வாங்கும் திறன் சமநிலை கோட்பாடு (பர்சேசிங் பவர் பேரிட்டி) அடிப்படையில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கடந்த 2011-ஆம் ஆண்டில் ஜப்பானையும் விஞ்சி உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது நம்நாட்டிற்கு பெருமை தரக்கூடிய அம்சமாகும். இந்த வகையில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு முறையே 15.1 லட்சம் கோடி டாலர் மற்றும் 11.3 லட்சம் கோடி டாலராக உள்ளது. இது இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் முறையே 4.50 லட்சம் கோடி டாலர் மற்றும் 4.40 லட்சம் கோடி டாலராக உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

ஒரு தனிநபரின் அந்தஸ்து அவரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதேபோன்று ஒரு நாட்டின் பொருளாதார வலிமை ஜி.டீ.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்து மதிப்பிடப்படுகிறது.

ஜி.டீ.பி. என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அந்நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து பொருள்கள் மற்றும் அளிக்கப்படும் அனைத்து வகையான சேவைகளின் மொத்த சந்தைமதிப்பு ஆகும்.

வாங்கும் திறன் சமநிலை கோட்பாடு என்றால் என்ன?

இருநாடுகளுக்கிடையில் உள்ள செலாவணிகளின் மாற்றுவீதம் (ரேட் ஆஃப் எக்சேஞ்ச்) அந்த செலாவணிகளின் பொருள்களை வாங்கும் திறன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதற்கு வாங்கும் திறன் சமநிலைக் கோட்பாடு என்று பெயர்.

இந்தக் கோட்பாட்டை மிகவும் எளிய முறையில் ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். இந்தியாவில் ஒரு பேனாவின் விலை ரூ.30 என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்காவில் அதேமாதிரி பேனாவின் விலை ஒரு டாலர் என்றால், ஒரு டாலர் 30 ரூபாய்க்கு சமமென்று பொருள்.

இந்த கோட்பாட்டை தெளிவாக புரிந்து கொள்ள, ஒரு உதாரணத்திற்காக இந்தியாவில் ஒரு வினாடிக்கு 10,000 பேனாக்கள் தயாரிப்பதாக எடுத்துக் கொண்டால் அதன் உற்பத்தி மதிப்பு ரூ.3,00,000 ஆகும். டாலர் மதிப்பு அடிப்படையில் இதன் உற்பத்தி மதிப்பு 10,000 டாலராகும். அமெரிக்காவில் இதே 10,000 பேனாக்களின் உற்பத்தி மதிப்பு 10,000 டாலராகும். இவ்வாறு உற்பத்தி மதிப்பு சமன்படுத்தப்படுகிறது.

இதன் வாயிலாக கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புதான் பொருளாதார வலிமையை எடுத்துக்காட்டும் சரியான அளவுகோல் ஆகும். இந்த கோட்பாட்டின் அடிப்படையில் பொருளாதார வலிமையில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

வழக்கமான முறைப்படி கணக்கிடப்படும் ஜி.டீ.பி. யில் இந்தியாவின் அந்தஸ்து என்ன?

வழக்கமான முறைப்படி கணக்கிடப்படும் ஜி.டீ.பி.-யில் ஜப்பான் நாட்டைக் காட்டிலும் இந்தியா பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனடிப்படையில் ஜப்பானின் மொத்த உள்நாட்டு மதிப்பு 6.69 லட்சம் கோடி டாலராகவும், இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு 2.90 லட்சம் கோடி டாலராகவும் உள்ளது.

இது சரியான அளவுகோல்தானா?

இல்லை. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியை துல்லியமாக கணக்கிட முடியாது. ஜி.டீ.பி. என்பது உற்பத்தியை கணக்கிடுவதை மட்டுமே இலக்காகக் கொண்டது. இங்கு செலாவணி அடிப்படையிலான மதிப்பு முக்கியமல்ல. ஜப்பானில் விலைவாசி மிகவும் அதிகமாக உள்ளதால், இதனடிப்படையில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இந்தியாவை ஜப்பான் விஞ்சி விடுகிறது.

வழக்கமான முறையில் செலாவணி வீதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சர்வதேச அளவில் புழங்கும் பொருள்களின் விலை, செலாவணிகளுக்கான தேவைப்பாடு மற்றும் அளிப்பின் அடிப்படையில் வழக்கமான செலாவணி வீதம் கணக்கிடப்படுகிறது. இந்த செலாவணி மதிப்பை வைத்து கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சரியான உற்பத்தியை வெளிப்படுத்தாது.

தனிநபர் ஆண்டு வருமானத்தை வைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை மதிப்பிட முடியுமா?

சரியாக மதிப்பிட முடியாது. ஏனென்றால் சில நாடுகளில் மக்கள்தொகை குறைவாக இருப்பதால் அந்நாடுகளின் தனிநபர் ஆண்டு வருமானம் அதிகமாக இருக்கும். அதேசமயம் அந்நாடுகளில் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும். டெல்லியைக் காட்டிலும், லண்டினில் முடிவெட்டும் கட்டணம் அதிகமாக இருப்பதை இதற்கு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

Leave a Reply