ்வளவுதான் நால்வரின் கண்களும் குருடாகி விட்டன. எதுவுமே கண்களுக்கு தெரியவில்லை. செய்வதறியாது பயந்து போனவர்கள் தட்டுத் தடுமாறி வெளியில் ஓட முயல கதவில் அடிபட்டு தடுக்கி விழுந்தார்கள்.

அவர்கள் விழுந்த சப்தத்தைக் கேட்டு தியானத்தில் இருந்து வெளிவந்த ஏக்நாத் அவர்களைக் கண்டார். நடந்ததை அறிந்து கொண்டார். ஆனாலும் அவர்களை கைதாங்கலாக பிடித்து வந்து ஒரு இடத்தில் அமர வைத்தார். அவர்கள் அவரிடம் தாம் செய்த தவறைக் கூறி மன்னிப்புக் கேட்டார்கள். ஆனாலும் அவர் அதனால் கோபம் அடையாமல் இறைவனை தியானித்துக் கொண்டு அவர்களுடைய கண்களை தனது கையினால் தடவி விட அவர்களுக்கு கண் பார்வை மீண்டும் திரும்பியது.

அப்படியே அவர் கால்களில் விழுந்து வணங்கி மீண்டும் மன்னிப்புக் கேட்டார்கள். அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்ல எழுந்தபோது ஏக்நாத் அவர்களை தடுத்து நிறுத்தி அமரச் சொன்னார். தனது மனைவியை அந்த நடு இரவிலும் எழுப்பி அவர்களுக்கு சமையல் செய்து உணவு போடுமாறு கூறினார். அவர்கள் உணவு அருந்தி விட்டுச் செல்லக் கிளம்பியதும் தன்னுடைய மோதிரம், தான் போட்டிருந்த நகைகள், மனைவியின் நகைகள் என அனைத்தையும் அவர்களுக்கு தானமாகக் கொடுக்க அதை அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள். அது முதல் அந்த நால்வரும் ஏக்நாத்தின் பரம சிஷ்யர்களாகி அவர் செய்து வந்த ஆன்மீக செயல்களுக்கு உதவும் வகையில் அவருக்கு பல விதங்களிலும் சேவை செய்து வந்தார்கள்.

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply