இந்தியாவில், நடப்பு ஆண்டு ஜுன் மாதத்தில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 16.7 சதவீதம் அதிகரித்து 330 கோடி டாலரிலிருந்து 390 கோடி டாலராக (ரூ.17,550 கோடி) அதிகரித்துள்ளது. இது, நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 13.3 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், மே மாதத்தில் ஆபரண ஏற்றுமதி வியக்கத்தக்க வகையில் 33.5 சதவீதம் அதிகரித்து இருந்தது. ஆக, ஜுன் மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசு நாடுகள், அமெரிக்கா மற்றும்

ஹாங்காங் ஆகிய நாடுகளில் தேவைப்பாடு குறைந்ததுதான் இதற்கு காரணம் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் அஜய் சஹாய் கூறினார்.

இந்தியாவிலிருந்து அதிக அளவில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களை இறக்குமதி செய்வதில் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் முதலிடத்தில் உள்ளன. அதாவது, அந்நாடுகளின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது. அடுத்தபடியாக 25 சதவீத பங்களிப்பை பெற்று அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 20 சதவீதமாக உள்ளது.

ஜுன் மாதத்தில் வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி வியக்கத்தக்க வகையில் 59 சதவீதம் உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 51 சதவீதமும், தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி 38 சதவீதமும், பலவண்ண நவரத்தின கற்கள் ஏற்றுமதி 34 சதவீதமும் உயர்ந்துள்ளது. பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி 1 சதவீதம் அதிகரித்து 222 கோடி டாலராக (ரூ.9,990 கோடி)

உயர்ந்துள்ளது.நாட்டின் ஏற்றுமதியில் முக்கிய அங்கம் வகிக்கும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி ஆண்டுக்கு சராசரியாக 15 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜுன்) நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் 17.4 சதவீதம் அதிகரித்து 919 கோடி டாலரிலிருந்து 1,080 கோடி டாலராக (ரூ.48,600 கோடி) உயர்ந்துள்ளது. இது, அக்காலாண்டிற்கான மொத்த ஏற்றுமதியில் 14 சதவீதமாகும்.
கடந்த ஆண்டில்…

கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 46.89 சதவீதம் அதிகரித்து 4,300 கோடி டாலராக (ரூ.1,93,500 கோடி) உயர்ந்தது. நடப்பு 2011-12-ஆம் நிதி ஆண்டில் இது 16 சதவீதம் அதிகரித்து 5,000 கோடி டாலராக (ரூ.2,25,000 கோடி) உயரும் என நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் தலைவர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதிக்காக மேற்கத்திய நாடுகளை மட்டும் நம்பி இருக்காமல், ரஷ்யா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளையும் இலக்காகக் கொண்டு செயல்பட இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி வளர்ச்சிக்கு, அறுக்கப்பட்ட மற்றும் பட்ட தீட்டப்பட்ட வைரங்கள் உந்துசக்திகளாக திகழ்கின்றன. வைரம் ஏற்றுமதியில் சீனா கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு இந்திய நிறுவனங்கள் சாதனை படைக்கும் என வர்த்தக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இத்துறை நிறுவனங்களுக்கு உள்நாட்டிலும் வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. நாட்டில் தனிநபர் செலவிடும் வருவாய் அதிகரித்து வருவதாலும், மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களாலும், நாட்டில் ஆபரணங்கள் விற்பனை சிறப்பான அளவில் அதிகரிக்கும் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு ரூ.1.22 லட்சம் கோடி மதிப்பிற்கு நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் விற்பனையாகின்றன. 2015-ஆம் ஆண்டிற்குள் இது ரூ.2.13 லட்சம் கோடியாக உயரும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் இத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 13 லட்சமாக உள்ளது. ஆக, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும் துறைகளில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையும் ஒன்றாகும்

Tags:

Leave a Reply