அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நீங்கள் கவுரவித்துள்ளீர்கள்.

மனிதர்கள் அனைவரும் சமம் என்ற ஆபிரகாம் லிங்கனின் வார்த்தைகளுக்கு  வடிவம் தந்த அவை இது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதிநிதி என்ற முறையில் இந்த அவையில் பேசுவது பெருமை அளிக்கிறது.

மகாத்மா காந்தியின் அகிம்சை முறை மார்ட்டின் லூதர் கிங்கை ஈர்த்தது. பேச்சுரிமை, வழிப்பாட்டு உரிமை, சமத்துவ உரிமை ஆகியவற்றை எங்கள் நாட்டின் தலைவர்கள் எங்களுக்கு அளி்த்திருக்கிறார்கள். இந்தியா ஒன்றாக வாழ்கிறது, ஒன்றாக வளர்கிறது, ஒன்றாகவே கொண்டாடுகிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவை கொண்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியது போல் இந்தியா – அமெரிக்கா இடையே இயற்கையாகவே நட்பு உள்ளது. தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியபோது அமெரிக்கா கண்டனம் தெரிவித்ததை இந்தியா மறக்காது. ஆசிய நாடுகளை தீவிரவாதம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியா மேல் அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது எங்களுக்கு தெரியும்.

உலகம் முழுவதும் அமைதியும், வளமும் பெற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் இந்தியாவும், அமெரிக்காவும் உள்ளன. பயங்கரவாதத்தின் நிழல் உலகம் முழுவதும் பரவியுள்ள போதிலும், இந்தியாவின் அண்டை நாடுதான் அதை வளர்த்து வருகிறது. (பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டார்). பகை உணர்வைத் தூண்டுவது, கொலை செய்வது என ஒரே விதமான கொள்கைகளை லஷ்கர்-ஏ-தொய்பா, ஐ.எஸ்., தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பின்பற்றி வருகின்றன. அந்த அமைப்புகள் மீது எவ்விதப் பாகுபாடுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித நேயத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பதை எவ்விதத்திலும் அங்கீகரிக்கக் கூடாது. அரசியல் லாபத்துக்காக, பயங்கரவாதச் செயல்களை ஆதரிப்போருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் உதவி செய்ய மறுத்துவிட்டதை இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். (பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் முட்டுக்கட்டை போட்டதை மோடி குறிப்பிட்டார்). பயங்கரவாதத்தை ராணுவம், உளவுத் துறை அல்லது ராஜதந்திரம் என்ற பாரம்பரிய முறையில் வெல்ல இயலாது என்பதால், பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் பல வீரர்களை நாம் இழந்துள்ளோம். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் பல நிலைகளில் வலுப்பெற வேண்டும்.தீவிரவாதத்தில் இருந்து மதத்தை பிரித்து பார்க்கவேண்டும்.

தீவிரவாததில் நல்லது, தீயது என்ற வேறுபாடு இல்லை. தீவிரவாதத்தை ஆதரிப்பது யார்? எதிர்ப்பது யார்? என்பதைத் தெரிந்துகொண்டு எதிர்ப்பவர்களுக்கே ஒத்துழைப்புதர வேண்டும்.

அமெரிக்க நாடாளுமன்றம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய நாடாளுமன்றத்திலும் நல்லிணக்கை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.

கடல் வழி வணிகத்தை பெருக்க வியாபார வழித்தடங்களை பாதுகாப்பானதாக உருவாக்க வேண்டும். இந்த முயற்சியில் அமெரிக்கா, இந்தியா இணைந்து செயலாற்றுவது அவசியமான ஒன்று.

இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவால் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியா – அமெரிக்கா இடையே நட்புறவை வளர்ப்பதில் அமெரிக்கா மிகவும் உதவியிருக்கிறது.

அமெரிக்க பார்லிமென்டில், பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசியது.

Leave a Reply