நாம் இப்போது பெரிய பணக்காரன். இந்தப் பட்டினத்தில் உள்ள எல்லோருக்கும் என்னைத் தெரியும். ஆனால் சிவனேசன் செட்டியார் என்ற என்னுடையப் பெயர் மாத்திரம் ஒருவருக்கும் தெரியாது. என்னை எல்லோரும் எலிக்குஞ்சு செட்டியார் என்றுதான் சொல்வார்கள். ஏன் என்றால் நான் இவ்வளவு பணக்காரன் ஆனதற்கு ஒரு எலிதான்

காரணம். ஒரு எலியை- அதுவும் செத்த எலியை- மூலதனமாக வைத்து வியாபாரம் செய்து நான் பணம் தேடினேன் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்தான். ஆனாலும் நான் சொல்வது முற்றிலும் உண்மை. என் சரித்திரத்தைக் கேட்டு விட்டு பிறகு சொல்லுங்கள் நான் சொல்வது மெய்யா, பொய்யா என்று.

நான் என் தாயின் வயிற்றில் இருக்கும்போதே என் தகப்பனார் இறந்து விட்டார். என் தாய் மிகுந்தப் பாடுபட்டு என்னை வளர்த்துப் பின்பு ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயரிடம் சம்பளமில்லாமல் நான் கல்வி கற்கவும் ஏற்பாடு செய்தாள்.

ஒருநாள் என் அன்னை என்னை அழைத்து பின்வருமாறு சொன்னாள்: ''மகனே, நாம் மிகுந்த ஏழைகள், மிக்க கஷ்டத்தை அனுபவிக்கின்றோம். எப்போதும் இப்படியே இருக்க முடியாது. நீ இப்போது பெரியவனாகி விட்டாய். இனி நீ நம் குலத் தொழிலான வியாபாரத்தை செய்து பொருள் தேட வேண்டும். மூலதனம் இல்லாமல் எப்படி வியாபாரம் செய்வது என்று நீ ஆலோசிக்க வேண்டாம். அடுத்த தெருவிலுள்ள பெரிய வியாபாரியான கதிரேசன் செட்டியார் , வறுமையானவர்களான தன் குலத்தவர் வியாபாரம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு வேண்டிய மூலதனம் கொடுத்து உதவி செய்கிறார். நீயும் அவரிடம் போய் வேண்டிய உதவியைக் பெற்று வியாபாரம் செய்'' என்று என் தாய் சொன்னாள். நானும் அப்படியே அங்கு போனேன்.

நான் போனபோது யாரோ ஒரு வாலிபன் செட்டியாரின் முன் தலை குனிந்து மெளனமாக நின்றான். செட்டியார் அவனைக் குறைக் கூறிக் கொண்டு இருந்தார். '' நான் இருமுறை உனக்குப் பண உதவி செய்தும் நீ அதைக் கொண்டு பொருளூட்டத் தெரியாமல் எல்லாவற்றையும் இழந்து விட்டு இங்கு வந்து நிற்கிறாயே! அதோ பார் அந்த மூலையில் ஒரு எலி செத்துக் கிடக்கிறதே, அந்த எலியை மூலதனமாக்கிக் கொண்டே பெரும் பொருள் தேடிவிடுவான் திறமையான வணிகன். நீயோ என்றால் நான் தந்த பெரும் தொகை மூலதனத்தையும் அழித்து விட்டாயே''.

அவர் இவ்வாறு சொன்னவுடன், அந்த எலியை எனக்கே மூலதனமாகத் தர வேண்டும் என்று கேட்டேன். அவர் முதலில் ஆச்சர்யம் அடைந்தாலும், எலியை எடுத்துக் கொள்வதற்கு உத்தரவு அளித்தார். உடனே அதை எடுத்துக் கொண்டு பத்திரப்படுத்திக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன். எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார்கள்.

வீட்டிற்கு வரும் வழியில் தானியக் கடை ஒன்றில் வளர்க்கப்படும் பூனையின் உணவிற்காக அந்த எலியைக் கொடுத்து விட்டு அதற்கு விலையாக கொஞ்சம் கடலை வாங்கினேன். அதை அவித்தெடுத்துக் கொண்டு நகரின் வெளியே ஒரு மர நிழலில் போய் இருந்தேன். அப்போது விறகு வெட்டிகள் இருவர் வெகு தூரத்தில் இருந்து விறகு சுமையுடன் அங்கு வந்தார்கள். அவர்களுக்கு அந்தக் கடலையைக் கொடுத்து தாகத்திற்கு தண்ணீரும் கொடுத்தேன். இந்த உணவிற்குப் பதிலாக அவர்கள் இரண்டிரண்டு விறகுத் துண்டுகளை போட்டு விட்டுச் சென்றார்கள். அவற்றை கொண்டு போய் விறகுக் கடையிற் கொடுத்து சில காசுகள் பெற்றேன். அந்த காசுக்கு மறுபடியும் கடலை வாங்கி அவித்து விறகுவெட்டிகளுக்கு விற்றேன். இவ்வாறு செய்து சில நாட்களிலேயே அந்த விறகுவெட்டிகளிடம் இருந்த விறகு முழுவதையும் நானே வாங்கிவிட்டேன்.

திடீர் என வானம் இருண்டது. இடி முழக்கத்துடன் இரண்டு நாட்கள் சோனாமாரியாக அகால மழை பெய்தது. இதனால் எதிர்பாராமல் பட்டிணத்தில் விற்குப் பஞ்சம் ஏற்பட்டு விடவே , நான் நியாயமான விலைக்கு என்னிடம் இருந்த விறகை விற்று ஏராளமான பொருளைத் தேடினேன் . உடனே செட்டித் தெருவில் பெரிய கடை ஒன்றை வாங்கி வியாபாரம் தொடங்கினேன். இப்போது நான் இந்த நிலையை அடைவதற்கு காரணமாயிருந்த கதிரேசன் செட்டியாரையும், செத்த எலியையும் மறந்து விடாமல் தங்கத்தினால் ஒரு எலியை செய்து செட்டியாரிடம் கொண்டு போய் சமர்ப்பித்து என் வரலாற்றையும் சொன்னேன். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அவர் தனது மகளை எனக்கு மணம் செய்து தந்தார். அதோ தெரிகிறதே, அதுதான் நாங்கள் வாழும் மாட மாளிகை. இப்போது சொல்வீர்களா நான் சொன்னது பொய் என்று?

நீதி:நாம் செய்யும் எந்த தொழிலையும் முழு மனதுடன் முனைந்து செய்தால் அதில் நாம் வெற்றி பெறுவது திண்ணம். வெற்றி இலக்கை அடைய வாழ்கையில் ஒவ்வொரு படியாகவே ஏற வேண்டும்.

(இந்தக் கதை 1946 ஆம் ஆண்டு இலங்கையின் ஜாப்னா பிராந்தியத்தில் இருந்து வெளியான மறுமலர்ச்சி என்ற தமிழ் பத்திரிகையில் வெளி வந்துள்ளது. அதை மாற்றாமல் அப்படியே தந்துள்ளேன். முடிவில் தரப்பட்டு உள்ள நீதி மட்டுமே நான் எழுதியது – சாந்திப்பிரியா    

One response to “எலிக் குஞ்சு செட்டியார்”

Leave a Reply