உணவு பொருள் பணவீக்கம் ஜுலை 9-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவிற்கு 7.58 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய வாரத்தில் இது 8.31 சதவீதமாக இருந்தது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஜுலை இரண்டாவது வாரத்தில் இது 19.52 சதவீதமாக மிகவும் உயர்ந்து இருந்தது. தற்போது உணவு பணவீக்கம் குறைந்து வருவது

மத்திய அரசுக்கும், பாரத ரிசர்வ் வங்கிக்கும் சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

நடப்பு ஆண்டின் இறுதிக்குள் “உணவு பணவீக்கம்” 6-7 சதவீதமாக குறையும் என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வாரத்தில், ஓர் ஆண்டு கால அடிப்படையில் பருப்பு வகைகள் விலை 7.67 சதவீதம் குறைந்துள்ளது. அண்மையில் நிறைவடைந்த வேளாண் பருவத்தில் பருப்பு வகைகள் உற்பத்தி வரலாறு காணாத அளவில் 1.81 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. அடுத்த 3-4 ஆண்டுகளில் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதேசமயம், வெங்காயம் மற்றும் பழங்கள் விலை முறையே 19.68 சதவீதம் மற்றும் 15.84 சதவீதம் அதிகரித்துள்ளது. பால் விலை 10.76 சதவீதமும், முட்டை, மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு பொருள்கள் விலை 8 சதவீதமும் உயர்ந்துள்ளது. மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள் விலை 4.77 சதவீதமும், காய்கறிகள் விலை 4.31 சதவீதமும் உயர்ந்துள்ளது.

கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வாரத்தில், அத்தியாவசிய பொருள்கள் பணவீக்கம் 11.58 சதவீதத்திலிருந்து 11.13 சதவீதமாக குறைந்துள்ளது. உணவு சாரா பொருள் பணவீக்கம் 15.20 சதவீதத்திலிருந்து 15.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை பல முறை உயர்த்தியதையடுத்து, கடந்த மே மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு 5.6 சதவீதமாக குறைந்துள்ளது. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.8 சதவீதமாக குறைந்துள்ளது.

பொது பணவீக்கத்தை கணக்கிடுவதில் உணவு பொருள் பணவீக்கத்தின் பங்களிப்பு 14 சதவீதமாக உள்ளது. எனவே, இனிவரும் மாதங்களில் பொது பணவீக்கம் சற்று குறைய வாய்ப்புள்ளது என சில பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொது பணவீக்கம்

இருப்பினும், கடந்த மே மாதத்தில் 9.06 சதவீதமாக இருந்த பொது பணவீக்கம், ஜுன் மாதத்தில் 9.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, பாரத ரிசர்வ் வங்கி, இம்மாதம் 26-ந் தேதி வெளியிடும் பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த உணவு தானியங்களை சேமிக்கும் வசதி, குளிர் பதன மற்றும் சரக்கு போக்குவரத்து வசதி போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலான பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

உணவு பொருள் பணவீக்கம், பண வீக்கத்தை , பருப்பு வகைகள், விலை, பருவத்தில், பருப்பு,  உற்பத்தி, வரலாறு , அத்தியாவசிய, பொருள்கள், பணவீக்கம், பண வீக்க,

Leave a Reply