கோவை மாவட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கோயில்களில் ஒன்று மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலாகும். குன்றுதோராடும் குமரவேள் எழுந்தருளியிருக்கும் இம்மருதமலை, அறுபடை வீடுகளைக் கடந்து ஏழாவது படைவீடாகவே முருகபக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் கோவை மாநகாரில் இருந்து மேற்குத்திசையில் சுமார் 15 கி.மீ. தொலைவில்

உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் எழில் கொஞ்சும் இயற்கைச் சூழலில் விளங்கும் மருதமலை, மலையரண்களால் சூழப்பெற்று சுமார் 500 அடி உயரத்தில் அமையப்பெற்றது. நோக்கும் பொழுது மயில் தோகை விரித்தாற்போல் காட்சியளிக்கிறது.

மருத மரங்கள் அதிகமாகக் காணப்படுவதால், இம்மலை மருதமலை என அழைக்கப்படுகிறது. அசலம் என்ற வடமொழிச் சொல்லுக்கு மலை என்பது பொருள். அதனால், மருத மரங்கள் நிறைந்த இம்மலை, மருதாசலம் (அருணாசலம் என்பது போல்) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மரங்கள் 60 அடி முதல் 90 அடிக்கும் உயரமான இடங்களில் வளரக்கூடியவை. ஆயுர்வேதம் மருதமரத்தை " அர்ஜுன்" என்று அழைக்கிறது. மருத்துவத்தில் இதனை TERMINALIA ARJUNA என்று குறிப்பிடுகிறார்கள். இதன் பட்டை இதயம், நுரையீரல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன் படுகிறது. தினமும் ஒரு சிட்டிகை மருதம்பட்டை பொடியை உட்கொண்டுவந்தால் இதயம் பலம் பெறும். அதுபோல ஒரு தேக்கரண்டி மருதம் பட்டைபொடியை சாதத்தோடு வேகவைத்து, அதன் கஞ்சியுடன் தொடர்ந்து மூன்று பௌர்ணமி இரவில் திறந்த வெளியில் இரவு முழுதும் வைத்திருந்து, மறு நாள் காலையில் உண்டுவர, ஆஸ்த்மா நோய் மிகவும் மட்டுப்படுவதாக சொல்கிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க மருதமரங்கள் நிறைந்த மலையாயினும், இம்மரங்கள் மலைப்பாதையில், ஆங்காங்கே ஒன்றிரண்டு மட்டுமே தென்படுகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில், அருகில் உள்ள வெள்ளியங்கிரியை சிவன் உருவமாகவும், நீலி மலையை அம்மன் உருவமாகவும், இம்மருதமலையை முருகன் உருவமாகவும், ஆக மும்மலையையும் சேர்த்து, சோமாஸ்கந்த மூர்த்தமாக பேரூர் புராணம் சித்தரிக்கிறது. கி.பி 12ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இத்திருக்கோயிலின் பெருமையை திருப்பேரூர் தலபுராணத்தில் கச்சியப்ப முனிவர் அருள்பொதிந்த வரலாறாகப் பாடியுள்ளார். திருப்புகழில், அருனகிரினாதர் அவர்கள், இம்மலையைப்பற்றி பாடும் பொழுது, "அரவணை துயிலும் அரிதிரு மருகா அணிசெயு மருதமலையோனே அடியவர்வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவுபெருமாளே" என குறிப்பிடுகிறார்.

மலையடிவாரத்தில் இருந்து, திருக்கோயில் செல்வதற்கு நடந்து படிக்கட்டுக்கள் வழியாகவும் செல்லலாம், மற்றும் வாகனங்கள் மூலமாகவும் செல்லலாம். மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேலே செல்வதற்கு தேவஸ்தான பேருந்துகளும் இயக்கப்படுகிறன. வாகனங்கள் செல்லும் பாதை 2.2 கி.மீ. நீளமுள்ளது. படிக்கட்டுக்கள் வழியில் செல்வதானால், சுமார் 800 படிகளை ஏறிச்செல்ல வேண்டும். படிக்கட்டுக்களின் உய்ரம் சிறியதாகவும், படிக்கட்டுப் பாதையின் சாய்மானம் மிகவும் சாய்ந்தும், நீண்டும் இருப்பதால், ஏறுவதற்கு அவ்வளவு சிரமமாக இருப்பதில்லை. ஏறும் வழியில் 15 க்கும் மேலான நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருப்பது பக்தர்களுக்கு சற்று இளைப்பாறவும், மழை-வெயிலுக்கு ஒதுங்கிக்கொள்வதற்கு வசதியாகவும் உள்ளது.

மலையடிவாரத்தில், படிக்கட்டுப் பாதையின் தொடக்கத்தில், சுமார் நூறடி தூரத்தில் இடது புறமாக "தாந்தோன்றி வினாயகர்" ஆலயம் உள்ளது. இவ்வினாயகர், சுயம்புவாகவும் இயற்கையிலேயே அமைந்த மிக்க அழகுடனும் காணப்படுகிறார். இவ்வினாயகாரின் சிறப்பினை, மருதமலைத் தாந்தோன்றிப் பதிகத்தில், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், "மிக்க தமிழ்ப் புலவர் பலர் மேன்மேலும் போற்றிசைக்க தக்க புகழ் மருதமலைத் தாந்தோன்றிக் கணபதியே" எனக் கூறியுள்ளார். தாந்தோன்றி வினாயகரை வணங்கி, பின்ன்ர் படிக்கட்டுக்களில் ஏறிச்சென்றால் வழியில் இடும்பன் கோயில் உள்ளது.

இடும்பனை வணங்கினால், குழந்தை பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், பக்தர்கள் இடும்பனை வணங்கி பயன் பெறுகிறார்கள். இடும்பன் கோயிலில் இருந்து மேலேறிச்சென்றால், அன்னதான மண்டபமும், முடி காணிக்கைச் செலுத்தும் இடமும் வருகிறது. அதற்கு எதிரே புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் "ராஜ கோபுரம்" கம்பீரமாக காட்சியளிக்கிறது. அங்கிருந்து சில படிகள் ஏறி மலை உச்சியை அடைந்தால், நேர் எதிரில், ஆதி மூலஸ்தான சன்னதி தனிக் கொடிமரத்துடன் காட்சியளிக்கிறது. ஆதிமூலஸ்தான சன்னதியில் வள்ளி, தெய்வயானை, முருகர் மூவரும், லிங்க வடிவத்தில் அருவுருவத் திருமேனியாக, காட்சிதருகின்றனர். முதல் பூஜை இந்தச் சன்னதியிலேயே தொடங்கப்பெறும்.

அங்கிருந்து சற்று மேலே ஏறி மூலவர் சன்னதிக்குச் செல்லும் வழியில், ஐந்து மரங்கள் ( கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கணைமரம் மற்றும் ஒட்டு மரம் ஆகியன) ஒன்றாகப் பின்னிப் பிணந்து வளர்ந்த அழகிய "பஞ்ச விருட்சம்" உள்ளது. இது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும். இம்மரத்தின் கீழ் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பஞ்சமுக வினாயகர் சிலை உள்ளது. இங்கு வணங்கிவிட்டு அருகில் உள்ள மூலவர் சன்னதிக்குச் செல்லலாம். மூலவர் சன்னதிக்கு பிரகாரச் சுவர்கள் இன்னும் அமைக்கப்படவில்லை. இங்கே மூலவர், சிரசில் கண்டிகையுடனும், பின்பக்கம் குடுமியுடன் கோவணங்கொண்டு , வலது திருக்கரத்தில் ஞானத் தண்டேந்தி, இடது திருக்கரத்தை இடையில் அமைத்து, வினைகளை வேரறுத்து யமன் பயம் தீர்த்து, உண்மையறிவை அறியச்செய்யும் நீண்ட வேலோடு உலகைக்காககும் மருதாசல மூர்ததியாக அருள் பாலிக்கிறார். இங்கே மருத தீர்த்தம், கன்னி தீர்த்தம் மற்றும் கந்த தீர்த்தம் என்னும் தெய்வத்தன்மை மிக்க தீர்த்தங்கள் உள்ளன.

பிரதான மூலவர் சன்னதிக்கு வெளியில் வலது புறமாக அருள்மிகு பட்டீஸ்வரர் சிவன் சன்னதியும், இடதுபுறம் அருள்மிகு மரகதாம்பிகை சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. அருள்மிகு மரகதாம்பிகை சன்னதிக்கு எதிரே நவக்கிரகங்கள் சன்னதியும், மூலவருக்கு முன்புறம் அமையப்பெற்ற அலங்காரமண்டபத்தில், மூலவருக்கு இடதுபுறம், வரதராஜப்பெருமாள் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. நவக்கிரகங்களுக்கு எதிரே தங்கரத மண்டபம் உள்ளது. கொடிமரத்தின் அருகே விழுந்து நமஸ்காரம் செய்தபின், பஞ்சவிருட்சத்தின் பின்புறம் அமைந்த படிகட்டுக்கள் பாதை வழியாக சுமார் 100 படிகள் கீழிறங்கிச்சென்றால், பாம்பாட்டிச்சித்தர் குகைக்கொயிலுக்குச் செல்லலாம். செல்லும் வழியில், அற்புதமான நீர் சுனைக்கு அருகில், சப்தகன்னிமார் சன்னதியை தா¢சிக்கலாம்.

பாம்பாட்டிச் சித்தர் சன்னதியில் உள்ள பாறையானது பாம்பு வடிவத்தில் இயற்கையாக அமைந்துள்ளது. இந்த குகையிலிருந்து, பாம்பாட்டிச் சித்தர் சுரங்கப்பாதை மூலமாக ஆதிமூலஸ்தானத்தில் உள்ள வள்ளி, தெய்வயானையுடனமர் முகப்பெருமானை வழிபட்டு வந்தாராம். பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டிச் சித்தர் தம் இளமைக்காலத்தை இம்மலையிலும், அங்கமைந்த குகைகளிலும் கழித்தார் எனவும், அவர் இங்கு பாம்புகளைப் பிடித்து விளையாடி, பல சித்து விளையாட்டுக்களை நிகழ்த்திக் காட்டியதால் பாம்பாட்டிச் சித்தர் எனப் பெயர் பெற்றார். பின்னர் சட்டை முனிவரைச் சந்தித்து, போக நெறியில் சமாதி நிலை கூடும் வல்லமைகள் கைவரப்பெற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரங்கோயில் அருகே சமாதி நிலை அடைந்தார் என கூறுகிறார்கள். பாம்பாட்டிச் சித்தர் சன்னதியில் பலரும் விரும்பி தியானம் செய்கிறார்கள். அங்கிருந்து திரும்பவும் மேலேறி வந்து, மூலவர் சன்னதியை வலம் வந்து, பின் படிகட்டுக்களில் இறங்கி வரலாம்.

{qtube vid:=-VrS5_wB02U} இத்திருக்கோயிலில், நடையடைப்பு என்பது மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை மட்டுமே. மற்றபடி காலை 6.00 மணியிலிருந்து இரவு 8.30 வரை இறைவனை தாரிசிக்கலாம். கட்டளைதாரர்களின் விண்ணப்பங்களைப் பொருத்து, மாலை 6.00 மணியளவில் பெரும்பான்மையான நாட்களில் தங்க ரத உலா நடைபெறுகிறது. மலைச்சாலையிலும், படிக்கட்டுகளின் இருபுறமும், மின் விளக்குகள் அமைக்கப்பெற்று, பக்தர்கள் பயமின்றி வந்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் திருமணத்தடை ஏற்படுவோர் இத்திருக்கோயில் சுவாமிக்கு, பொட்டுத்தாலி, வஸ்திரம் வைத்து கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும், குழந்தை இல்லாத தம்பதியர், 5 வாரம் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து வழிபாடு செய்தால் நிசசயம் முருகனின் அருள் கிடைக்கும்.

Tags; திருமணத்தடை நீக்கும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி, மருதமலை மாமணியே , மருதமலை முருகன்

நன்றி சிவச்சந்திரன் கனடா

Leave a Reply