மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல ஆலயங்கள் பிரசித்தி பெற்றவை. அவை அனைத்தின் வரலாறுகளும் கிடைக்கவில்லை என்றாலும் சில ஆலயங்களுடைய மகிமைகளை கிராமிய மக்கள் பரம்பரை பரம்பரையாக வாய் மொழி செய்தியாகவே தெரிவிக்கின்றனர் . அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் இந்தூர் – போபாலுக்கு இடையே உஜ்ஜயினியின் அருகில் உள்ள தேவாஸ் மாவட்டத்தில்

உள்ள ஒரு சிறிய, ஆனால் பிரசித்தி பெற்ற, சக்தி வாய்ந்த ஆலயமான பிலாவலி சிவன் ஆகும் .

தேவாஸ் என்ற இடம் முன்னர் இருந்த அரச குடும்பத்தினரான துகோசி ராவ் மற்றும் ஜீவாஜி ராவ் என்ற மன்னர்களினால் பேஷ்வாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் உருவான பகுதி ஆகும் . தேவாஸ் நகரின் ஒரு பகுதியில் சுமார் இரண்டு கி.மீ தொலைவில் உள்ள பிலாவலி என்ற குக் கிராமத்தில் உள்ளது பிலாவலி சிவன் ஆலயம் . அந்த ஆலயத்தின் பெயர் மகாகாளீஷ்வர் ஆலயம் . இதென்ன மகாகாளீஷ்வர் உள்ள இடம் உஜ்ஜயினிதானே என யோசனையா ? உஜ்ஜயினியில் உள்ள மகாகாளீஷ்வர் ஆலயத்திற்கும் இதற்கும் உள்ள சகோதர பந்தமே அந்த பெயர் ஏற்பட்டதின் காரணம் .

ஆலய அமைப்பு : ஆலயம் சிறு குன்று போன்ற இடத்தில் , பிரதான சாலைக்கு உயரத்தில் அமைந்து உள்ளது. அது சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் எழுந்துள்ள ஸ்வயம்பு லிங்க ஆலயம் எனக் கூறுகின்றனர் . ஆலயத்தின் உள்ளே சுமார் ஒரு அடி உயரத்தில் முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த சிவலிங்கம் , இன்று இரண்டு அல்லது இரண்டரை அடி உயரத்தில் வளர்ந்து உள்ளது.

அந்த அதிசயத்தை நேரில் தரிசித்தவர்களில் நானும் ஒருவன் என்ற பெருமை எனக்கும் உள்ளது. ஆலயத்தின் உள்ளே சிவலிங்கம் மட்டுமே உள்ளது. அதன் விஷேசம் என்ன எனில் ஆவுடையார் இடப்புறம் அமைந்து உள்ளது. அந்த ஆலயத்தில் சென்று அமர்ந்து தியானித்தப் பின் வந்தால் மனதில் பெரும் அமைதி கிடைப்பது அனுபவமான உண்மை. அதன் எதிர்புறத்தில் அனுமான் சன்னதியும் , கால பைரவர் சன்னதியும் அமைந்து உள்ளன.

ஆலயத்தின் எதிர்புறத்தில் சற்று தொலைவில் ஒரு மயானம் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் ஆலயத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மயில்கள் வந்து விளையாடுவதைக் காணும் பொழுது ஆனந்தமாக இருக்கும் .

ஆலயம் எழுந்த கதை வெகு காலத்திற்கு முன் அந்த கிராமத்தில் குரு மகராஜ் என்ற ஒருவர் வசித்து வந்தார் . அவர் சிவ பக்தர். தினமும் அதி காலை எழுந்து குளித்தப் பின் நடந்தே உஜ்ஜயினிக்குச் சென்று மகா காளேஸ்வர் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்த பின்தான் உணவு அருந்துவார். தேவாஸ் மற்றும் உஜ்ஜயினிக்கு செல்லும் பாதையின் இடையே நர்வர் என்ற நதி ஓடுகின்றது. அந்த காலத்தில் பலர் உஜ்ஜயினிக்கு நடந்தே செல்வது சாதாரணம் . ஏன் எனில் நடந்து செல்பவர்கள் பல குறுக்கு வழிகளில் சென்று விடுவராம் .

அப்படி கட்டுப்பாட்டுடன் தினமும் நடந்து செல்லும் பழக்கத்தை வைத்திருந்தவர் ஒரு சோதனையை சந்திக்க வேண்டி இருந்தது. அது மழைக் காலம் . எப்பொழுதும் போல காலை எழுந்து குளித்துவிட்டு உஜ்ஜயினிக்குக் கிளம்பியவர் நர்வர் நதியில் ஏற்பட்டிருந்த திடீர் வெள்ளத்தினால் மேலே செல்ல முடியவில்லை. மழையும் நின்றபாடில்லை. என்ன செய்வது என மனம் தடுமாறி நின்று கொண்டு இருந்த அவரை இரவு அந்த ஊர் தலையாரி தன் வீட்டிற்கு அழைத்துப் போய் மழை நின்ற பின் கிளம்பிச் செல்லும்படிக் கூறி உணவு அருந்த அழைத்தார். ஆனால் குரு மகராஜ் உணவு அருந்த மறுத்து விட்டு தன் சங்கல்பத்தைக் கூறிவிட்டார். நதியின் வெள்ளம் அடங்க இரு நாட்கள் ஆகும் என்ற அளவில் மழை பெய்து கொண்டு இருந்தது. இரண்டு நாட்கள் எப்படி சாப்பிடாமல் இருப்பார் என எண்ணியபடி இரவு அவரை அங்கேயே தங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்திய பின் இருவரும் தூங்கச் சென்றனர் . குரு மகராஜ் அந்த கிராம தலையாரியின் வற்புறுத்தலால் ஒரு கோப்பை பால் மட்டும் அருந்தினர் .

அன்று இரவு குரு மகராஜாஜின் கனவில் சிவபெருமான் தோன்றி ‘பக்தா, உன் பக்தியை மெச்சுகின்றேன் . இனி நீ உஜ்ஜயினிக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டாம் . ஆகவே மீண்டும் பிலாவலிக்கே திரும்பிச் சென்று உனக்கு எந்த இடத்தில் விருப்பமோ அங்கு ஐந்து வில்வ இலைகளை வைத்து அதன் மீது ஒரு கல்லை வைத்து விடு. மறுநாள் நான் அங்கே எழுந்தருளுவேன்’ எனக் கூறி மறைந்தார்

மறு நாள் காலை மழை நின்றது. ஆனால் நதியின் வெள்ளம் அடங்கவில்லை. ஆகவே காலையில் எழுந்து குளித்து விட்டு பிலாவலிக்குத் திரும்பியவர் தன் கனவைக் குறித்து கிராமத்தினரிடம் கூறினார் . ஒருவரும் அதை நம்பவில்லை. ஆனால் குரு மகராஜோ பரிபூரண நம்பிக்கையுடன் ஒரு சிறு குன்றின் மீது ( தற்பொழுது ஆலயம் உள்ள இடத்தில் ) ஐந்து வில்வ இலைகளை வைத்தப் பின் அதன் மீது ஒரு கல்லையும் வைத்து விட்டு தூங்கச் சென்றார் . இரவு திடீரென பெரும் மழை பெய்து ஓய்ந்தது. அடித்தக் காற்றில் வில்வ இலைகள் பறந்து விட்டன. காலை எழுந்து தான் வில்வ இலைகளை வைத்திருந்த இடத்திற்கு சென்று பார்த்தவர் அங்கிருந்த அதிசயத்தைக் கண்டார் .

வில்வ இலைகளை வைத்திருந்த இடத்தை சுற்றி இருந்த மண் விலகி இருந்தது. பூமியிலே புதைந்திருந்த ஒரு லிங்கம் வெளியில் தெரிந்தது. ஓடிச் சென்று ஊராரை அழைத்து வந்து அந்த அற்புதக் காட்சியைக் காட்ட அனைவரும் வாயடைத்து நின்றனர் . சிவபெருமான் தான் அளித்த வாக்குறுதிப்படி உஜ்ஜயினி மகா காளீஸ்வரராக அங்கேயே எழுந்தருளி விட்டார். அந்த லிங்கம் தோன்றிய இடத்திலேயே சிறு ஆலயம் அமைத்தனர் .

ஆகவே அந்த ஆலயத்திற்கு மகா காளீஸ்வரர் ஆலயம் எனப் பெயரிட்டனர். அதற்கு மறு நாள் முதல் குரு மகராஜ் உஜ்ஜயினிக்குச் செல்வதை நிறுத்தி விட்டு அந்த இடத்திலேயே வழிபடத் துவங்கினார். அதனால்தான் அந்த ஆலயத்தினையும் உஜ்ஜயினி மகா காளேஸ்வரர் ஆலயமாகவே பலரும் கருதினர் ஆலயத்தில் சிவராத்தரி அன்று பெரும் திரளான கூட்டம் கூடிவிடும் .ஒரு மேளாவும் அங்கு நடைபெறுகின்றது.

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply