பிரதமர் நரேந்திர மோடி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு செவ்வாய்கிழமை பிரத்தியேக பேட்டியளித்தார். அப்போது ஸ்மிதா எழுப்பிய பல்வேறு கேள்விகள் தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:

4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்துள்ளீர்கள். இந்தக் காலக்கட்டத்தில் உங்களால் எதாவது சாதிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா..?’

அதற்கு ஆழ்ந்து யோசித்துப் பின்னர் பேசிய பிரதமர், ‘இருக்கிறது… ஒருவிஷயம் இருக்கிறது. மேல்தட்டு மக்களின் வாழ்க்கையோடு என்னால் ஒன்றிப் போக முடியவில்லை. அதன் ஒரு பகுதியாகவும் என்னால் ஆக முடியவில்லை. இந்தவிஷயம் எனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் தரவில்லை.

மேல்தட்டு மக்கள் என்வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென்று நான் என்றும் நினைத்ததில்லை. காரணம், எனது பின்புலம் சாதரணமானது. நான் எளியமக்களின் பிரதிநிதி’

பிரதமராக இருந்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் எதுவாக இருந்தது’.

‘நான் பிரதமராக இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். எனது வேலையில் ஒரு நேர்மை இருக்கும். எனவே, நான் பணி செய்யும் ஒவ்வொரு நிமிடமும் விருப்பத்துடனேயே செய்தேன். மக்கள்தான் எனது பதவிக்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டும்’

ராமர் கோயில் விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் படுகிறதே?,

அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக உள்ளது. இருப்பினும் அதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே அந்த நடைமுறைகள் முடிந்த பின்னர், ராமர் கோயில் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் தான் வேண்டுமென்றே தடையாக இருந்து வருகின்றனர். எனவே நாட்டின் அமைதியை பாதுகாக்கும் விதமாக அயோத்தி வழக்கில் முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருவதை நிறுத்திக்கொள்ளுமாறு தங்களது வழக்கறிஞர்களிடம் காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எந்தத் தடையுமின்றி நடைபெற வேண்டும்.

இந்திய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்த கேள்வி,

துல்லியத் தாக்குதல் குறித்து எதிர்கட்சியினர் பல அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். அந்த நடவடிக்கை நடைபெற்ற அடுத்த நாளே ராணுவ வீரர்கள் மீது எதிர்கட்சியினர் அவதூறு பரப்பினர். அதில் பாகிஸ்தான் அரசு எந்த துல்லியத் தாக்குதலிலும் இந்தியா ஈடுபடவில்லை என்று கூறியதை நமது நாட்டின் அரசியல் தலைவர்களும் பரப்புரை செய்தனர். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே அவர்கள் செயல்பட்டனர்.

`உரி ராணுவ முகாம்மீது பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தியதில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். `அன்று முதல் அதற்கு தக்க பதிலடி வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன். இந்த துல்லியத் தாக்குதல் நடவடிக்கை திட்டமிடப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. ஏனெனில் நமது வீரர்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வேண்டியிருந்தது. மேலும் துல்லியத் தாக்குதல் சம்பவத்தின் போது அது வெற்றி அல்லது தோல்வி என்பதை விட திட்டமிட்டபடி மாலைக்குள் திரும்பிவிட வேண்டும் என்று மட்டும் தான் நான் நமது ராணுவ வீரர்களுக்கு கோரிக்கையாக முன்வைத்தேன்.
இந்த நடவடிக்கை மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து தான் நாங்கள் அனைவரும் செயல்படுத்தினோம். இதில் எனது அரசியல் எதிர்காலம் குறித்து நான் எதையும் சிந்திக்கவில்லை. நான் வருந்தியதெல்லாம் நமது வீரர்களின் பாதுகாப்பு குறித்து மட்டும்தான். துல்லியத் தாக்குதல் நடந்தபோது நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். கடைசி வீரர் திரும்பும் வரை அது தொடர்ந்தது. நல்லவேளையாக இந்த சம்பவத்தின் போது நமது வீரர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதை அறிந்த பின்பு தான் எனக்கு நிம்மதியடைந்தது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், அதன் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபடும் என்பதில் சந்தேகமில்லை. எனவே பாகிஸ்தான் மீது இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும். நான்கு போர்களுக்கு பின்னும், பாகிஸ்தான் திருந்திவிட வில்லை. இந்த ஸ்ட்ரைக்கால் திருந்தி விடும் என்று நம்புவது குழந்தைத்தனம். அது திருந்த இன்னும் சிலகாலம் ஆகும்.

உர்ஜித் படேல் பதவி விலகல் குறித்த கேள்வி,

`ரிசரவ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகக் கேட்டுக்கொண்டார். அவரின் ராஜிநாமா முடிவை சில மாதங்களுக்கு முன்னதாக என்னிடம் சொன்னார். அவர் சிறப்பாகப் பணியாற்றிவர். எனவே, அவர் பதவி விலகியதில் எந்த அரசியல் நிர்பந்தமும் இல்லை’ என்றார்.

பணமதிப்பிழப்பு .பற்றிய கேள்வி.

‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை திடீரென செயல்ப டுத்தியது அல்ல. அது அவசர அவசரமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக் கிடையாது. தெளிவாகத் திட்டமிட்டு செயல்படுத்தினோம். அதனைச் செயல்படுத்துவதற்கு ஒராண்டு முன்னரே, கறுப்புபணம் வைத்திருப்பவர்கள் வங்கிகளில் அபராதத்தொகையுடன் டெபாசிட் செய்துவிடுங்கள் என்று எச்சரித்தோம். சிலர் மட்டுமே அந்த எச்சரிக்கையைக் காதில் வாங்கிக்கொண்டனர்’.

5 மாநில தேர்தல் பற்றிய கேள்வி,

`ஆமாம், நாங்கள் சத்தீஸ்கரில் தோற்றுப்போனது உண்மைதான், தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை வெற்றிபெற வில்லை. அதனால், கவலையில்லை. மேலும் மோடி அலைமீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த ஆண்டு பா.ஜ.க-வுக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வாயிலாகப் பல லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியிருக்கிறோம். இன்னும் நிறையத் திட்டங்களை செயல்படுத்தினோம்.

ஜி.எஸ்.டி குறித்த கேள்வி..

எண்ணம் போன்றுதான் பேச்சும், அதுவே ராகுலின் நடவடிக்கைகளில் உள்ளது. ராகுலின் தவறான புரிதல்கள்தான் அவரது நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது. ஜிஎஸ்டி மிகவும் நிதானமாக பல ஆலோசனைகளுக்கு பிறகுதான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி விவகாரத்தில் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அவை அதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஒப்புதல்களுக்குப் பிறகு தான் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும் அது அனைவருக்கும் நன்மை செய்யக்கூடியதாகவே வடிவமைக்கப்படும். கட்டுமான பொருட்களின் மீதான வரி 5 சதவீதத்துக்கு குறைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், அதற்கு சில தடைகள் உள்ளன. எனவே தான் அதை செயல்படுத்தாத நிலையும் நிலவுகிறது. இதுதற்போது ஜிஎஸ்டி பரிந்துரைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பயனாளர்களின் நலனை கருத்தில் கொண்டுதான் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வளவு பெரியநாட்டில் இத்தனை சிறியகாலத்தில் எவ்வளவு சாதித்திருந்தாலும், அது மிக சிறியதாகவே தெரியும். மேலும் ஒவ்வொன்றிலும் மேன்மைப்படுத்தி கொள்ளவும் காலம் உள்ளது.

எனவே ஜிஎஸ்டியில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
1,200 முதல் 1,250 தினசரி பயன்பாட்டுப் பொருட்கள் மீதான வரி 18, 12 மற்றும் 5 சதவீதங்களுக்கு குறைக்கப்பட்டு வருகிறது. 500-க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இருந்த 30 முதல் 40 சதவீதம் வரையிலான மறைமுக வரி களையப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜிஎஸ்டியில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து கட்சியினரின் முழு ஒப்புதலோடும் தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.

இது மத்திய நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோதிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்திலும் ஜிஎஸ்டி மசோதா சுமூகமாகவே தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் அனைத்து கட்சி, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதகளும் இடம்பெற்றுள்ளனர். இதில் அனைவருக்கும் சம பங்கு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது அரசியல் பல்டி. இதன்மூலம் விவசாயிகளை காங்கிரஸ் கட்சி பொய் கூறி தவறாக வழிநடத்துகிறது. ஆனால் இது நடைமுறை சாத்தியம் கிடையாது. ஒரு பொறுப்பு மிகுந்த அரசியல் கட்சி இதுபோன்று செய்வது மிகவும் தவறானதாகும்.

முத்தலாக் மற்றும் ஐயப்பன் கோயில் விவகாரம் குறித்த கேள்விக்கு

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு தான் முத்தலாக் தடை மசோதா கொண்டுவரப்பட்டது. முத்தலாக் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் தடை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் கூட முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண், பெண் பாகுபாடு களையப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இது சமூக நீதியாகும், இதனை நம்பிக்கையுடன் சேர்த்துப்பார்க்கக் கூடாது.
அனைவருக்கும் சட்டம் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நோக்கம். இங்கு பல கோயில்களில் தனிப்பட்ட பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. பல கோயில்களில் ஆண்கள் செல்லக் கூடாது என்ற பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று அங்கு செல்வதை ஆண்களும் தவிர்த்து வருகின்றனர். சபரிமலை விவகாரத்தில் அந்த பெண் நீதிபதியின் தீர்ப்பு ஆராயப்பட வேண்டியது. எனவே அதற்கு எந்த அரசியல் சாயமும் பூசாமல் பார்க்கப்பட வேண்டியது முக்கியம். சபரிமலை விவகாரத்தில் அந்த பெண் நீதிபதி கூறிய சில கருத்துக்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட வேண்டும். என்றார்

மேலும் தனது பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாவது..கங்கை முன்பைவிட தூய்மையாகி இருக்கிறது.அப்பணி தொடர்ந்து செயல்படும்.

தெற்கில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என்று கூறுவது அறியாமை. பா.ஜ.க. முன்பு ஆட்சியில் அமராத பலமாநிலங்களில் இன்று வெற்றி பெற்றிருக்கிறது! நாங்கள் வரும் தேர்தலில் எங்கள் பலத்தைக் காட்டுவோம்.

கூட்டணி கட்சிகள், பா.ஜ.க.வினால் வளர்ந்திருக்கின்றன. காங்கிரசைப்போல, கூட்டணி கட்சிகளை அழிக்க நாங்கள் முற்பட்டதில்லை.

நாடாளுமன்றத்தில் நெடிய விவாதம் நடைபெறாமல் போவது, நாட்டிற்கு இழப்பு. அரசையும், அரசு நிர்வாகத்தையும் முற்றுகையிடும் ஒரேவாய்ப்பு நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு. அதுவிவாதத்தின் மூலமே முடியும். ஒரு சில அரசியல் கட்சிகளின், எண்ணிவிடக்கூடிய அளவில் உள்ள தலைவர்களின் பிடியில் இந்தவிவாதம் இருப்பது வருத்தமானது. அதனால், அரசும், அரசு அதிகாரிகளும் எந்தவித சவாலுமின்றி நிம்மதியாக உள்ளனர்.

நாட்டிற்கு துரோகம் செய்த ஒருவனை (மிஷல்) நம் விசாரணை அமைப்பு கைதுசெய்து கொண்டுவந்திருக்கிறது. இதை பாராட்டுவதற்கு பதிலாக, அவனை ஜாமீனில் எடுக்க ஒரு கட்சி வக்கீலை அனுப்புகிறது என்றால் என்னவென்பது!

ஊழலில் ஈடுபட்ட எந்தவொரு காங்கிரஸ் தலைவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 4 தலைமுறைகளாக இந்த நாட்டில் ஆட்சி செய்து வந்த குடும்பத்தினர் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 2ஜி, காமன்வெல்த் மற்றும் நில அபகரிப்புகளில் ராபர்ட் வாத்ரா போன்றவர்கள் தற்போது சுதந்திரமாக சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ப.சிதம்பரம் போன்றவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு பழிவாங்கும் நடவடிக்கைகளில் பெரியளவில் விருப்பமில்லை. இதில் வரும் தீர்ப்புகளின் அடிப்படையில் அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆனால், அவை தாமதிக்கப்படாமல் உடனடியாக நடைபெற வேண்டும்

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நான் ரஃபேல் பற்றி விளக்கம் அளித்திருக்கிறேன். அமைச்சர்கள், அதிகாரிகள், பிரான்ஸ் அரசு, உச்சநீதிமன்றம் என்று பலரும் விளக்கி, ஊழல் எதுவும் நடக்கவில்லை என கூறிவிட்ட பிறகும், கல்லெறிந்துவிட்டு ஓடிவிடுவது போல, திரும்பத்திரும்ப ஊழல் என்று கூறுவது எந்தவகை நியாயம். பத்திரிகையாளர்களான நீங்களும் நியாயமாக நடந்துக் கொள்ள வேண்டும். அப்படி வினா எழுப்புபவர்களிடம், “இத்தனைப் பேர் விளக்கம் கூறியும், ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறீர்களே, உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன” என்று கேட்பதில்லை!!

முந்தையப் பிரதமர்களைப் போலவே, ஏறத்தாழ, ஒரேயளவு வெளிநாட்டுப் பயணங்களைத்தான் நானும் மேற்கொண்டிருக்கிறேன். சற்று கூடுதலாக இருக்கக் காரணம், முன்பைபோலில்லாமல், இப்போது பல பன்னாட்டு உச்சி மாநாடுகளில் கலந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது! அமைச்சர்களையோ அதிகாரிகளையோ அனுப்பி விட்டால், நம்முடைய வருகையும், முன்வைத்த விஷயங்களும் கண்டுக்கொள்ளாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது!.

இதற்கு முன்பும், பல பிரதமர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். அவை, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கவனிக்கப்படாமல் போனது வருத்தமான விஷயம்!

என்னுடையப் பணியை விருப்பு, வெறுப்பின்றி செய்தேன். எடுத்துக்கொண்ட அனைத்து பணியையும் மகிழ்ச்சியுடன் செய்தேன். என் பணி மீது மதிப்பீடு செய்ய வேண்டியவர்கள் பொதுமக்களே!

நன்றி தமிழ் தாமரை வி எம் வெங்கடேஷ்

Leave a Reply