தேவையுள்ள இடத்தில் தொழில் தொடங்குவதே வெற்றிக்கு வழி  ஒ ரு தொழிலில் தேவைக்கு அதிகமானவர்கள் நுழைந்தால் அந்த தொழில் போதிய வருமானமின்றி பாதிக்கப்படும். அதில் ஈடுபடுபவர்கள் திணறிப் போவார்கள். எந்தத் தொழிலும் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் கட்டுப்படியாகக் கூடிய இலாபம் கிடைக்க வேண்டும். போதிய இலாபம் இல்லாவிட்டால் தொழில் நசிந்து போகும்.

1980களில் முதலில் ஜெராக்ஸ் கடை வைத்தவர்கள் நல்ல லாபம் ஈட்டினார்கள். அப்போதே ஒரு பக்கம் ஜெராக்ஸ் எடுக்க ஒரு ரூபாய். வேலையும் எளிதான வேலை. ஒரு "ஜெராக்ஸ் மிஷினை வாங்கிப்போட்டால் ஒரு ஆளை வைத்து சமாளித்துக் கொள்ளலாம்". அதில் வந்த இலாபத்தைப் பார்த்து பலர் அந்தத் தொழிலில் இறங்கினர். தேவைக்கு மேல் ஜெராக்ஸ் கடைகள் பெருகவே யாருக்கும் போதிய வருமானமில்லை. நிறைய வாடிக்கையாளர்கள் உள்ள கடைகள் எப்படியோ நடந்தன. தடுமாறிக் கொண்டிருந்த கடைகள் ஒரு ரூபாய் என்றிருந்ததை 75 பைசாவுக்கும் பிறகு 50 பைசாவுக்கும் குறைத்துப் பார்த்தார்கள்.

அப்போதெல்லாம் முக்கியமான பத்திரங்களுக்கு மட்டுமே ஜெராக்ஸ் எடுப்பார்கள். முக்கிய தஸ்தாவேஜூகள், சர்டிபிகேட்கள் போன்றவைகளுக்கு மிகக் குறைவான அளவிலேயே ஜெராக்ஸ் எடுக்கிற பழக்கம் இருந்தது. அதனால் விலை குறைத்தாலும் தொழில் நடக்கவில்லை. தொடர்ந்து கட்டுப்படியாகவில்லை என்றால் என்ன நடக்கும்? பல கடைகள் மூடப்பட்டன. தாக்குபிடித்து நின்றவர்களுக்கு வியாபாரம் கூடியது. வலுவடைந்து நிலைத்தார்கள்.

இதிலிருந்து தெரிவது என்ன? எளிதாக இலாபம் வருகிற தொழிலில் பலபேர் இறங்குவார்கள். தேவைக்கு மேல் தொழில் பெருகினால் போதிய வருமானம் ஈட்ட முடியாது. வருமானம் இல்லாவிட்டால் தொழில் நிலைக்காது. தேவைக்கு மேல் இருக்கிறவர்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் மூடிவிட்டு செல்வார்கள். அதன் பிறகு தொழில் ஸ்திரப்படும். தாக்குப் பிடித்து தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும்.

தேவையே ஒரு தொழிலுக்கான வாய்ப்பை உருவாக்குகிறது. நாம் நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில் தொழிலை ஆரம்பித்து விடமுடியாது. தொழில் தொடங்குவதற்கான தேவை அங்கே இருக்க வேண்டும். தேவை இருக்கிற இடத்தில் ஆரம்பிக்கிற தொழிலே நிலைக்கும்.

ஓர் இடத்தில் மளிகைக்கடை ஆμம்பிக்கப் போகிறோம் என்றால் அங்கே ஒரு கடை தொழிலே  திறப்பதற்கான தேவை இருக்க வேண்டும். தேவை இருக்கிற இடத்தில் ஆரம்பித்தாலே வெற்றி பெற முடியும். தேவை இல்லாத இடத்தில் ஆரம்பித்தால் சிக்கல்தான்.

அதிக வருமானம் ஈட்டுகிற பிரிவினர் வாழும் பகுதிகளில் கடை ஆரம்பிப்பது உயிரோட்டமான வியாபாரம் நடைபெற உறுதுணையாகும். அங்கே வியாபாரம் செய்தால் செழிக்க முடியும். சம்பாதிக்க முடியும்.

வாய்க்கும் வயிற்றுக்கும் சம்பாதிக்கிற பிரிவினர் உள்ள வறண்ட ஏரியாவில் கடை ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்காது. முன்னேற்றம் முடங்கிப் போகும். அன்றாட போரட்டமாக நமது வியாபாரம் ஆகிவிடும். நடுத்தர வருவாய் பிரிவினர் இருக்கிற இடத்திலும் தொழில் செழிக்கும். பணப் புழக்கம் அதிகமாய் உள்ள இடத்தில் ஆரம்பிக்கிற வியாபாரம் ஓங்கி வளரும். பல தெருக்கள் கூடும் ஜங்சனாக விளங்குகிற இடத்தில் தைரியமாக தொழில் ஆரம்பிக்கலாம். அப்போது கூட அங்கே எத்தனை கடைகள் உள்ளன? அங்கே வந்து கூடும் தெருக்களில் மொத்தம் எத்தனை வீடுகள் இருக்கின்றன? எப்படிப்பட்ட வருமானப் பிரிவினர் வசிக்கின்றனர்? இப்போதுள்ள கடைகளில் எந்த அளவு வியாபாரம் நடக்கிறது? ஒவ்வொரு கடையிலும் நல்ல வியாபாரம் நடக்கிறதா? அல்லது கடைகள் காற்றாடுகின்றனவா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.

அங்கே வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு கடைகள் இல்லாத பட்சத்தில், அங்கே ஒரு கடை தேவைப்படும். ஆனாலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அங்கேயுள்ள கடைகளில் நடக்க வேண்டிய அளவு வியாபாரம் இல்லை என்றால் என்ன காரணம்? மக்கள் எதிர்பார்க்கும் அளவு சரக்குகள் இல்லையா? விலை அதிகம் வைத்து விற்கிறார்களா? அங்குள்ளவர்கள் வெளி இடங்களில் சென்று வாங்கி வருகிறார்களா என்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். பல விஷயங்களையும் ஆராய்ந்து அங்கே ஒரு கடைபோட்டால் வெற்றிபெற முடியும் என்று முடிவெடுத்த பிறகு, நமது கடை எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.

நமக்கே ஒரு தெளிவு வேண்டும். தெளிவான கண்ணோட்டத்துடன் தீர்க்கமாக திட்டமிட்டு ஆμம்பிக்கிற கடைகள்தான் வெற்றிபெற முடியும்.

ஜங்சன்களில் கடை ஆரம்பிக்கிறவர்கள் சற்றே பெரிய அளவில் கடைபோடுவது நல்லது. கடை பளீச்சென்று தனித்தன்மையோடு இருக்க வேண்டும். கவர்ச்சிகரமான முறையில் ரேக்குகள் அமைத்து, நிறைய சரக்குகள் வைத்து, வாடிக்கையாளர்களை கவரும்படியாக கடை ஆரம்பித்தால் எடுத்த எடுப்பிலேயே வியாபாரம் சூடு பிடித்து விடும். சற்றே பெரிய இடம் கிடைத்தால் டிபார்ட்மெண்ட் ஸ்டோராகவே ஆரம்பிக்கலாம். ஆரம்ப விழாவையொட்டி ஏதாவது பரிசுத்திட்டத்தை அறிவிக்கலாம். நோட்டீஸ் அடித்து அந்த பகுதி முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கச் செய்யலாம். குறிப்பிட்ட தொகைக்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு கூப்பன்களை வழங்கி, குலுக்கல் மூலம் பரிசு வழங்கலாம். அல்லது இலவசமாக ஒரு கைப்பையோ, ஏர் பேக்கோ கொடுக்கலாம். குறைவான விலைக்கு விற்கிற பொருட்களின் விலையை கடைக்கு வெளியே விளம்பரப் பலகையில் எழுதி வைக்கலாம்.

திடீரென விலை குறையும் பொருட்களின் விலையை எழுதி வைப்பது மக்களைக் கவரும். வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் நீங்கள் செயல்பட வேண்டும். அதற்கு அவர்கள் மனதில் இடம் பிடிக்கும்படியான ஏதாவது ஓர் உத்தியை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். உங்கள் கடை நியாயமான விலையில் தரமான பொருட்களை விற்கிற சிறந்த கடை என்பதை வாடிக்கையாளர் மனதில் பதிய வைப்பதில் ஆரம்பத்திலேயே வெற்றிபெற்று விட்டால் உங்கள் வியாபாரம் செழித்தோங்கும்.

தெருக்களுக்குள் கடைவைப்பவர்கள், அங்குள்ள வியாபார நிலவரத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கு உறுதியான வாடிக்கையாளர் அடித்தளம் இருக்கும். அங்கே கடை போட்டால் நாம் வெற்றிபெற முடியுமா என்று சிந்தித்து செயல்பட வேண்டும். சிலர் அக்கறை இன்மை காரணமாக வியாபாμத்தை இழந்திருப்பர். சிலருக்கு வியாபாரத்திலிருந்து அதிக பணத்தை எடுத்ததன் மூலமாக முதலீடு பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். கடையில் போதிய சரக்கு இல்லாததால் பக்கத்தில் உள்ள கடைக்கு வாடிக்கையாளர்கள் சாய்வார்கள். அங்கும் சமாளிக்க முடியாமல் கூட்டம் இருக்கும். அப்போது அங்கே ஒரு புதிய கடை தேவைப்படும். அந்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடை ஆரம்பித்தால் வெற்றிபெற முடியும்.

ஒரு தெருவுக்குள் தேவைக்கு மேல் கடைகள் இருந்தால் ஒருவருக்கும் போதுமான அளவில் வியாபாμம் நடக்காது. தேவையற்ற நியாயமற்ற போட்டி நிலவும். ஒவ்வொருவரும் விலையைக் குறைத்து விற்று வியாபாரத்தைத் தக்கவைக்க முயற்சிப்பார்கள். யாருக்குமே போதுமான இலாபம் கிடைக்காது.

பலவீனமானவர்கள் வீழ்ச்சி அடைந்து கடையை மூட வேண்டிவரும். அதன் பிறகுதான் நிலைமை சீராகும். அதுரை தாக்குப் பிடிக்க நேரிடும். தெருவுக்குள் கடை ஆரம்பிக்க முடிவு செய்பவர்கள், அங்குள்ள நிலவரத்தை நன்கு எடைபோட்டு திருப்தி அடைந்த பிறகே தொடங்க வேண்டும். மொத்தத்தில் நாம் கடை போட வேண்டுமானால் அங்கே ஒரு தேவை இருக்க வேண்டும். தேவை உள்ள இடத்தில் கடை ஆரம்பிப்பதே வெற்றிக்கு வழிவகுக்கும்

Tags; தொழில் முனைவோர், தொழில் முன்னேற்றம், புதிய தொழில் தொடங்க,

Leave a Reply