மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு சரியான ஒத்துழைப்பு அளிப்பதில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
தமிழக சட்டமன்ற  தேர்தல் குறித்து பிஜேபி மைய குழு கூட்டம் கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் காலை நடைபெற்றது. இந்தகூட்டத்தில்  தமிழக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மையகுழு உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.


இந்த கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலில் பிஜேபி தனதுபணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. தற்போது தேர்தலை சந்திக்க தீவிரமாக களமிறங்க திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏற்கனவே  முதல் கட்ட 54 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.


தேர்தல் பணிகள், பிரச்சாரம், அறிக்கை உள்ளிட்டவை குறித்து மையகுழு இன்று ஆலோசனை நடத்தியது.  ஏப்ரல் 4-ந்தேதி 2-ம் கட்ட வேட்பாளர்பட்டியல் அறிவிக்கப்படும்.  அன்றைய தினமே தமிழகத்தில் பிஜேபி கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை ஊழலற்ற வெளிப்படையான தமிழகத்தை வளர்ச்சிபாதைக்கு  கொண்டுசெல்லும் நோக்கத்துடன் தமிழக பிஜேபி இந்ததேர்தலை சந்திக்கிறது.


அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும்  ஊழலால் தமிழகத்தை வீழ்ச்சிபாதைக்கு கொண்டு சென்றுள்ளது.  அவர்களிடமிருந்து மீட்டு தமிழகத்தை ஊழல் இல்லாத  ஆட்சியின் மூலம் வளர்ச்சிபாதைக்கு கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்.   மத்திய அரசின் உதய் மற்றும் உஜாலா திட்டங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. உதய்திட்டத்தை பொறுத்தவரை இந்தியாவில்  மின் திட்டங்களை மேம்படுத்துவதற்காகவும் மின்திருட்டை தடுப்பதற்காகவும் நஷ்டத்தில் இயங்கிவரும் மாநில மின் வாரியங்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகவும் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம்தான் உதய் திட்டம்.


இந்த திட்டத்தில் இந்தியாவில் 18 மாநிலங்கள் தங்களை இணைத்து கொண்டுள்ளது. அதாவது பிஜேபி ஆளும் மாநிலங்கள் மட்டுமல்லாது காங்கிரஸ், ஜேடியூ உள்ளிட்ட கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கூட இந்த திட்டத்தில் தங்களை  இணைத்து கொண்டுள்ளன.


இந்ததிட்டத்தின் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.  ஆனால் தமிழகம் இந்த திட்டத்தின் இணையாத காரணத்தினால் கடந்த ஓராண்டில் மட்டும் 12 ஆயிரம்கோடி ரூபாய் தமிழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  இதே போல மத்திய அரசின் மற்றொரு திட்டமான உஜாலா திட்டத்தின் மூலம் அதாவது 7 வார்ட்ஸ் எல்இடி பல்புகள் ரூ.380க்கு வழங்கப்பட்டுவருகிறது.  இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் 9 கோடி மக்கள் பயடைந்துள்ளனர். ஏராளமான மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது.  ஆனால் குறைந்தவிலைக்கு  மத்திய அரசு எல்இடி பல்புகளை வழங்கி வரும் போதிலும் தமிழக அரசு இதைவாங்க மறுத்து வெளி சந்தையில் இருந்து அதிக விலைக்கு இந்த பல்புகளை வாங்கி வருகிறது.


இதேபோன்று என்னுடைய துறை  சார்பாக மேற்குதொடர்ச்சி மலை சுற்றுச்சூழல்  தொடர்பான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. 7 மாநிலங்களை உள்ளடக்கிய திட்டமாகும்.  இந்ததிட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. மகாராஷ்டிரா, கோவா, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்கள் தங்கள் அறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.


ஆனால் தமிழக அரசு மட்டும் ஒருவருடமாகியும் இதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வில்லை.  இதே போன்று நாடுமுழுவதும் மணல்வளத்தை காக்கும் பொருட்டும் மணல் திருட்டை தடுக்கும் பொருட்டும் மத்திய அரசு புதிய  மணல்கொள்கையை வகுத்துள்ளது.  இந்ததிட்டமானது நாட்டின் எந்த பகுதியில் மணல் வளம் அதிகமாக உள்ளது. எங்கு மணலை எடுக்கவேண்டும் உள்ளிட்டவைகள்  செயற்கை கோள் மூலம் கண்காணித்து மத்திய அரசுக்கு திட்டம்வகுத்து  தற்போது அதனை பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது.

அதாவது மணல் எடுக்கும் காண்டிராக்டர்களுக்கு அவர்கள் எடுக்கும் மணல்லோடுகளுக்கு  பார்கோடு பதித்த செக் வழங்கப்படும். இதனை சம்பந்தப்பட்ட குவாரியில் அளித்து அதில் குறிப்பிட்ட மணல்மட்டுமே எடுக்க  முடியும். இவைகளையெல்லாம் செயற்கை கோள் மூலம் மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்கும். இந்த திட்டத்தில்கூட தமிழக அரசு தங்களை இணைத்து கொள்ள தயக்கம  காட்டி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply