குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, 'துக்ளக்'கிற்கு அளித்த பேட்டியிலிருந்து முக்கிய பகுதிகள் இங்கே :

கேள்வி : குஜராத்தின் முதல் பெருமையாக வெளியில் தெரிவது 'இது முதலீட்டாளர்களின் சொர்க்கம்' என்பதுதான். அது எப்படிச் சாத்தியமாயிற்று என்ற ரகசியத்தை அம்பலப்படுத்துவீர்களா?

நரேந்திர மோடி : இதில் எந்த மூடு மந்திரமும் இல்லை. அர்ப்பணிப்பு, கடமையுணர்ச்சி, கடின உழைப்பு, உத்வேகம் இவைதான் அந்த ரகசியங்கள். வாழ்வதற்கும், தொழில் செய்வதற்கும் உலகத்திலேயே உகந்த கம்பீரமான மாநிலமாக குஜராத்தை ஆக்குவதே எனது நோக்கம். தொழில் விஷயத்தில் உலகம் முழுவதிலும் இன்று குஜராத் பெற்றுள்ள செல்வாக்கை நீங்கள் பார்க்கிறீர்கள். அரசியல் ஸ்திரத் தன்மை, சிறந்த நிர்வாகம், பலமான கட்டமைப்பு, சுமுகமான தொழிலாளர்கள் இவைதான் இந்த வெற்றிக்குப் பெரும் காரணங்கள். இங்கு வரும் ஒவ்வொருவரும், உலகத்தரம் வாய்ந்த சாலைகளைப் பார்த்து மட்டும் வியப்பதில்லை. குக்கிராமத்தில் கூடக் கிடைக்கும் தரமான தடையற்ற மின்சாரத்தைப் பார்த்தும் வியக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் சராசரி வருடாந்திர வளர்ச்சியாக 10.4 சதவிகிதத்தை நாங்கள் அடைந்து வருவதைப் பார்த்து வியக்கிறார்கள். இந்தியாவின் ஏற்றுமதியில் குஜராத்தின் பங்களிப்பு சுமார் 22 சதவிகிதமாக இருப்பதையும், இந்திய உற்பத்தித் துறையில் எங்கள் பங்களிப்பு 27 சதவிகிதமாக இருப்பதையும் பார்த்து வியக்கிறார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் வந்து வர்த்தகம் செய்வதற்குத் தேவையான நல்ல சூழலை எனது அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இங்குள்ள தொழிலாளிகளால் குஜராத் என்றும் நெருக்கடிக்கு ஆளாவதில்லை. வேலை நிறுத்தம் என்பதே இல்லை என்பதை நான் பெருமையோடு கூறிக் கொள்ள முடியும். அதோடு, வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, போதுமான கல்வியறிவு மற்றும் பயிற்சியை எங்கள் இளைஞர்களுக்கு நாங்கள் வழங்கி வருகிறோம். கல்வி முறைக்கும், தொழில்கள் குறித்த அறிவுக்குமான இடைவெளியைப் போக்கும் லட்சியத்துடன் 'குஜராத் அறிவுக் கழகம்' போன்ற அமைப்புகளை உருவாக்கிப் பாடுபட்டு வருகிறோம். துடிப்பான குஜராத்தை உருவாக்க அடிக்கடி 'வைப்ரண்ட் குஜராத்' என்ற தொழில் முதலீட்டு உச்சி மாநாட்டை நடத்தி வருகிறோம். அதன் மூலம் நூற்றுக்கணக்கான பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடுகள் இங்கு குவிகின்றன. நாம் பெறும் வெற்றி, மேலும் மேலும் நம்மிடம் வெற்றியைக் குவிக்கும் என்ற பொன்மொழிக்கு மிகச் சிறந்த உதாரணமாக, வலுவான பொருளாதாரத்துடன் நாங்கள் பெற்று வரும் தொடர் வெற்றியைக் குறிப்பிடலாம்.

கேள்வி : இந்தியாவின் பல மாநிலங்களில், புதிய தொழிற்சாலை ஒன்று வருகிறது என்றால், உடனே சுற்றுச் சூழல் பாதிப்பு, விவசாயிகளுக்குப் பாதிப்பு, கிராமங்களுக்குப் பாதிப்பு என்று கூறிக் கொண்டு, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளும் கூற, அதனால் தூண்டி விடப்படும் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்து விடுகிறார்கள். இதனால் தொழிற்சாலை வராமலே போகிறது. ஆனால், குஜராத்தில் மட்டும் தொடர்ந்து தொழிற்சாலைகள் வந்த வண்ணம் உள்ளன. இது எப்படி முடிகிறது? மக்களை மயக்க என்ன வசிய மருந்தைப் பயன்படுத்துகிறீர்கள்?

பதில் : இந்த அரசு எதைச் செய்தாலும், இங்குள்ள மக்களுக்கு இடையூறாக எதையும் செய்து விடாது என்ற நம்பிக்கையை வளர்த்து வைத்திருக்கிறேன். அதுதான் அந்த வசிய மருந்து. இது உடனே ஏற்பட்டு விடாது. பல ஆண்டுகளாக நேர்மையின் மூலமும், மக்கள் மீது காட்டும் அக்கறையின் மூலமும் இந்த நம்பிக்கையை உருவாக்கி உள்ளேன். ஒருபுறம் நாங்கள் தொழில் துறையில் பிரமாண்டமான வெற்றிகளை ஈட்டி வந்தாலும், குஜராத்தில் விவசாய நிலங்கள் ஒன்றும் குறைந்து போகவில்லை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலம் 106 லட்சம் ஹெக்டேராக இருந்தது. தற்போது அது 145 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. தொழில் துறையில் நவீன முறைகளைக் கையாளும் குஜராத், விவசாயத் துறையிலும் நவீன அறிவியல் அணுகுமுறையைக் கையாள்வதுதான் இதற்கு முக்கியக் காரணம். நவீன தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட தண்ணீர் மேலாண்மை, கிராமப்புறக் கட்டமைப்பு, தனியார் முதலீடு போன்ற விரிவான திட்டங்கள், விவசாயத்தை லாபகரமாக்கும் என்பதை, நாங்கள் எங்கள் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்துள்ளோம். இன்று குஜராத் விவசாயி கர்வத்துடன் விவசாயம் செய்கிறான். கடந்த 10 வருடங்களில், ஒரு விவசாயி அடையும் வருமானம் ஆறு மடங்காக உயர்ந்துள்ளது. மாநில விவசாய வருமானம் 14 ஆயிரம் கோடியிலிருந்து நம்ப முடியாத அளவிற்கு, 80 ஆயிரம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது. இன்று உலகளவில் மிகவும் தேவைப்படுகிற சுற்றுச்சூழல் குறித்த அக்கறையோடுதான், குஜராத் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துகிறது. நம் நாட்டிலேயே தட்பவெப்ப நிலை மாறுதலுக்கான தனித் துறை, குஜராத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. சூரிய சக்தி மற்றும் வாயு சக்திக்காக தனிப்பட்ட கொள்கைகளை உருவாக்கியுள்ள ஒரே முதல் மாநிலம், இந்தியாவில் குஜராத் மட்டுமே. இங்குள்ள பானஸ்கந்தாவில் அமையும் சூரிய சக்தி பூங்கா ஆசியாவிலேயே பெரியது. இது கூடிய சீக்கிரம் குஜராத்தின் அடையாளமாகவே மாறிப் போகும். நிச்சயமாக குஜராத், கூடிய சீக்கிரம் உலகின் சூரிய சக்தித் தலைநகராக உருவெடுக்கும். இப்படி, விவசாயத்தைப் பாதிக்காத அளவில், மாசு ஏற்படாத வகையில், மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும் வகையில், எங்களது தொழில் கொள்கையை நாங்கள் வடிவமைத்துள்ளதால்தான், பிற மாநிலங்களில் எழும் பிரச்னைகள் இங்கு எழுவதில்லை.

கேள்வி : நம் நாட்டில் பல மாநிலங்களின் மொத்த வருவாயில் மதுபான விற்பனை வருமானம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. குஜராத்தில் மது விற்பனை கிடையாது; அதனால் அதன் வருவாயும் கிடையாது. ஆனால், மற்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது குஜராத்திற்கு எப்படிச் சாத்தியமாகிறது?

பதில் : மது ஒழிப்பு என்பது குஜராத்தின் வரலாறு மற்றும் கலாசாரத்தில் ஊறிப் போன ஒன்று. ஆங்கில அரசு காலத்தில் காந்திஜியால் ஆதரிக்கப்பட்ட இந்த விஷயம், காலங்கள் கடந்தாலும் மாறாமல் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு நல்ல கட்டுமானத்திற்கு அடிப்படை, ஒரு வலுவான அடித்தளம். குஜராத்தின் பொருளாதார வெற்றிக்கான ரகசியம், எந்த ஒரு குறிப்பிட்ட வருவாயை மட்டுமே நாங்கள் சார்ந்து இருக்கவில்லை. குஜராத்தின் வளர்ச்சியை நாங்கள் மூன்று விதமாகப் பிரித்து வைத்துள்ளோம். ஒன்று – தொழிற்சாலை, இரண்டு – சேவை, மூன்று – விவசாயம். இந்த மூன்றும் ஒரே விகிதாச்சாரத்தில் வளர்ந்து வருகிறதா என்று கவனித்துக் கொண்டால் மட்டும் போதும். பொருளாதாரம் ஒருபோதும் மந்தமாகாது. நாங்கள் தொழில் மேம்பாட்டில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களிலும் நாங்கள் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆட்டோமொபைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், பெட்ரோலியம் ஆகிய துறைகளில் இந்தியாவின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது குஜராத் மட்டுமே. விவசாயம் செய்யும் நிலங்களின் அளவும் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளதைப் பற்றி ஏற்கெனவே சொல்லி விட்டேன். எனவே, அந்த மூன்று விகிதங்களிலும் குஜராத் சீரான, விரைவான வளர்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. எனவே, மதுபானம் மூலமான வருவாய் இல்லையே என்ற கவலை எங்களுக்குத் துளியும் இல்லை. பல்வேறு முன்னேற்றங்களின் மூலம் வருவாயைப் பெருக்கி, குஜராத்தை ஒரு பொருளாதார அசுரனாக மாற்றி இருக்கிறோம். குஜராத்தின் மதுவிலக்கு தொடர்பான இந்த வெற்றி, 6 கோடி குஜராத் மக்களின் ஊக்குவிப்பாலும், ஒத்துழைப்பாலும் கிடைத்துள்ளது என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

கேள்வி : ஒரு தனி மனிதர் நேர்மையாக இருப்பது என்பது பெரியளவில் வியக்கத்தக்க விஷயமில்லை. ஆனால், தனக்குக் கீழே இருக்கும் நிர்வாகத்தில் ஊழலையும், லஞ்சத்தையும் கட்டுப்படுத்தி வைப்பது என்பது மிகப் பெரிய சிரமமான காரியம். அதை எப்படிக் கையாள்கிறீர்கள்?

நரேந்திர மோடி : ஓர் ஒளிவுமறைவற்ற அரசாங்கத்தை நடத்துவதற்கு, நிர்வாகத்தில் முறையான மாற்றங்கள் தேவை. அந்த மாற்றத்தை வெறுமனே, மனம் போன போக்கிலும் ஏனோதானோ என்றும் கொண்டு வந்தால் போதாது. நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, இனி அதைச் சார்ந்தே செயல்பட வேண்டும் என்ற முனைப்பு இருக்க வேண்டும். நான் முதல்வராகப் பதவியேற்ற நாள் முதலே, லஞ்சத்தை எந்த வடிவத்திலும் அனுமதிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அனைத்து நிலைகளிலும் லஞ்சத்தை விட்டொழிக்க வேண்டுமானால், நிர்வாகத்தில் முறையான மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்து, உடனே தேவையான மாற்றங்களைச் செய்தேன். முதலில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகளை ஒதுக்கி வைத்தேன். பிற அதிகாரிகள் குறிப்பிட்ட பதவியில் பணியாற்றும் காலத்தை அதிகரித்தேன். அவர்களின் பணியில் நான் தலையிடாமல், அவர்களைச் சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதித்தேன். இது அவர்களுக்குத் திருப்தியை அளித்ததோடு, அவர்களுக்குள்ளேயே ஒரு கட்டுப்பாட்டையும் வளர்த்தது.

உத்திரவாதமுள்ள பதவிக் காலம், தவறான குற்றச்சாட்டுகளால் அவர்கள் திடீரென்று மாற்றப்பட மாட்டார்கள் என்பது போன்ற நம்பிக்கைகள் அவர்களுக்குத் தரப்பட்டன. இந்த உத்திரவாதம், அவர்களுக்குச் சிறப்பான தீர்மானங்களை நேர்மையாக நிறைவேற்ற உதவியாக இருக்கிறது. ஒரு அமைச்சரோ, ஒரு எம்.பி., எம்.எல்.ஏ.வோ ஒரு அதிகாரியின் மாற்றத்திற்காக என்னை அணுகினால், தகுதி அடிப்படையில் நான் முறையான சலுகைகள் அளிப்பதுண்டு. ஆனால், 'ஒரு குறிப்பிட்ட பதவியில் அவர் அமர்த்தப்பட வேண்டும்' என்கிற ரீதியில் கோரிக்கை வந்தால், அதை நான் ஒருபோதும் ஏற்பதில்லை. இதேபோல், சில மூத்த அதிகாரிகளை மாற்றும்போது, அவரது கடந்த காலப் பதவிகள், அவரது நேர்மை, நாணயம், செயல்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்யப்படும். அதன் பிறகே அவர் எந்தப் பதவிக்குப் போகிறார் என்பது முடிவாகும். அடுத்தபடியாக, ஒரே இடத்தில் அதிகாரக் குவியல் என்பது லஞ்சத்தை அதிகப்படுத்தும் என்பதால், அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துள்ளோம்.

தனி மனித விருப்பு வெறுப்புக்குத் திட்டங்களும், சேவைகளும் பலியாகக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என் வரையில் கூட எந்த விதமான தன்னிச்சையான அதிகாரங்களையும் நான் குவித்து வைத்துக் கொள்ளவில்லை. அதிகாரம் எல்லோரிடமும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்களை நீக்கினால் லஞ்சம் பெருமளவு குறையும். இதற்கு, இடைத்தரகர்கள் இல்லாமலேயே திட்டங்கள், சலுகைகளை மக்கள் பெறும் வகையில், வழிமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும். மேலும், தேவையற்ற படிகளை குறைக்க வேண்டும். இப்படி இடைத்தரகர்களையும், அதிகப்படியான படி நிலைகளையும் குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் 'கரீப் கல்யாண் மேளா' என்ற திட்டம். இந்த ஏழைகள் முன்னேற்றத் திட்டம், பயனாளிகளுக்குச் சலுகைகள் ஒழுங்காகப் போய்ச் சேர்கிறதா என்பதை உறுதி செய்கிறது. தனிப்பட்ட பயனாளிகளுக்குக் கிடைக்கக் கூடிய பல்வேறு திட்டங்கள், நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு ஒரே திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல், லஞ்சத்தைக் குறைக்கவும், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் தொழில்நுட்பம் மூலம் கிடைக்கும் நன்மைகளை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்கிறோம். எந்தத் திட்டமானாலும், பயனாளிகளின் பெயர்ப் பட்டியலை அவர்களின் தகுதிகளோடு ஆன்லைனில் வெளியிடுவது, ஓர் ஒளிவுமறைவற்ற தன்மையை உருவாக்கும். வருவாய் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'E-GRAM' மற்றும் 'E-DHARA' திட்டங்கள், இதற்கான சிறந்த உதாரணங்கள். சமுதாயத்துக்கு அதிகாரம் அளித்தல், உள்ளாட்சி அளவில் அதிகாரம் அளித்தல் ஆகியவை கூட லஞ்சத்தைக் கட்டுப்படுத்துகின்றன. குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள WASMO என்ற அமைப்பு இதற்குச் சிறந்த உதாரணம். கிராம அளவில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு, அவர்களின் பங்களிப்போடு, லட்சக்கணக்கான சோதனைச் சாவடிகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, தண்ணீர் திருட்டு, தண்ணீர் இணைப்பிற்காக லஞ்சம் என்ற பேச்சே கிராமங்களில் இல்லை.

கேள்வி : பொதுவாக முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ,பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருப்பதில்லை என்ற ஒரு கருத்து உண்டு. ஆனால், குஜராத் மட்டும் விதிவிலக்காகப் பார்க்கப்படுகிறது. சிறுபான்மையினரையும் தாமரைச் சின்னத்தில் வாக்களிக்க வைக்குமளவிற்கு எப்படி ஒரு மாற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடிந்தது?

பதில் : முன்னேற்றத்திற்கு எந்த மதப் பாகுபாடும் கிடையாது. மாநிலத்தில் ஏற்படுகிற முன்னேற்றம் ஹிந்துக்களையும், முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், சீக்கியர்களையும் பிரித்து விடாது. மாறாக, இணைக்கவே செய்யும். என்னுடைய 'சத்பவனா மிஷன்' என்ற முயற்சி சமாதானத்திற்காகவும், சகோதரத்திற்காகவும் துவங்கப்பட்டது. இதற்காக 36 இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டேன். இந்த உண்ணாவிரதத்தில், நான் அழைக்காமலேயே அனைத்து மதத்தினரும் முன்வந்து, அவர்களும் என்னுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த 36 உண்ணாவிரதங்களில் 18 ஆயிரம்கிராமங்களிலிருந்து பல்வேறு மதங்களைச் சார்ந்த சுமார் 50 லட்சம் பேர் கலந்து கொண்டனர். சுமார் 15 லட்சம் பேரை நான் நேரடியாகச் சந்தித்து கைகுலுக்கினேன். பொதுவாழ்வில், இது ஒரு சாதனை என்றே நான் நினைக்கிறேன். குஜராத்தில் எந்தத் திட்டமானாலும், அது 6 கோடி குஜராத்திகளுக்கும் சேர்த்துதான் திட்டமிடப்படுகிறது. 24 மணிநேரத் தடையில்லா மின்சாரம், தரமான குடிநீர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முன்னேற்றத் திட்டங்கள், விவசாயிகளுக்கான திட்டங்கள் எல்லாமே மொத்த குஜராத்திகளுக்கானது என்பதை என் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். நானும் அவர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை.

கேள்வி : தேர்தல் என்று வந்தால் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கக் கூடிய வாக்குறுதிகளை அளிப்பது என்பது பல மாநிலங்களில் வாடிக்கையாகி விட்டது. ஆனால், இங்கு அப்படியில்லை. இந்த ஆண்டு வரும் பொதுத் தேர்தலைச் சந்திக்க நீங்கள் வைத்திருக்கும் யுக்திகள் என்னென்ன?

பதில் : பொதுவாகவே குஜராத் மக்கள் உழைக்க விரும்புகிறவர்கள். குஜராத்தின் பழைய வரலாற்றைப் பார்த்தால் கூட, அவர்கள் வெகு நூற்றாண்டுகளுக்கு முன்பே கடல் கடந்து வாணிபம் செய்தவர்கள். இம்மக்கள் நல்ல வாழ்க்கை வாழ விரும்புகிறவர்கள். ஆனால், அதை அவர்களின் உழைப்பு மூலம் பெற விரும்புகிறவர்கள். அவர்களின் கனவை அவர்களே கட்டிக் கொள்வார்கள். அரசாங்கம் அதற்கான அடித்தளத்தை மட்டும் அமைத்துக் கொடுத்தால் போதுமானது. இருந்தாலும் ஏழைகள், மலை ஜாதியினர் மற்றும் ஊனமுற்றோருக்கு உரிய சலுகைகளும் வழங்கப்பட்டே வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் எது செய்தாலும், அதை குஜராத் மற்றும் குஜராத் மக்களின் நன்மை கருதித்தான் செய்கிறோமே தவிர, தேர்தலை மனதில் வைத்துச் செய்யவில்லை. மாநில முன்னேற்றம், தனி மனித முன்னேற்றம், நகர்ப்புற முன்னேற்றம், கிராமப்புற முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், ஏழைகள் முன்னேற்றம் என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது அரசு செய்து கொடுத்துள்ள முன்னேற்றம் மட்டுமே எங்கள் தேர்தல் வியூகமாக இருக்கக் கூடும்.

கேள்வி : காங்கிரஸ் ஆளாத மாநிலங்களை, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். உங்களிடம் மத்திய அரசு எப்படி நடந்து கொள்கிறது?

நரேந்திர மோடி : டெல்லி ஆட்சியாளர்கள் நடந்து கொள்ளும் முறையால், இந்தியக் குடியரசின் கூட்டமைப்புத் தத்துவமும், இந்திய அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சங்களும் ஆட்டம் கண்டு வருகின்றன. மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயங்களில் – முன்னேற்றப் பணி, பொதுமக்கள் நலன், மக்கள் உரிமை என்றெல்லாம் காரணம் சொல்லி, மத்திய அரசு தலையிட்டு வருகிறது. மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் பல சுமைகள் (குறிப்பாக நிதிச் சுமை) மாநில அரசுகளின் மீது சுமத்தப்படுகிறது. கல்வி உரிமை, மத்திய உணவு பாதுகாப்புச் சட்டம் ஆகியவை இதற்கு நல்ல உதாரணங்கள். வாக்கு வங்கி அரசியலை மனதில் வைத்துக் கொண்டு, மாநில அரசுகளின் வரம்பில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது மத்திய அரசு. இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைச் சொல்கிறேன். சட்டம் – ஒழுங்கு என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்களைத் தடுக்கும் விதமாக Gujarat Control of Organized Crime (GUJCOC) என்ற சட்டத்தை குஜராத் சட்டமன்றத்தில் இயற்றினோம். ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசின் தலை அசைவிற்காக அந்தச் சட்டம் காத்திருக்கிறது. குஜராத், பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மாநிலம். இங்கு தீவிரவாத அச்சுறுத்தலைத் தடுக்கும் பெரும் பணி மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், மத்திய அரசு, மாநில அரசின் கீழ் வரும் சட்டம் – ஒழுங்கு குறித்த சட்டத்திற்கே அனுமதி வழங்கத் தயாராக இல்லை. இதே மாதிரியான சட்டம் மத்தியப் பிரதேசத்திலும், சட்டீஸ்கரிலும் நிறைவேற்றப்பட்டு, அவையும் அனுமதி கிடைக்காமல் நிலுவையில் உள்ளன. ரயில்வே பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தில் கூட, மாநில அரசுகளின் அதிகார எல்லையைப் பாதிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சர்க்காரியா கமிஷனும், பஞ்ச்சி கமிஷனும் 'மாநில அதிகார வரம்பிற்குள் மத்திய அரசு நுழைய எத்தனிக்கும்போது, மாநில அரசுகளிடம் உரிய ஆலோசனை நடத்த வேண்டும்' என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளன. ஆனால், அது இங்கு நடப்பதில்லை. வகுப்புவாத வன்முறை சம்பந்தமான சட்டம் தொடர்பாக, மாநில அரசுகளை மத்திய அரசாங்கம் கலந்து ஆலோசிக்கவே இல்லை. மாநில அரசுகளுக்கு உதவுவதற்குப் பதிலாக, எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குத் தொந்தரவு தருவதிலேயே மத்திய அரசு முனைப்பாக உள்ளது. '2011 வைப்ரன்ட் குஜராத்' உச்சி மாநாட்டின் மூலம், குஜராத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மீது வருமான வரித் துறையினரைக் கொண்டு சோதனை நடத்தியது இதற்கு நல்ல உதாரணம். ஒரு மாநில அரசு, மத்திய அரசிடம் நிதி கோருவது பிச்சை எடுப்பதைப் போன்றதில்லை. அது மாநில அரசின் உரிமை. கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. வரிகளின் மூலம் வரும் வருவாயில் 50 சதவிகிதத்தை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும் என்பது மாநில அரசுகளின் கோரிக்கை. ஆனால், 30.5 சதவிகிதத்தில் இருந்து 32 சதவிகிதமாக மட்டுமே உயர்த்தியுள்ளது மத்திய அரசு. பகிர்தலும், பராமரித்தலும் மத்திய அரசின் கடமை. அந்த மனோபாவத்தின்படி அது நடந்து கொள்ள வேண்டும். ஆனால், அது இங்கு காணக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

கேள்வி : இலவசம் என்பதே கிடையாது. எல்லாவற்றிற்கும் கட்டணம். குஜராத்தில் மக்களுக்கு எந்தச் சலுகைகளுமே கிடையாதா?

பதில் : சலுகைகள் உண்டு. தாழ்த்தப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், சிறுபான்மைக் குழுக்கள், விதவை, ஊனமுற்றோர், ஆதரவற்ற குழந்தைகள்… என்று பல்வேறு தரப்பினருக்குப் பல்வேறு சலுகைகளை நாங்கள் வழங்கி வருகிறோம். சில உதாரணங்களை இங்கு சொல்கிறேன். இங்குள்ள 75 லட்சம் ஆதிவாசி சமூகத்தினரை இதர மக்களோடு மக்களாக இணைக்கத் துரிதமான திட்டங்களை அமல் செய்து, அதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவளித்துள்ளோம். அடுத்த ஐந்தாண்டுகளுக்கென 40 ஆயிரம் கோடி ரூபாயை அவர்களுக்காக ஒதுக்கியுள்ளோம். அதேபோல், ஏழைகளுக்குப் புதிய வீடு கட்டவும், பழைய வீட்டைத் தரம் உயர்த்தவும் குஜராத் அரசு உதவியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 9 லட்சம் ஏழைக் குடும்பங்கள் இதனால் பலன் அடைந்துள்ளன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட இதற்காக 500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். அடுத்த ஐந்தாண்டுகளில் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கவும் திட்டமிட்டுள்ளோம். விதவைகள், முதியோருக்கு மாதம் 750 ரூபாய் தரும் பென்ஷன் திட்டம் அமலில் உள்ளது. விதவை இறந்தால், அவரது குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் வகையில் க்ரூப் இன்ஷுரன்ஸ் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. விதவைகளுக்கு இலவசத் தொழிற்பயிற்சி அளித்து அவர்களுக்குத் தொழில் துவங்க கடனுதவியும் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 56 ஆயிரம் விதவைகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். எந்த ஒரு வளர்ச்சியை நோக்கித் திட்டமிடும்போதும், என் முன்னால் மகாத்மா காந்தியின் பொன்மொழி வந்து நிற்கும். 'எந்தச் செயலின் போதும், நீ பார்த்த ஏழைகளையும், பலவீனமானவர்களையும் நினைவிற்கு கொண்டு வந்து, இந்தச் செயல் அவர்களுக்கு எந்த விதத்தில் உதவப் போகிறது என்ற கேள்வியை உனக்குள் நீயே கேட்டுக் கொள்'. இதை எனது மூல மந்திரமாகவே வைத்துள்ளேன்.

கேள்வி : மத்திய அரசு கொண்டு வர இருக்கும் லோக்பால் சட்டம் குறித்த உங்கள் பார்வை? பதில் : இன்று லஞ்ச – ஊழல் என்பது ஒரு கொடிய வைரஸ் போல் புரையோடி போய் விட்டது. அதைக் குணப்படுத்த உடனடி நடவடிக்கைகள் தேவை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக சட்டம் கொண்டு வர வேண்டிய மத்திய அரசே, லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் திணறி வருகிறது. இதனால், மக்களை ஏமாற்றும் பலவீனமான ஒரு சட்டத்தைக் கொண்டு வரவே மத்திய அரசு முனைப்பாக இருக்கிறது. ஆனால், இந்த முறை, மக்களின் விழிப்புணர்வால் மத்திய அரசு தப்பிக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். நான் சார்ந்திருக்கும் பா.ஜ.க.வும் 'இது பலவீனமான சட்டம்' என்று குற்றம் சாட்டி, 'கடுமையான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்' என்று கோரியுள்ளது. துக்ளக் வாசகர்களுக்கும், சக இந்தியர்களுக்கும் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: லஞ்ச ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை என்றும் கைவிட்டு விடாதீர்கள். நமது வலுவான நிலைப்பாடுதான், இந்தியாவில் ஒரு தூய்மையான, லஞ்ச ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வர முடியும்.

கேள்வி : மாநிலத்தில் நீங்கள் செய்யும் நிர்வாகத்தைப் பார்த்து விட்டு, 2014 நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் தேசியத் தலைமையைப் பல பேர் எதிர்பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. உங்கள் திட்டம் என்ன?

பதில் : குஜராத் மக்கள் இந்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பொறுப்பை என்னிடம் அளித்துள்ளனர். என்னுடைய கவனம் எல்லாம் அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில்தான் இருக்கிறது. நான் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணாமல், இன்றைய பொழுதிற்காக வாழ்பவன். இன்று என் கையில் இருக்கும் பணிகளை நிறைவேற்றுவதில்தான் எனது இதயமும், ஆத்மாவும் கவனமுடன் இருக்கின்றன

நன்றி ; துக்ளக்

Leave a Reply