முன்னொரு காலத்தில் சூர்ய வம்சத்தை சேர்ந்த பஹு எனும் மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் மிகவும் நேர்மையான முறையில் ஆட்சியை நடத்தி வந்தவன். அவன் ஆட்சியில் அனைத்து தர மக்களும் குறை இன்றி வாழ்ந்து வந்தார்கள். அவன் எழுலோகத்திலும் அஸ்வமேத யாகம் செய்து நாட்டை செழுமை ஆக்கினான். ஆகவே

அவனது நேர்மையையும், நல்ல குணங்களையும் கண்ட கடவுட்கள் அவனது ராஜ்யத்தில் அனைத்தையுமே அபரீதமாக கொடுத்தார்கள்,

பருவ மழை தப்பவில்லை. காய் கனிகள் சீண்டுவார் இன்றி செழித்துக் கிடந்தன. உணவோ பஞ்சமின்றி அனைவருக்கும் கேட்டதற்கும் அதிகமாகவே கிடைத்து வந்ததினால் மக்கள் மனதார மன்னனை போற்றி வந்தார்கள். அண்டை நாட்டவர் அவன் நாட்டின் மீது படைஎடுக்கவே பயப்படும் அளவிற்கு அவன் பலம் மிக்க அரசனாக இருந்தான்.

நாளாக நாளாக அவன் பெற்றப் பெருமையினால் அவன் புத்தி பேதலித்தது. இந்த சுபீஷத்திற்குக் காரணமே நான்தானே என்ற எண்ணம் மேலோங்க மேலோங்க அவனுக்கு தலை கனம் அதிகரித்தது. 'எப்போதுமே ஒரு பிசாசு உள்ளே வந்து விட்டால் அடுத்தடுத்து அதன் பிசாசின் குடும்பமே உள்ளே நுழைந்து விடும்' என்று ஒரு பழமொழி உண்டு. அதுவே அந்த மன்னனின் வாழ்க்கையிலும் நடந்தது. தலைகனம் பிடித்தவன் பொறாமை உள்ளம் கொண்டவன் ஆனான். அனைத்தும் தனக்கே என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டவன். பிராமணர்களைக் கொன்றான். மன்னனின் சுகபோகம் அதிகரித்தது.

மாற்றான் மனைவிகளைக் கவர்ந்தவர்களைக் கூட தண்டிக்காமல் அவர்களுடன் நட்பு கொண்டு இருந்தான். அந்த மன மாற்றங்கள் அவன் ஆட்சியில் பிரதிபலித்தது. மக்கள் நலனில் நாட்டம் குறையத் துவங்க கொடுங்கோல் ஆட்சி நடைபெறத் துவங்கியது. மக்கள் வாட்டி வதைக்கப்படலாயினர். மெல்ல மெல்ல மக்களின் மனதில் இருந்து அவன் விலகத் துவங்கினான். அவனது தீய செய்கைகளினால் அவன் உடல் நலனும் பாதிக்கப்பட அவன் பலவீனமானவனாக மாறினான்.

அண்டை நாடுகளில் இருந்தவர்கள் அந்த மன்னன் மீது ஏற்கனவே பொறாமைக் கொண்டு இருந்தார்கள். அவன் புகழ் குறையத் துவங்க, இதுவே தருணம் என அவன் நாட்டின் மீது அண்டை நாட்டு மன்னர்கள் படையெடுத்து வர ஒவ்வொரு பகுதியாக நாட்டின் பல பகுதிகளையும் இழந்து கொண்டே வந்த மன்னன் பஹு தன்னைக் காத்துக் கொள்ள தனது இரண்டு மனைவிகளில் இளையவளுடன் தப்பிச் சென்று காட்டுப் பகுதியில் ஒளிந்து கொண்டான். அந்தக் காடோ மிகப் பெரியதாக இருந்தது . எளிதில் யாராலும் நுழைய முடியாத வனப் பகுதி அது.

அவன் நல்ல மன்னனாக ஆட்சி புரிந்தபோது அந்தப் பகுதிக்கெல்லாம் பல முறை சென்று இருந்ததினால் அந்த வனப் பகுதியின் அத்தனை இடமும் அவனுக்கு அத்துப்படியாகவே இருந்தது. ஆகவே பயமின்றி வனத்தில் ஒரு குடிசை அமைத்துக் கொண்டு மனைவியுடன் தங்கினான். இனி நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தவன் மனதில் நாளாக நாளாக பயம் தோன்றது துவங்கியது. ஓடைகளில் இருந்த நீரை குடித்துக் கொண்டும், அந்த நீரை எடுத்து வந்து அதில் குளித்து விட்டும் காலத்தை ஓட்டி வந்தார்கள். அதில் கொடுமை என்ன என்றால் அவன் இருந்தப் பகுதியில் இருந்த பறவைகளும், சிறு விலங்குகளும் கூட 'ஐயோ…பாவி மனிதன் வந்துவிட்டான்….அவன் உள்ள இடத்தில் நாம் இருந்தால் நமக்கும் அந்த பாவம் பற்றிக் கொள்ளும்' என்று கூறிக் கொண்டே அங்கிருந்து ஓடிச் சென்று விட்டன.

மிருகங்கள் மற்றும் பறவைகளின் பாஷைகள் புரிந்து இருந்ததினால் அவை பேசுவதைக் கேட்டு மனம் உடைந்து போனான் பஹு . எத்தனைப் பெரிய தவறை செய்துவிட்டேன் என மனம் உருகி அழுதான். அதற்க்கு மேல் அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதனால் அவன் உடல் மேலும் நலிவுற்றது. அவனுடைய இரண்டாவது மனைவியோ கர்பவதியாக இருந்தாள்.

நாளாக நாளாக உண்ணக் கூட சரிவரக் கிடைக்கவில்லை. காய் கனிகளை தின்றே காலம் ஓட்டினாலும் அவையும் எளிதில் கிடைக்கவில்லை. மன்னனால் நடக்கவும் முடியவில்லை என்பதினால் அந்த கர்பிணி மனைவியே அங்கும் இங்கும் அலைந்து அவனுக்கும் உணவைக் கொண்டு வந்து தந்தாள். ஒரு நாள் உடல் நலிவுற்ற மன்னன் மரணம் அடைந்தான். வேறு யாருமே உதவிக்கு இல்லாததினால் அனாதையாக இருந்த மனைவியோ, அவன் உடலை தகனம் செய்ய சிதையை மூட்டினாள். ஆதரவு அற்ற அவள் வேறு வழி தெரியாமல் தன் வயிற்றில் சுமந்து கொண்டு இருந்த குழந்தையுடன் சேர்ந்து அதில் தானும் விழுந்து உயிர் விடத் துணிந்து விட்டாள்.

அந்த கானகத்தின் இன்னொரு மூலையில் இருந்த ஆரவா முனிவர் அதை மனக்கண்ணால் பார்த்தார். 'என்ன தவறு செய்ய உள்ளால் இந்தப் பேதை பெண்' என எண்ணியவர் தனது யோக சக்தியினால் நொடிப் பொழுதில் அங்கு வந்து சேர்ந்து தீயில் குதிக்க இருந்த அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினார்.

அவளிடம் கூறினா '' அபலைப் பெண்ணே உன் நிலைமை எனக்குப் புரிகின்றது.. என்ன தவறான காரியம் செய்ய நீ துணிந்தாய். உன்னுடைய கணவனின் புகழுக்கு களங்கம் வந்துள்ளது உண்மைதான். ஆனால் அவர் பலருக்கும், ஏன் காட்டில் உள்ள எங்களுக்கும் துணையாக இருந்துள்ளார்…பல புண்ணியக் காரியங்களை செய்துள்ளார்….ஆனால் அந்தப் புண்ணியக் காரியங்கள் அவர் சந்ததியினரை – உன் வயிற்ருள் வளரும் குழந்தையும், உன்னையும் பாதுகாக்கும். தவறு செய்தவர் அவர் மட்டுமே என்பதினால் அதற்கான பலனை அவர் மட்டுமே பெறுவார். அவருடைய பூர்வ ஜென்ம சாபம் அவரை திசை மாற்றி விட்டது. அதை தடுக்க முடியாது.

நடப்பவை அனைத்தும் ஏதோ ஒரு காரணத்தினால்தான் நடைபெறுகின்றன என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அவர் செய்துள்ள புண்ணியங்கள் உன்னை ஒரு அரண் போல அல்லவா காத்து வருகின்றன. தவறு செய்பவருக்கு தண்டனைக் கிடைக்க வேண்டியது முறைதான். ஆனால் நீ என்ன தவறு செய்தாய்? நீயா அவரை தவறு செய்யத் தூண்டினாய்? அதற்குக் காரணம் அவரேதான் அல்லவா? அவர்தானே மகா பாவி ஆனார். உன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன பாவம் செய்தது? அதுவா அவரை தவறு செய்யுமாறு தூண்டிற்று? இல்லையே. அதை நினைக்காமல் தவறு செய்யாத குழந்தையை நீ ஏன் உன்னுடன் சேர்த்து தண்டிக்க விரும்புகிறாய்? நடந்துவிட்ட அவமானத்தை துடைத்தெறிய வந்துள்ள உன் வயிற்றில் வளரும் குழந்தையையும் அல்லவா நீ சாகடிக்க நினைத்துள்ளாய். தவறு பெண்ணே……

நீ செய்ய இருப்பது தவறான காரியம்….ஆகவே மனதை தளரவிடாமல் உன் கணவனுக்கு நீயே இறுதிக் காரியம் செய். உன் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாகப் பிறந்து இழந்த உனது கணவனின் நாட்டை மீண்டும் மீட்டு அவர் புகழை நிலை நாட்ட மன உறுதியை வளர்த்துக் கொள்'' என பலவிதமாக அவளுக்கு புத்திமதிக் கூறினார். அவளும் அதை ஏற்று தன் கணவனுக்கு இறுதிக் காரியங்களை செய்து விட்டு அங்கேயே தங்கிக் கொண்டு அந்த முனிவருக்குப் பணிவிடை செய்து வரலானாள். காலம் ஓடியது. அவள் நல்ல அழகான குழந்தையைப் பெற்று எடுத்தாள். அந்தக் குழந்தையும் வளர்ந்து முனிவர்களின் சகவாசத்தினால் நல்ல பண்புகளைப் பெற்றது.

வளர்ந்து வந்தக் குழந்தை பெரியவனாகி போர் வீரனைப் போல் ஆகி மெல்ல மெல்ல நல்ல பராக்கிரமத்தையும் பெற்று அந்த வனத்தில் முனிவர்களைக் காத்து வரத் துவங்கியது. இன்னும் காலம் ஓடியது. இதற்கு இடையில் பஹு இழந்த நாட்டில் ஒரே குழப்பம். பஹு மன்னனின் நாட்டில் படையெடுத்து வந்து ஆட்சியைப் பிடித்த மன்னர்களின் இடையே ஏற்பட்ட மோதல்களினால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பஹு மண்ணின் ஆட்சியே மேல் எனும் அளவிற்கு கொடுமைகள் அதிகரிக்க மன்னனின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க மக்கள் வனத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொள்ளத் துவங்கினார்கள். வனத்துக்கு வந்தவர்கள் சில நாட்களில் அங்கு முனிவர்களைக் காத்து வந்த இளம் வயதான பஹு மன்னனின் மகனை யார் எனப் புரிந்து கொள்ளாமல் அவனை சந்தித்து தம் நாட்டு நிலைமையைக் கூறி தம்மையும் கொடுங்கோலர்களிடம் இருந்துக் காக்குமாறு வேண்டினார்கள்.

அவர்களது நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட இளைஞனும் அந்த மக்களைக் கொண்டே பெரும் படைத் திரட்டினான். எந்த நாட்டில் இருந்து தன்னுடைய தந்தை துரத்தப்பட்டாரோ அதே நாட்டின் மீது படையெடுத்துச் சென்று நாட்டை மீட்டு அந்த நாட்டின் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள மீண்டும் சூர்ய வம்சம் தழைக்கத் துவங்கியது.

நாரத புராணத்தில் மஹா பாபிகள் எனக் கூறப்படுபவர் யார் என்பதை இந்த ஸ்லோகத்தின் மூலம் கூறி உள்ளார்கள்

ஸ்லோகம்

பிரம்ம ஹாக சுரபிகா ஸ்தேயேக குரு தல்பஹா
மகா பாதகி நஸ்வேதே தத் சம்யோகிக பஞ்சமா

விளக்கம்

பிராமணர்களைக் கொன்றவன், திருடன் , குடிகாரன் , தன் குருவின் மனைவியையே புணர்ந்தவன், மற்றும் இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு உள்ளவன் என்ற ஐந்து பிரிவினருமே மகா பாவிகள் எனப்படுவார்கள்.

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply