விவசாயிகள், தங்கள் விளை பொருள்களை தகுந்தவிலையில் விற்பனை செய்வதற்கு வகைசெய்யும் இணைய வழி வேளாண் சந்தையை பிரதமர் நரேந்திர மோடி வியாழக் கிழமை (ஏப்.14) தொடக்கி வைக்கிறார்.
 இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள 585 மொத்தக் கொள்முதல் மண்டிகள் இணையம் வாயிலாக ஒருங்கிணைக்கப்படும். விவசாயிகள், தங்கள் செல்லிடப் பேசியின் மூலமாகவே எந்தமண்டியில் அதிக விலைக்கு விளை பொருள்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன? என்பதை அறிந்துகொள்ள முடியும்.


 அதன் அடிப்படையில் தகுந்தவிலைக்கு விவசாயிகள், தங்கள் விளை பொருள்களை விற்க முடியும்.
 வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்தும் நோக்கில் இந்தத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.


 மண்வள தரநிர்ணய அட்டை, பயிர்க்காப்பீட்டுத் திட்டம் என விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி யுள்ளதாகவும் தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.


 சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதி முதல் இணையவழி வேளாண்சந்தை இயங்கும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.  அதேநாளில் கிராம தன்னாட்சி விழிப்புணர்வு பிரசாரத் திட்டத்தையும் மோடி தொடக்கிவைக்க உள்ளார்.
 

Leave a Reply