பெண்கள் தங்கள் நன்மைக்காகவும், குடும்ப நலனுக்காகவும்நாட்டின் நன்மைக்காவும் நோன்பிருப்பது பழங்காலந்தொட்டே நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாகக் கன்னிப் பெண்கள்  தங்களுக்கு அமையப்போகும் கணவன் சிறந்தவனாகச் சிவனடியாராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு மார்கழித் திங்களில் அதிகலையில்

எழுந்து நீராடச் சென்று அந்நீர்க்கரையில் உமையம்மையின் வடிவமாக மணலாற் பாவைசெய்து அதனை வழிபடுவர். இவ்வழிபாட்டினை "பாவை நோன்பு" என்பர்.

இப்பாவையை முன்னிருத்திப் பாடப்படும் பாடல்கள் பாவைப் பாடல்கள் என்று கூறப்பட்டன.மணிவாசகப் பெருமான் திருவண்ணாமலையில் தங்கியிருந்தகாலத்தில், அவ்வூர் மகளிரின் வழிபாட்டினைக் கண்டு திருவெம்பாவையைப் பாடியுள்ளார். இருபது பாடல்களைக்கொண்ட இப்பதிகம், இறைவன் மீது பேரன்பு கொண்ட பெண் அதிகாலையில் எழுந்து, மற்ற வீடுகளில் உறங்கிக்கொண்டிருக்கின்ற பெண்களை எழுப்பி இறைவனின் புகழைப்பாடச் செல்வோம். இவ்வாறு போதாரமளியின் மீதிருந்து எழாமல் இருப்பது தவறு என்று கூறி ஒருவரை ஒருவர் எழுப்புவதாக அமைந்துள்ளது.

வைணவத்தில் முப்பது பாடல்களைக் கொண்ட "திருப்பாவை ஆண்டாள்" அம்மையாரால் பாடப்பட்டுள்ளது. அப்பாடல்களும் இதே போன்று ஒருவரை ஒருவர் எழுப்புவதாக அமைந்திருந்தாலும் நோன்பு குறித்த வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் திருவெம்பாவையில் ஒருவரை ஒருவர் எழுப்பும் காட்சி மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளது. நோன்பு குறித்தசெய்திகள் ஏதுமில்லை. இதற்குக் காரணம் அடிகள் மகளிரின் செயல்களை மனம் கொண்டு பாடாமல் அச்செயல்களில் தன்னை இணைத்துத் தத்துவார்த்த பொருளுடன் பாடியுள்ளார்.ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சக்தியை வியந்ததாக ஒருசக்தி மற்ற எட்டு சக்திகளை படைப்புத் தொழிலுக்காக எங்ஙனம் எழுப்புகின்றது என்பதை அகநோக்கில் கண்டு வியந்து பாடியுள்ளார் என்று கூறுவர். எனவே தான் பழைய உரைகாரர் இதற்கு சக்தியை வியந்தது என்று குறிப்புக் கொடுத்துள்ளார் என்பர்.

திருவண்ணாமலையில் அதிகாலையில் துயிலெழுந்து முன்னெழுந்த பெண்கள் மற்ற பெண்களை ஒவ்வொருவராக எழுப்பி யாவரும் நீராடி எம்பெருமான் கோவில் புகுந்து வணங்குவதை கண்ட அடிகள், கண்ட காட்சியையும் தத்துவ பொருளையும் சேர்த்து கவிதையாக வடித்துவிட்டார்.

ஒவ்வொருநாள் பகலும் மக்களை நிலைபெற்று நிற்கச் செய்யும் திதிக்காலத்தையும், ஒவ்வொரு நாள் இரவும் சம்காரம் செய்து நின்றகாலத்தையும், விடியற்காலம் படைப்பு காலத்தையும் குறிக்கும் என்பார்கள். இதில் நமது ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாளாகும். உத்தராயண காலமாகிய தைத்திங்கள் முதல் ஆனித்திங்கள் வரை தேவர்களுக்குப் பகலாகும். தக்கிணாயன காலமாகிய ஆடித்திங்கள் முதல் மார்கழித் திங்கள் முடிய இரவுக்காலமாகும்.இரவில் ஆறில் ஒரு பங்கு விடியல் காலம். அவ்விடியற் காலம் தேவர்களுக்கு மார்கழித் திங்களாகும். படைப்பிற்கு உகந்தகாலமாகிய மார்கழித் திங்களில் சிவசக்திகள் படைப்புத்தொழிலைத் தொடங்கும். என்றும் உறங்காதவளாகிய ஆதிசக்தியான மனோன்மணி, முதல் சக்தியான சர்வபூதமணியை எழுப்பித் தொழிற்படுத்தும்.

இவ்வாறாக அடுத்தடுத்த சக்திகளான பலப்பிரதமணி, பலவிகரணி, கலவிகரணி, காளி, இரௌத்திரி,சேட்டை, வாமை என ஒவ்வொரு சக்தியும் ஒரு சக்தியால் எழுப்பபட்டு படைப்புத் தொழில் செய்யப்படுகின்றது. இச்சக்திகளுக்கு சதாசிவன், ஆன்மமூர்த்தி, சூரியமூர்த்தி, சந்திரமூர்த்தி, ஆகாயமூர்த்தி, வாயுமூர்த்தி, தேயுமூர்த்தி, அப்புமூர்த்தி, பிருதிவிமூர்த்தி என ஒன்பது சக்திமான்களும் உளர்.இவ்வொன்பது சக்திகளும் எழுப்பப்படுவதைத் திருவெம்பாவையின் முதல் எட்டுப் பாடல்கள் குறிக்கின்றன என்று கூறுவர். ஆனால் இப்பதிகத்தில் சக்திகள் துயிலெழுபுவது மட்டும் கூறிவிட்டு அச்சக்திகள் ஆற்றும் தொழிகள் கூறப்படவில்லை. எனவே சக்தியை வியந்தது என்ற உரைக்குறிப்பை கொண்டு இவ்வாறு கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் வலிந்து கூறப்பட்டவையே என்று கூறலாம்.மணிவாசகப் பெருமான் திருவாசகத்தின் முதல் பகுதியிலிருந்தே தன்னையும் தன் ஆன்மாவையும் மட்டுமே உட்பொருளாகவைத்து இறைவன் திருவடியை நினைந்து போற்றி வருகின்றார்.எனவே இவ்விடத்தில் மணிவாசகர் தானே தன் ஆன்மாவை எழுப்பி இறைவன் பெருமைகளைக் கூறி தன்னைத்தானே இறைத்தன்மைக்கு ஆட்படுத்தியுள்ளார் என்பதுதான் ஏற்புடைய பொருள்.

பாவைப் பாடல்கள் என்பவை மகளிர் நோன்பு நோற்றலையும், நோன்பிற்கான காரணங்களையும், நோன்பினால் பெற்ற பலன்களையும் கூறுவனவாக இருக்கும். இவ்வடிப்படையில் திருவெம்பாவையை நோக்கினால் துயிலெலுப்புவதும், இறைவன் புகழ் பேசுவதும், தனக்கு நல்ல கணவன்மார் வேண்டு மென்று வேண்டுதலும் பொருத்த முடையதாக இருக்கின்றன. ஆனாலும் நோன்பு பற்றிய செய்திகள்  திருவெம்பாவையில் இல்லை. ஆனால் திருப்பாவையில்‘‘

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காளே
நீராடி_மலரிட்டு_நாம்முடியோம்    செய்யாதன செய்யோம்,  தீக்குறளைச் சென்றோதோம் ’ ’

என்று நோன்பிருத்தல் கூறப்பட்டுள்ளது. திருப்பாவையில் கடவுளே கணவனாக அமைய வேண்டும் என்பது வேண்டுகோள். திருவெம்பாவையில் அடியார் கணவனாக அமைய வேண்டும் என்பது விண்ணப்பம். இதனைத் திருவெம்பாவையில் வரும்

‘‘அன்னவரே எம்கணவர் ஆவார் அவருகந்த
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்’’‘‘

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க’’
என்ற வரிகள் வெளிப்படுத்துகின்றன.

திருவெம்பாவை, திருப்பாவை இரண்டிலும் மழை வளம்பெருக வேண்டும் என்ற வேண்டுதல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வேண்டுதல்களை இறைவன் திருவடிக்கு வைத்துநீராடும் முகத்தான் வேண்டுகோள் விடுக்கும் மகளிர் ஒருவரை ஒருவர் எழுப்பி நீராடி விளையாடுகின்றனர். எனவே இம்மைப்பயனாகிய மழை பொழிதலும் நல்ல கணவரைப் பெறுதலும்

இதன்கண் பேசப்பெறுவதால் மகளிரின் வேண்டுகோள் பாட்டாகவும் இவற்றைக் கூறலாம். திருவெம்பாவையின் இறுதிப்பாடலான,
‘‘போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்’’

என்பதில் இறைவனின் திருவடிச் சிறப்பும் ஐந்தொழில் ஆற்றும் தகைமையும் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளல்) போற்றப்பட்டுள்ளன. ஆதியும் அந்தமும் இல்லாதஅரும்பெரும் சோதியாம் இறைவன் ‘‘ பாவை பாடிய வாயால் கோவை பாடுக’’
என்று கேட்ட பெருமைக்குரியது. திருவெம்பாவை. நாளும் இதனை ஓதி நலம் பெறுவோமாக

பாவை நோன்பு, திருப்பாவை ஆண்டாள், திருப்பாவை ஸ்ரீ ஆண்டாள், திருவெம்பாவை

நன்றி செல்வி. பெ. கோமதி

Leave a Reply