இது 1971-ல் நடந்த பிரமிக்கத்தக்க மற்றும் உணர்ச்சிகரமாக உள்ள உண்மைக்கதை.

பாகிஸ்தான் பல வருடங்களுக்கு நம் எல்லையில் ஆக்ரமித்து, கொடுஞ்செயல்கள் புரிந்த அநியாயத்திற்கு பதிலடி போல, கிழக்கு வங்காள பாகிஸ்தான் பகுதியிலிருந்தே சுதந்திரக்கனல் வெடித்தது. பாகிஸ்தானிய அரசு, அந்த சுதந்திரப் போராட்டதை நசுக்க, அப்பகுதியிலிருந்த அநேக ஆண், பெண்களை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கினார்கள்.

ஆனாலும் அப்பகுதியில் இருந்தவர்கள், துண்டித்து விடும் எண்ணத்தை விடாமல், சுதந்திரப் போர்க்கொடி தூக்கி அதனால் எண்ணற்றவர்கள் மடிந்தார்கள். இதனால் ஆயிரக்கணக்கான இந்து – முஸ்லீம்கள் அனாதைகளாக, நம் இந்தியாவில் தஞ்சம் புக வந்து கொண்டே இருந்தனர். இவர்களை பாதுகாப்பாதே நம் பாரத அரசிற்கு பெரும்பாரமாக இருந்தது. மேலும் கிழக்கு பாகிஸ்தானில் தோன்றிய "முக்திவாஹனி " என்கிற போராட்ட அமைப்பு, தேசவிடுதலைக்காக நம்மை அண்டியது. எனவே, அப்பொழுது பாரதப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவர்களுக்கு உதவ, நம் படைகளை அனுப்ப முடிவு செய்தார்.

அதில் நடந்த சம்பவம் தான் இது. லான்ஸ் நாயக் ஆல்பர்ட் இக்கா என்னும் ராணுவ அதிகாரி கிழக்கு பாகிஸ்தானின் "கங்கா ஸாகர்" என்னும் ராணுவ முகாமை அழிக்க அனுப்பப்பட்டார். அந்த முகாமை நெருங்க முடியாமல் வழியெல்லாம் பதுங்கு குழிகளை வெட்டி, அதிலிருந்து பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுத் தள்ளினார்கள். இதனால் நம் ராணுவத்தினர் முன்னேற முடியாமல் தவித்தார்கள். பார்த்தார் ஆல்பர்ட், இதை முறியடிக்க ஸ்டென் கன்னிலிருந்து தப்ப, வேறு வழியாக, மெல்ல ஊர்ந்து போனார். எங்கு போகிறீர்கள் இந்த அபாயகரமான சூழ்நிலையில்? என்று அவருடைய உதவிக்கு வந்து படைவீரர்கள் கேட்டதற்கு, "கூடிய சீக்கிரமே, இதற்கு விடை உங்களுக்கு கிடைக்கும்" என்று ஊர்ந்து சென்றார். இருந்தாலும் இரண்டொரு குண்டுகள் அவர் உடம்பில் பாய்ந்துன. அதையும் பொருட்படுத்தாமல், பதுங்க குழியிடம் சென்று, அதில் பதுங்கியிருந்த இரண்டு பாகிஸ்தான் வீரர்களை தன் துப்பாக்கி முனையிலிருந்த கத்தியால் குத்திக் கொன்றார்.

பதுங்கு குழியிலிருந்து குண்டு வெடிப்பு நின்றதும், நம் இந்தியப் படை சற்றே முன்னேறியது. ஆனால் மறுபடி இரண்டாவது பதுங்கு குழியிலிருந்து "ஸ்டென்கன்" ரவைகள் பறந்தன. ஆனாலும், உடம்பில் குண்டுகள் துளைத்ததினால் ரத்தம் வழிந்தோட, அதை சற்றும் பொருட்படுத்தாமல், ஊர்ந்து கொண்டே இரண்டாவது பதுங்கு குழிப்பக்கம் போய், அதிலிருந்து இரண்டு பாகிஸ்தான் வீரர்களையும் துப்பாக்கி முனையிலிருந்த கூர்மையான கத்தியால் குத்தி, பரலோகம் அனுப்பி வைத்தார். இதனால் அங்கிருந்து வெடிச்சத்தம் வருவது நின்றதால், இந்திய படை வீரர்கள் மேலும் முன்னேறினார்கள்.

குண்டுகள் உடலைத் துளைத்தெடுத்ததால் மேலும் முன்னேற முடியவில்லை தீரர் ஆல்பர்ட்டினால். அப்பொழுது நம் வீரர்கள் அவரைத் தூக்கி நிறுத்தினார்கள். மற்ற வீரர்கள் எதிராளியான பாகிஸ்தான் சேனை வீரர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி "கங்காஸாகர்" முற்றுகை இடத்தை அடைந்து, நம் சேனைவீரர்கள் சரமாரியாக எதிரிப்படையினர் மீது குண்டு வீசி அழித்தார்கள். சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சைனியம் ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு, ஓடிப்போனார்கள்.

உடல் முழுவதும் குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்ட வீரர் ஆல்பிரட்டை நம் படை வீரர்கள் "கங்கா ஸாகர்" முகாமிற்கு இட்டு வந்து, முதல் உதவி சிகிச்சை செய்தார்கள். சிலர் அவருக்கு தண்ணீர் கொடுத்தார்கள் ; சிலர் அவர் உடலிலிருந்து வழியும் ரத்தத்தை துடைத்தார்கள். அதிலெல்லாம் ஆல்பர்ட்டின் சிந்தனை ஓடவில்லை.

மிகுந்த ஆயாசக்குரலில், முதலில் பாகிஸ்தான் முற்றுகையிட்டிருந்த இடத்தில் பாரதத்தின் மூவர்ணக் கொடியை ஏற்றும் படி ஆணையிட்டார். கொடியை ஏற்றிவிட்டதும், அதைப் பார்த்து சமாதானமடைந்து மெல்ல புன்னகைத்தார்.

பிறகு மார்பில் தொங்கிக் கொண்டிருந்த சிலுவைக்குறியை மெல்ல தொட்டு, "பாரத மாதாவிற்கு ஜே" என்று மிகுந்த ஆயாசக்குரலில் சொல்லிக் கொண்டே உயிரை விட்டார்.

அவருடைய துணிச்சலான செயல் மற்றும் நாட்டின் மீதுள்ள விசுவாசத்தைப் பார்த்து, அங்கிருந்த மற்ற போர்வீரர்கள் கண்ணீர் விட்டார்கள். பிறகு அந்த தைரியமுள்ள, மிகுந்த ஆபத்திலும் உயிரை மதிக்காமல், போராடின அவருக்கு வீரவணக்கம் செய்தார்கள். இந்த வீரனுக்கு, இல்லை இல்லை – மகாவீரனுக்கு மரணத்திற்குப் பின் "மகாவீரச்சக்கரம்" பதக்கம் அரசு கொடுத்தது. பாரதமாதாவின் வீர புத்திரனே! உனக்கு கோடி கோடி வந்தனங்கள்!!

Leave a Reply