அஃப்சல் குரு - மெத்தனமிக்க அரசும் கெட்ட அரசியலும் கடந்த 2001ஆம் ஆண்டு நமது பாராளுமன்றத்தின் மீது லஷ்கர் ஏ தய்யபா மற்றும் ஜெய்ஷ் ஏ மொகம்மது ஆகிய ஜிஹாதி அமைப்புகள் கொலை வெறித்தாக்குதல் நடத்தின. தாக்குதலுக்கு வந்தவர்களை முதலில் அடையாளம் கண்டவர் கமலேஷ் குமாரி என்ற பாராளுமன்றக் காவலர்.

இவர் உஷார்படுத்தியதில் நம் காவல் படையினர் பதிலடி கொடுக்கத் தொடங்கினர். இந்தப் பெண் அந்தத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்தார். கமலேஷ் குமாரி சுட்டதில் தற்கொலைப் படையினரில் ஒருவனது உடம்பில் இருந்த குண்டு   கமலேஷ் குமாரி வெடித்தது. அந்தப் பெண் காவலர் உட்பட 7 காவலர்கள் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். ஜிஹாதிகளில் இறந்த 5 பேர் இன்னும் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை.

காஜி பாபா என்ற ஜெய்ஷ் ஏ மொகம்மது தளபதியின் திட்டப்படியும் அவனது வழிகாட்டுதலின் கீழும் இந்தக் கொடூரம் நடந்தது. முக்கிய இந்தியத் தலைவர்களைக் கொல்ல வேண்டும் அதன் மூலம் இந்தியாவில் ஒரு பதட்டத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

முன்னாள் பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால் சமாதானத் தூதர் என்ற பெயரைப் பெறுவதற்காக மூடுவிழா நடத்திய உளவுத்துறையின் பாகிஸ்தான் பிரிவுகளை அவசரகாலத்தில் திறக்க வேண்டிய கட்டாயத்தை பாரதப் பிரதமர் வாஜ்பாயி உணர்ந்த தருணம் இது. ஆனாலும் ஒரு வலுவான உளவு அமைப்பை ஏற்படுத்த இன்னமும் முடியவில்லை. இருப்பதைக் கோட்டை விட்டது மாபெரும் குற்றம் என்பது புரிந்தும் பயன் பெரிதாக இல்லை.

அஃசல் குரு என்பவன் இந்த ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தான். தில்லியில் இவன் பதுங்கியிருந்த இடத்தில் ஆயுதங்கள் பெருங்குவியலாகச் சேமித்து வைத்திருந்தான். பயங்கரவாதிகளுக்கு தங்க இடம் உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து கொடுத்தவன் இந்த அஃப்சல் குரு. அவர்களின் திட்டம் நிறைவேற எல்லா ஒத்துழைப்பும் கொடுத்துள்ளான். பயங்கரவாதிகள் கொடுத்த ரூபாய் 10 லட்சம் பணம் இவனிடத்தில் இருந்து பறிக்கப்பட்டது.

இவனோடு சேர்த்து ஷவுகத் ஹுசைன், SAR கிலானி, அஃப்சன் (எ) நவ்ஜோத் சாந்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தவிர ஜெய்ஷ் ஏ மொகம்மதுவின் சில தலைவர்கள் தலைமறைவுக் குற்றவாளிகள் என்று அறிவித்தது காவல் துறை. காஜி பாபா என்ற இத்திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் ஏ மொகம்மதுவின் தளபதி 2003ல் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் ஸ்ரீநகர் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

அஃப்சல் குருவுடன் சேர்ந்து செயல்பட்ட கிலானி, நவ்ஜோத் சாந்து, ஷவுகத் ஹுசைன் ஆகியவர்களில் நவ்ஜோத் சாந்து என்ற பெண் குற்றச் சதி குறித்து  A.R. Geelani, Mohammad Afzal and Shaukat Hussain Guru அறிந்திருந்தும் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்று 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். மற்றொரு குற்றவாளி ஷவுகத் ஹுசைன் 10ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற போதிலும் 2010ல் தண்டனைக்காலம் முடிவடைய ஒன்பது மாதங்களுக்கு முன்னரே 'நன்னடத்தை' காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.

கிலானி சந்தேகத்தின் பலன் அடிப்படையில் போதிய மறுக்கவியலாத ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் தில்லி உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் உயர்நீதிமன்றம் இவர் மீதான சந்தேகங்கள் தீரவில்லை என்றும் இவர் பாராளுமன்றத் தாக்குதல் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியது. மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் மறுக்கவியலாத ஆதாரம் இல்லை என்பதால் மரணதண்டனை விதிக்கமுடியாதே தவிர சந்தேகம் இருப்பது இருப்பது தான் என்று சொல்லி இந்தக் குறிப்புகளை நீக்க மறுத்துவிட்டது.

2005ல் அஃப்சல் குருவின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. மரண தண்டனை மனித உரிமைகளை மீறிய  செயல் என்று அருந்ததி ராய் உள்ளிட்ட பல தேசவிரோத சக்திகள் குரல் எழுப்பின. 2006 செப்டம்பரில் தில்லி உயர்நீதிமன்றம் அஃப்சல் குரு உடனடியாகத் தூக்கிலிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

2006 அக்டோபரில் அஃபசல் குருவின் மனைவி தபஸ்ஸும் குரு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுத்தார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் சட்டத்தின் வழியில் குறுக்கிட முடியாது என்று அப்துல்கலாம் நிராகரித்துவிட்டார். 2006ல் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமைச் சந்தித்த உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினர் அஃப்சல் குரு மன்னிக்கப்பட்டால் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த காவல்துறை உயிர்த்தியாகிகளுக்கு வழங்கப்பட்ட பதக்கங்களைத் திருப்பித்தந்து விடுவதாகக் கோரிக்கை வைத்தனர்.

பாராளுமன்றத்தைக் காத்த அவர்களது உயிர்த்தியாகம் குற்றவாளிகளை விடுவிப்பதால் கேலிக்கு உள்ளாக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மனித உரிமை என்பது குற்றவாளிகளுக்குப் பொருந்தும் என்றால் அவர்கள் கொன்ற உயிர்கள் மனித உயிர்கள் தானே? அப்படியானால் மனிதத்தன்மை அற்ற திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதலைச் செய்தவனுக்கு மனித உரிமை ரீதியான சலுகைகள் தேவையில்லை என்பது அவர்களது நியாயம். 2007ல் உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய்தது.

2010ல் மத்திய உள்துறை கருணை மனுவை நிராகரிக்குமாறு குடியரசு தலைவருக்குப் பரிந்துரை செய்தது. ஆனால் 2011ல் கருணை மனு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவே இல்லை என்ற உண்மையை indialeaks.in என்ற வலைத்தளம் கூறியது. இதைக் கபில்சிபல் மறுத்தார். ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டார். இந்தக் குழப்பம் ஏன்?

2011 தில்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்குப் பெறுப்பேற்ற ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்ற அமைப்பு அஃப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்றும் அதை வலியுறுத்தியே இந்தக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாகவும் கூறியது. குரு தூக்கிலிடப்பட்டால் மேலும் பல உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் தாக்கப்படும் என்றும் அறிவித்தது. அரசு இந்தத் தகவல் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கூறியது. பிறகு இது பற்றிப் பேச்சு மூச்சே இல்லை.

ஆனால் இதில் கெட்ட அரசியல் விளையாட்டு ஒன்று ஒளிந்திருக்கிறது. ஜம்முகஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா அஃப்சல் குருவைத் தூக்கிலிடுவது இஸ்லாமியர்களை அந்நியப்படுத்தும்  என்றார். ஜம்முகஷ்மீர் எதிர்கட்சித் தலைவர் மெகபூபா முஃப்டி இது தவிர்க்கப்படவேண்டியது என்றார். இது தவிர மனித உரிமைகள் கோரி சையத் அலிஷா கிலானி, அருந்ததி ராய் உள்ளிட்ட பல தேச விரோத சக்திகள் அஃப்சல் குருவை விடுவிக்கவேண்டும் என்று கோரினர், அஃப்சல் குரு தூக்கிலிடப்படுவது வெட்கக்கேடானது என்றார் அருந்ததி ராய்.

இப்போது குற்றம் நடந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு அஃப்சல் குரு அவசரக் கோலத்தில் தூக்கிலிடப்பட்டதைத் "தாமதமானாலும் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது" என்று பலரும் வரவேற்கின்றனர். கஷ்மீர் பாரமுல்லா பகுதியில் அஃசல் குருவின் சொந்த ஊரில் நடந்த கலவரத்தில் 23 காவலர்கள் தாக்கப்பட்டனர்.

ஆனால் சில கேள்விகள் விடையின்றி இருக்கின்றன.

 2007ல் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை 2013 வரை தாமதப்படுத்தப்பட்டதன் பின்னணி என்ன?

 அஜ்மல் கசாப் பாராளுமன்றத்தின் 2012 குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்பும், அஃப்சல் குரு பாராளுமன்றத்தின் 2013 ப்ட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னும் அவசரக் கோலத்தில் தூக்கிலிடப்படவேண்டிய அவசியம்/காரணம் என்ன?

 ஓவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பும் ஒரு தீவிரவாதியைத் தூக்கிலிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயைச் சற்றே அடைக்க காங்கிரசு முயல்வதாக வரும் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் அரசு மறுக்க முடியுமா?

 ஷவுகத் ஹுசைனை 9 மாதங்கள் முன்பே நன்னடத்தை அடிப்படையில் விடுவித்தது ஏன்? இவ்வளவு கொடூரச் செயல் செய்தவர்களுக்கு நன்னடத்தை விடுதலை தேவையா?.

இந்து அமைப்புகள் இதைக் கொண்டாடலாம், ஆனால் அஃப்சல் தூக்கிலிடப்படுவதன் மூலம் கஷ்மீரத்து மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளுடன் கொள்ளும் நல்லுறவு பாதிக்கபடும் என்று அஃப்சல் குருவின் வழக்கறிஞர் பஞ்சோலி தெரிவித்தார். இதையே பல இஸ்லாமிய அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் எதிரொலித்தனர். இப்படி ஒரு பிரிவினைவாத தேசவிரோதச் செயலுக்கு எதிரான நடவடிக்கை என்ன?

· அஃசல் குரு தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து தில்லியில் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) ஆர்பாட்டம் நடத்தியது. இவர்கள் நக்சல் தீவிரவாத ஆதரவாளர்கள். இவர்கள் சுதந்திர கஷ்மீருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். இவர்களைத் தலைநகரத்தில் அதுவும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அனுமதித்தது ஏன்?

இது போன்ற கேள்விகளைக் கேட்டாலும் பதில் தர காங்கிரசு தயாரில்லை. கிளிப்பிள்ளை போல மதவாதம், காவித்தீவிரவாதம் என்றே பிதற்றுகிறது. 2014க்கு வெகு நாட்களில்லை. நன்மைக்கும் வெகுதூரமில்லை என்றே நம்பிக் களமிறங்குவோம். பாரத் மாதா கீ ஜெய்.

நன்றி ; அருண் பிரபு

Leave a Reply