ராஷ்பிகாரி போஸ்ஸின் இந்தியன் இண்டிபென்டன்ஸ் லீக் டெல்லி சாந்தினி செளக் வீதியில் 1911 ஆம் ஆண்டு யானை மீதேறி பிரம்மாண்ட ஊர்வலத்தில் பவனி வந்த இந்திய வைசிராய், ஹார்டிங் பிரபு மீது வெடிகுண்டு வீசினார் ராஷ்பிகாரி போஸ். இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று ஜப்பானில் அடைக்கலம் புகுந்த ராஷ்பிகாரி போஸ் அந்நாட்டிலேயே முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்தார்.

ராஷ்பிகாரி போஸ், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலுள்ள இந்தியர்களை ஒன்று திரட்டி 'இந்தியன் இண்டிபென்டன்ஸ் லீக்' எனும் அமைப்பை நிறுவினார். பிகாரிபோஸ் உருவாக்கிய இந்தியன் இண்டிபென்டன்ஸ் லீக்- ஐஐஎல், கிழக்கு ஆசிய வாழ் இந்தியர்களை ஒரு குடையின் கீழ் அணிவகுக்க உதவியது.

இந்தியாவிலிருந்து பிரிட்டனை விரட்டுவதற்கு இந்திய தேசிய இராணுவம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற விருப்பம் ராஷ்பிகாரிபோசுக்கு இருந்தது. இந்தக் கனவை நனவாக்கும் வாய்ப்பு சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றியதும் வந்தது.

பிரிட்டீஷ் இராணுவத்திலிருந்த இந்தியவீரர்கள் ஜப்பானிடம் சரணடைந்தபோது, ஜப்பானிய அரசின்உதவியுடன்இந்தியஇராணுவவீரர்களை மீட்டு, இந்தியதேசிய இராணுவத்தை கட்டி அமைக்க ராஷ்பிகாரி போஸ் முடிவு செய்தார். இந்திய இராணுவ அதிகாரிகள் ஜெனரல் மோகன்சிங்,லெப்டினன்ட் கர்னல் என்.எஸ்.கில், கேப்டன் இக்ரம் ஆகியோரை ஜப்பானுக்கு வரவழைத்து, ஜப்பானிய பிரதமர் டோஜோவை சந்திக்க வைத்தார் ராஷ்பிகாரி போஸ். ஜப்பானின் உதவியுடன் பிரிட்டனை எதிர்க்க போர்க்களம் செல்ல இந்திய தேசிய இராணுவம் உருகொண்டது.

1942 ஏப்ரலில் சிங்கப்பூர் வருகை தந்த ராஷ் பிகாரி போஸ், இந்தியர்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு ஜப்பானியர் உதவி செய்வதாகவும்,இந்திய தேசிய இராணுவத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்க உறுதி கூறி இருப்பதாகவும் தெரிவித்தார். ராஷ்பிகாரி போஸ் தலைமையிலான ஐ.ஐ.எல். மையங்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொடங்குவது என்றும், ஐ.ஐ.எல் மற்றும் ஐ.என்.ஏ அமைப்புகளுக்கு நிதி திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தியன் இண்டிபென்டன்ஸ் லீக் தலைவராக ராஷ்பிகாரி போசும் இந்திய தேசிய இராணுவத்தின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் ஆக ஜெனரல் மோகன் சிங்கும் அங்கீகரிக்கப்பட்டனர். மேலும், ஜெனரல் சிங், லெட்டினன்ட் கர்னல் கிலானி, கே.பி.கேசவமேனன், என்.இராகவன் ஆகியோர் ஆலோசகர்களாக விளங்கினர்.

இந்தியர்களின் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் லட்சுமி,இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் ஐ.ஐ.எல்., ஐ.என்.ஏ. அமைப்புகளின் மூலம் பங்கேற்பது என்று முடிவு செய்தார்.

Leave a Reply