போஜராஜாவின் அரண்மனையில் இருந்த "காளிதாசன்", சிறந்த கவிஞன் மட்டுமல்ல சாதுர்யம் மிக்க பேச்சாற்றல் கொண்டவன். எதிர் அணியினர் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்டு மடக்கினாலும், தன் புத்திக் கூர்மையால் உடனுக்குடன் பதிலடி கொடுப்பவன்.

இப்பேர்ப்பட்ட காளிதாசன், ஒரு நாட்டிய மங்கையின் நடனம் மற்றும்

இசையில் மயங்கினான். அதைக் கேட்க, தினமும் அவள் வீட்டிற்குச் சென்றான்.

ஒரு நாள் காலை அவள் வீட்டின் வழியாகச் சென்ற போது, அவள் காளிதாசனைக் கூப்பிட்டு கடையிலிருந்து நல்ல இறைச்சியைக் கொண்டு வந்து கொடுக்கும் படி வேண்டினாள். அவளைக் கோபப்படுத்தக் கூடாது என்பதற்காக, அவளிடமிருந்து பையை வாங்கிக் கொண்டு மார்க்கெட்டிற்குப் போனான்.

இறைச்சிக் கடைக்குப் போய் நல்ல இறைச்சியாகப் பார்த்து வாங்கி, அதை துண்டுகளாக்கி பையில் போட்டுக் கொண்டு நாட்டியக்காரியின் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

எதிரில் ஒருவன் வந்தான். அவன் காளிதாசின் புகழைக் கேட்டு வயிறு எரிந்தவன். இறைச்சித் துண்டுகளால் ரத்தக் கறை படிந்த பையுடன் காளிதாஸ் வருவதைப் பார்த்து, "என்ன கவி அரசரே பையில் என்ன இருக்கிறது?" என குசும்புத்தனமாகக் கேட்டான்.

காளிதாசன், "பையில் ராமாயணம் இருக்கு" என்றான்.
எதிரில் வந்த புலவன், "பின் பை ஏன் நனைந்திருக்கு?" எனக் கேட்டான்.

காளிதாசன், "ராமாயணம் போன்ற நவரசம் நிறைந்த இதிகாச நூல் பையில் இருக்கும் போது அந்த நவசத்தினால் பை நனையாமல் எப்படி இருக்கும்?" என்று பதிலளித்தான்.

புலவன், "பின் பை ஏன் ரத்தக்கறை படிந்து இருக்கு?" என்றான்.
காளிதாசன், "ராமன் – ராவண யுத்தத்தில் மாண்ட ராட்ஷசர்களின் ரத்தக் கறைதான் அது" என்றான்.

புலவன், "அப்படியே வைத்துக் கொண்டாலும் சரி, ஆனால் நாற்றம் ஏன் வருகிறது?" என்று கேள்வி கேட்டான்.

காளிதாசன், "ராட்ஷசர்களின் அழுகிய பிரேதங்களிலிருந்து வரும் நாற்றம் அது" என்று பதிலளித்தான்.

இனிமேலும் குடைந்தால், தன் மானம் பறிபோகும் என்பதை உணர்ந்த புலவன், விட்டால் போதும் என்று தன் வழியே சென்றான்.

 

Tags; காளிதாசனின், புத்திக்  கூர்மை, காளிதாசன் , காளிதாஸ்,  காளிதாசர் , மகாகவி காளிதாசரின் , காளிதாஸ்,

Leave a Reply