ஒரு குறிப்பிட்ட மக்கள் மீது மட்டும் தாக்குதல் நடந்து வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்தவித வித்தியாசமும் இன்றி படுகொலை செய்யப்பட்டனர். சொல்ல முடியாத அளவுக்கு சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயக படுகொலை நடந்த இடத்தின் பெயர், இலங்கை ஜனநாயக சமத்துவ குடியரசு!

இந்த படுகொலையை முன்நின்று நடத்தியது ராஜபட்சே என்ற கொடுங்கோலன். இதற்கு பக்க பலமாக நின்றது இத்தாலிய சோனியாவின் காங்கிரஸ் மத்திய அரசும், மக்கள் புரட்சி பற்றி பெருமை பேசும் சீன கம்யூனிஸ்ட் அரசும் தான். இவர்களின் கூட்டு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது, நம் சகோதர சகோதரிகளான இலங்கை தமிழ் மக்கள் தான்.

இலங்கையில் பிரச்சனை எப்பொது துவங்கியது என்று பார்த்தால், அவர்கள் பிரிட்டிஸாரிடம் இருந்து விடுதலை பெற்றது முதலே பிரச்சனையும் துவங்கிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் சிங்களர்களை விட சிறந்த நிலையில் இருந்தது தான். அதாவது, இலங்கை சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், சிங்கள மக்களை காட்டிலும் தமிழ் மக்கள் தான் அதிக அளவில் கல்வி கற்றவர்களாக இருந்தனர். இதனால், அரசு வேலைகளிலும் தமிழர்கள் தான் அதிக அளவில் இருந்தனர். குறிப்பாக, இலங்கை சுதந்திரம் அடைந்தபோது, இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் தான் பொரும்பான்மையாக இருந்தனர்.

இலங்கையை பொருத்தவரை சிங்களர்கள் தான் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இதனால், சுதந்திரத்திற்கு பிறகு, இலங்கை அரசு சிங்களர்களின் பெரும்பான்மை பலத்துடன் அமைந்தது. இந்த அரசு சிங்களர்களை முன்னேற்றுவதாக கூறிக்கொண்டு எடுத்த சில நடவடிக்கைகள் தமிழர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் இருந்தது. அவற்றுள் முக்கியமானவை, 1956ல் இயற்றப்பட்ட சிங்கள சிறப்புரிமை சட்டமும் ஒன்று. ஆனால், பல போராட்டங்களால் இச்சட்டம் 1958ல் திருத்தியமைக்கப்பட்டது. இருப்பினும், இலங்கை அரசு இயற்றிய பிறச்சட்டங்களும் அந்நாட்டில் பிளவைத்தான் ஏற்படுத்தியது. அதில் முக்கியமாக, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கியது, மேலும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தியது.

சட்டங்கள் ஒரு புறம் பிரச்சனையை கிழப்பிக் கொண்டிருக்க, இலங்கை அரசின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் பிளவில் மேலும் பிளவை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழர்கள் அரசியல் உரிமை பெற்றுவிடக் கூடாது என்பதற்காக, இலங்கை அரசு, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழர் பகுதிகளில், திட்டமிட்டு சிங்களர்களை குடியமற்த்தினர். பல தமிழர்களும் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட தமிழர்களின் வாக்குரிமையையும் ரத்து செய்தனர். இது மட்டுமல்ல, எந்த வித சட்ட நெறிமுறையுமின்றி இளைஞர்களை கைது செய்வது, அவர்களை சித்திரவதை செய்வது போன்ற இலங்கை அரசின் செயல்பாடுகள், அந்த அரசின் நம்பகத்தன்மையை தமிழர்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கியது. ஐ.நாவின் 1996யின் அறிக்கையின் படி, 1980-1996 வரையிலான காலக்கட்டத்தில் 11513 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

பல்வெறு காலக்கட்டங்களில், பல முறை இலங்கையில் கலவரங்கள் நடந்துள்ளது. இக்கலவரங்களை தடுக்க வேண்டிய ராணுவமோ, சிங்களர்களுடன் சேர்ந்துக்கொண்டு கலவரங்கள் நடக்குமிடத்தில் தமிழர்களை தாக்கினர். இதன் உச்சக்கட்டமாக நடந்தது தான் யாழ்பான நூலக எரிப்பும். சுமார் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட, தென்கிழக்காசியாவிலேயே பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ்பான நூலகம் 31-5-1981 அன்று சிங்கள அரசியல்வாதிகளாலும், கலவரக்காரர்களாலும் எரிக்கப்பட்டது. இலங்கை அரசின் இக்கொடுஞ்செயல்கள் அனைத்தும் தனிநாடு கோரிக்கைக்கு வலு சேர்த்துக்கொண்டே இருந்தது. இலங்கை அரசின் அத்துமீறல்கள் தொடர்ந்துக் கொண்டிருக்க, 1983ல் இலங்கை அரசை எதிர்க்க, ஏழு பேர் இணைந்து தொடங்கப்பட்ட இயக்கம் தான் விடுதலைப் புலி இயக்கம்.

இலங்கை அரசு மீது இருந்த வெறுப்பும், எதிர்ப்பலையும் இளைஞர்களை புலிகள் இயக்கத்தில் இயங்க வைத்தது. புலிகள் இயக்கத்தை தவிற பிற ஆயத புரட்சி இயக்கங்களும் இலங்கை அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தது. ஆனால், இவற்றில் பொரும்பான்மையான இயக்கங்கள் புலிகளுடன் ஐக்கியமானது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக வளர்ந்த இந்த இயக்கம், தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளிலும் ஆதரவும் பெருகியது. ஆனால், ராஜிவ் காந்தியின் கொலைக்கு பின்பு, வெளிநாடுகளில் இருந்து வந்த ஆதரவு குறைந்தது என்பது நிதர்சன உண்மை.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமான இந்த போர் தொடர்ந்துக் கொண்டிருக்க, 2002ல் நார்வே அரசின் உதவியால் ஒரு அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த அமைதி பேச்சு வார்த்தையின் போது பல கருத்து வேறுபாடுகள் எழுந்துக் கொண்டே இருந்தது. இறுதியாக, 2008ல் இலங்கை அரசு, அமைதி உடன்படிக்கையில் இருந்து வெளியேறியது. சில நாட்களில் போரும் தொடங்கியது. இப்போரின் போது, விடுதலைப் புலிக்கு எதிராக, இலங்கை அரசுடன், காங்கிரஸ் மத்திய அரசும், சீன அரசும் கைகோர்த்து, விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தனர். இப்போரின் போது மக்கள் மீது தடை செய்யப்பட்ட எரி குண்டுகளை இலங்கை அரசு தமிழர்கள் மீது வீசியது குறிப்பிடதக்கது. இது மட்டுமல்ல, வேதி ஆயுதம் எனப்படும் Chemical Weapons மூலமும் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதைவிட பெரிய கொடுமை, கைது செய்து வைக்கப்பட்டிருந்த பல பெண்களை பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கி, இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிங்கள ராணுவம் கொலை செய்தது தான்.

போரில் காயமடைந்த அப்பாவி மக்கள் சிகிச்சைப் பெற்றுவந்த மருத்துவமனைகளைக் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. மருத்துவமனைகள் கூட சிங்கள ராணுவத்தால் சிதைக்கப்பட்டது தான் உச்சகட்ட கொடுமை. இலங்கை அரசின் இந்த அட்டூழியங்கள் அனைத்துமே, ஐ.நாவின் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, இலங்கை ராணுவம் நடத்திய படுகொலை, பாலியல் வன்முறை, பொதுமக்களை குறிவைத்து தாக்கியது, கைது செய்தவர்களை சித்திரவதை செய்து கொன்றது போன்ற இலங்கை ராணுவத்தின் அராஜகத்தை ஐ.நாவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது . அதேபோல, ஐ.நா அறிக்கையில் கவனிக்ப்பட வேண்டிய மற்றோரு விஷ்யம் விடுதலைப் புலிகளைப் பற்றியது. ஆம். விடுதலைப் புலிகளின் மீதும் ஐ.நாவின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அதில் முக்கியமானவை, "போர் காலக்கட்டங்களில், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழர்களை, அவ்விடத்தை விட்டு வெளியேறவிடாமல் புலிகள் தடுத்தனர்" என்பது புலிகள் மீதான முக்கிய குற்றச்சாட்டாகும். இந்த குற்றச்சாட்டு புதிதல்ல. பலரால் புலிகள் மீது கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு தான் இது. ஆனால், இதில் உண்மையே இல்லை என்று கூறிவிட முடியாது என்பது தான் உண்மை. ஐ.நாவின் அறிக்கையை தமிழகத்தின் மூலை முடுக்கில் எல்லாம் பிரச்சாரம் செய்யும் கட்சிகள், ஐ.நாவின் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சட்டை மறைப்பது ஏன்?

இலங்கைப் பிரச்சனையில் நேரு குடும்ப அரசுகளின் செயல்பாடுகளைப் பார்ப்போம். இந்திரா காந்தி ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்த சமயத்தில், இலங்கை தமிழர்கள் விஷ்யத்தில் புலிகளுக்கு உதவி புரிந்தார். அதே சமயம், ராமாயணத்தில் ராமரும் வாலியும் சண்டையிட்ட வாலி தீவை (கச்ச தீவு) இலங்கைக்கு தாரைவாத்தார். (இன்றளவும், தமிழர்கள் இதனால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.) இந்திராவின், இந்த இரண்டு நிலைப்பாட்டிற்கு பின்பு பெரிய கதை உள்ளது. அதற்குள் நாம் செல்ல வேண்டாம். இந்திராவுக்கு பிறகு வந்து ஆட்சி நடத்திய ராஜிவ் காந்தியின் பார்வை, இலங்கைத் தமிழர்கள் நிலைப்பாட்டில் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. 1987ல் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறி, அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பினார். இது நல்ல நோக்கத்திற்காக நடந்ததாக கூறினாலும், சில கருத்து வேறுபாடுகளாலும், தவறான நடவடிக்கைகளாலும், விடுதலைப் புலிகள், ராஜிவ் காந்திக்கு எதிராக திரும்பினர். மொத்தத்தில், அமைதிப்படையால் சச்சரவுகள் தான் மிஞ்சியது. இதன் தொடர்ச்சி தான் ராஜிவ் படுகொலை.

விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு ராஜிவ் படுகொலையும் ஒரு காரணம். காலங்களும் ஆட்சிகளும் மாற, மத்திய அரசு சோனியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. விளைவு, தமிழர்களின் அழிவு. ராஜிவ் காந்தி என்ற ஒற்றை மனிதரின் கொலைக்காக, லட்ச கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தான் நினைக்க தோன்றுகிறது. நேரு குடும்பம் இப்படி நாடகமாடுகிறது என்றால் , உதிறிக் கட்சி தமிழக அரசியல்வாதிகள் அதற்கு மேல். குறிப்பாக, வைகோ, சீமான், திருமாவளவன், வீரமணி போன்றோரின் நாடகங்கள் வெட்ககேடானது.

இந்த அரசியல்வாதிகள் அனைவருமே சந்தர்ப்பவாதிகள். மத்திய அரசு, இலங்கைக்கு ராணுவ உதவி அளித்து, அப்பாவி மக்களை அழித்தனர். இது உண்மை தான். இதை யாராலும் இதை மறுத்துவிட முடியாது. இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்து அண்ணா, பெரியார் போன்றோரின் தோல்வியடைந்த பிரிவினை கோசத்துக்கு புத்துயிர் அளிக்க முயல்கின்றனர். தமிழர் நலன் காக்க மாநாடு நடத்துகிறோம் என்ற பெயரில், பாரதத்தில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயர்ச்சிக்கின்றனர். இவர்கள் கூறும் சில வசனத்தையும் இங்கு குறிப்பிட விளைகிறேன்.

"பாரதம் என்பது ஒரு கூட்டு குடும்பம், இங்கு நமக்கு ஒத்துவரவில்லை என்றால், தமிழர்கள் தனி குடித்தனம் சென்றுவிடலாம்". "பாரதம் என்பது பிரிட்டிசாரால் தான் ஒருங்கிணைக்கப்பட்டது. பாரதம் என்று ஒரு நாடே கிடையாது." டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற கைகோ ஒருமுறை, "தமிழக இல்லம், தமிழக தூதரகமாக மாற்றப்படும்" என்று கூறினார். இதை விட பெரிய நகைச்சுவை கொடுமை என்வென்றால், "MP பதவி நாக்கு வழிக்க கூட லாயக்கில்லை" என்று கூறிக்கொண்டு, இன்றளவும் அப்பதவியை அனுபவித்து வருவது தான். அந்த நபரின் பெயர் திருமாவளவன்!

நம் இதிகாசங்களும், புராணங்களும் பாரத நாடு ஒருங்கிணைந்த நாடா என்று இவர்களுக்கு பதிலளிக்கும். ஆனால், நான் அதற்குள் செல்லவில்லை. ஏன்யென்றால், இவர்கள் தான் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர்கள் ஆயிற்றே! இவர்களுக்கு, இவர்கள் வழியிலேயே ஒரு கேள்வி கேட்கிறேன். "பாரதம் ஒருங்கிணைந்த நாடில்லை என்கிறிர்களே, தமிழகம் மட்டும் ஒருங்கிணைந்த தனிநாடா? உங்கள் பார்வையில், தமிழ்நாடு கூட பிரிட்டிசாரால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று தானே?" பாரத தேசம் என்பது பல மொழிகளை கொண்ட தேசம். ஒவ்வரு பகுதியிலும், உடை கலாச்சாரம் முதல் உணவு கலாச்சாரம் வரை பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட தேசம். ஆனால், "இந்து" என்ற புனிதமான ஒற்றைச் சொல், இந்த அனைத்து வேறுபாடுகளையும் களைந்து பாரதத்தை ஒற்றுமையாக வைக்கிறது. பிரிவினைக் கிருமிகள், பிரிவினை நோயை பரப்பினாலும், "இந்து" என்ற மருந்து நோயை அழித்துவிடும் என்பதை பொருமையுடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

ராஜிவ் கொலையாளிகள் விஷ்யத்தை கூட இவர்கள் அரசியலாகத் தான் கையாண்டு வருகின்றனர். ராஜிவ் கொலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவர் மட்டும் தான் கொலையாளிகள் என்று கூறிவிட முடியாது. ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் எங்கிருந்தனர்? என்ற கேள்வியை திறக்க இன்னமும் சாவி கிடைக்கவில்லை. இது போன்று பல சர்ச்சைகள் இன்னும் திறக்கப்படாமல் தான் இருக்கிறது. அதே சமயம், முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு இக்கொலையில் துளியும் சம்பந்தமில்லை என்று கூறிவிட முடியாது. ராஜிவ் கொலையில் இவர்கள் மூவருக்கும் பங்கிருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. ராஜிவ் கொலையில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருப்பது உண்மை. அதற்காக, அகப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்க சொல்வது அபத்தமான செயல்.

ராஜிவ் காந்தி ஒன்றும் பெரிய தியாக செம்மல் அல்ல. ராஜிவ் காந்தியும் ஒரு ஊழல் பெரிச்சாளி தான். ராஜிவ் மீதான விடுதலைப் புலிகளின் கோபத்தில் நியாயமும் இருக்கிறது. ஆனால், சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவாக இருந்துதான் செயல்பட வேண்டும். இவர்கள் விஷ்யத்தில் அரசு செய்த பெரிய தவறு, இவர்களின் கருணை மனுவை 11 ஆண்டுகள் கிடப்பில் போட்டது தான். இம்மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் பட்சத்தில், அப்சல், கசாப் போன்றவர்களின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கும். இந்த குரலை காஷ்மீர் முதல்மந்திரி, சமீபத்தில் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்து.

இது போன்ற பிரச்சனைகளை சம்மாளிக்க போடப்படும் கோசம் தான், "சட்டத்தில் இருந்து மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்" என்பது. இவர்களின் இந்த கோசத்தை, ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு எழுப்பியிருந்தால் பரவாயில்லை. ஆனால், இவர்கள் இந்த கோசத்தை எப்போது எழுப்புகின்றனர்? சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட் பின்பு! இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால், "மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்" என்று கூறும் இவர்களே, "ராஜபட்சேவை சர்வ தேச நீதிமன்றத்தில் நிறுத்தி தூக்கு தண்டனை வழங்க வேண்டும்" என்பது தான்!

படுகொலை நிகழ்த்திய ராஜபட்சேக்கு தூக்கு தண்டனை கூட குறைவானது தான். ஆனால், "மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்" என்று போராடுபவர்கள் இதை கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? இதே போல, விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தான் தமிழர் நலனில் அக்கரை கொண்டவர்கள் என்பது போல சித்தரிப்பது தவறான பிரச்சாரம். புலிகள் இலங்கையின் அராஜகத்தை எதிர்த்தனர் என்பது உண்மை. ஆனால், புலிகள் பக்கமும் சில தவறுகள் இருக்கிறது. குறிப்பாக, புலிகளின் புரட்சியை ஏற்காத தமிழர்களையும், தலைவர்களையும் கொன்றது தவறு. இது தான் நடுதிலையானவர்களை புலி ஆதரவு நிலையில் இருந்து மாற்றியது. ஐ.நாவின் அறிக்கையில் கூட புலிகளின் சில தவறான நிலையை சுட்டிக் காட்டியுள்ளனர்.

எனது தனிப்பட்ட கருத்து: தமிழகத்தை பொருத்தவரை, விடுதலைப் புலி ஆதரவு நிலை என்பது குறைவாகவே காணப்படுகிறது. அரசியல் ரீதியாக இதற்கு எடுத்துக்காட்டாக, தேர்தல்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். இன்று வரை விடுதலைப் புலிகளை எதிர்க்கும் ஜெயலலிதா தான் கடந்த சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். அதே போல, விடுதலைப் புலி ஆதரவு நிலைக் கொண்ட ம.தி.மு.க போன்ற கட்சிகளால், 2 சதவீத வாக்குகளைக்கூட பெற முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது. அதே சமயம், இலங்கை தமிழர் படுகொலைக்கு உதவிய காங்கிரஸ் 5 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. இது தான் இன்றைய அரசியல் நிலை.

இலங்கை அரசு விடுதலைப் புலிகளையும் அழித்துவிட்டனர், விடுதலைப் புலியை அழிக்கிறேன் என்ற பெயரில் லட்ச கணக்கில் அப்பாவி தமிழர்களையும் அழித்துவிட்டனர். ஆனாலும், அங்கே மிச்சமிருக்கும் தமிழர்களுக்கு இன்று வரையிலும் விடிவு வந்ததாக தெரியவில்லை. தமிழர்கள் நலனுக்காக, பல கோடி ரூபாயை மத்திய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆனால், இந்த ரூபாய்கள் தமிழர் நலனுக்காகத் தான் செலவாகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து சுமார் இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில், "அங்கிருக்கும் தமிழர்கள் நலமுடனும், மரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ வேண்டும்" என்பது தான் சராசரி மக்களின் விருப்பம். படுகொலைக்கு உதவிய மத்திய அரசு, அதற்கு பிராயச்சித்தமாக இதையாவது செய்ய வேண்டும்.

இலங்கை தமிழர்களின் , இலங்கை தமிழ் , இலங்கை அகதிகள்

நன்றி "பாரத குரல்" சுஜின்

இதில் ஏதேனும் மாற்று கருத்து இருப்பின் அதை கட்டுரை வடிவில் தமிழ் தாமரைக்கு தெரிய படுத்தலாம்

Leave a Reply