ரவி ரண்டால் மாதாஜிரவி ரண்டால் மாதாஜி என்ற ஆலயம் குஜராத் மானிலத்தில் மிகவும் பிரபலமானது. ராஜ்கோட் நகரில் இருந்து 90கல் தொலைவில் தவ்தா என்ற இடத்தில் உள்ளது அந்த ஆலயம். அந்த ஆலயம் உள்ள கிராமத்தின் வழியே ஓடுகின்றது அற்புதமான வாசவாடி எனும் நதி. சுமார் 1100ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்தது என நம்பப்படும் அந்த

ஆலயத்திற்கு சென்று வேண்டுபவர்களுக்கு நிச்சயமாக வேண்டுதல்கள் நிறை வேறுவதாக கூறுகின்றனர். குழந்தை இல்லையா ? குருடனா அங்கு வந்து வேண்டினால் குணமாவது நிச்சயம் என்று நம்பப்படுவதால் சராசரியாக நாலு முதல் ஐந்தாயிரம் வரையிலான மக்கள் ஒவ் ஒரு மாதமும் அங்கு வருகிறார்களாம்.

ரவி ரண்டால் தேவியின் கதை

ரவி ரண்டால் மாதாஜி யார்? அந்த புராணக் கதை இதுதான். அவள் தேவலோகத்தில் இருந்தவள். தொழிளாளிகள் வணங்கும் விஸ்வகர்மாவின் மகள். அவளுடைய அழகில் மயங்கிய சூரியன் அவளை மணக்க விரும்பினார். ஆனால் சூரியனுடைய குடும்பத்தினருடன் நெருங்கிய சம்மந்தம் இருந்தும் சூரியனுடைய வேண்டுகோளை ஏற்க விஸ்வகர்மா மறுத்துவிட்டார்.

இப்படி இருக்கையில் ஒருமுறை ரவி ரண்டாலுடைய தாயார் சூரியனார் வீட்டிற்குச் சென்று மண்பாத்திரம்; ஒன்றை கடனாகப் பெற்றுக் கொண்டு வந்தார். அதைக் திருப்பிக் கொடுக்கையில் அந்த பாத்திரம்; உடைந்து விட்டால் அவளுடைய மகளைத் தன்னுடைய மகனுக்குத் திருமணம் செய்து தந்து விட வேண்டும் என்ற நிபந்தனையை சூரியனாருடைய தாயார் போட்டு இருந்தாள். இதுதான் தக்க சமயம் எனக் காத்திருந்த சூரியனார் இரண்டு மாடுகளை அனுப்பி வழியில் சென்று கொண்டிருந்த ரவி ரண்டாலுடைய தாயார் முன் சென்று சண்டை போடுமாறும், அப்பொழுது அவள் மீது மோதி பாத்திரத்தை தள்ளி உடைத்து விடு மாறும் கூறி அனுப்பினார் . விளைவு பாத்திரம் உடைந்தது, சுரியனாரை ரவி ரண்டால் மணக்க வேண்டியதாயிற்று.

திருமணமான சூரியனாருக்கும்-ரவி ரண்டாலுக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். சூரியனார் மிகவும் ஜொலித்துக் கொண்டு இருந்ததினால் ரண்டாலினால் அவரை நேரடியாகப்பார்க்க முடியவில்லை.அதை தவறாகப் புரிந்து கொண்டார் சூரியனார். அவள் கர்வம் கொண்டு தன்னைப் பார்க்காமல் அலட்சியமாக இருக்கின்றாள் என எண்ணியவர் அவளுக்குப் பிறக்கும் தன்னுடைய குழந்தைகள் காட்டில் சுற்றி அலைந்த படி தவிக்கட்டும் என சாபமிட்டு விட்டார். குழந்தைகள் தவித்தால் தாயார் மன நிம்மதி இழந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் அப்படி சபித்துவிட்டார்.

அதனால் மனம் வருந்திய ரண்டால் தேவி சூரியனார் மீது கோபமுற்று எவருக்கும் தெரியாமல் தன்னைப் போலவே வேறு ஒரு உருவத்தை அங்கே படைத்து வைத்துவிட்டு குழந்தைகளையும் அங்கேயே விட்டு விட்டு தன் தந்தை வீட்டிற்குச் சென்றுவிட்டாள். ஆனால் திருமணமானப் பெணகள் கணவனைப் பிரிந்து தந்தையின் வீட்டிற்கு கணவன் சம்மதம் இன்றி வந்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருதிய விஸ்வகர்மா அவளை வீட்டில் இருக்க அனுமதிக்கவில்லை. ஆகவே வேறு வழி இன்றி கணவன் வீடும் செல்ல மனமின்றி காட்டுக்குள் சென்று தன்னை ஒரு குதிரையாக மாற்றிக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் தவத்தில் இருந்தாள்.

காலம் ஓடியது சூரியனாருக்கும் ரவி ரண்டாலின் மாற்று உருவப் பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. பிறந்த குழந்தைகளில் ஒருவனுக்கும் ரண்டால் தேவியின் முதல் மகனுக்கும் ஒருநாள் சண்டை ஏற்பட அதில் தலையிட்ட மாற்று உருவப் பெண் ரவி ரண்டாலின் மகன் கால்கள் பூமியில் பதிந்தால் அவன் உடம்பில் உள்ள இரத்தம் வெளியேறும் என சாபமிட்டாள். வீடு திரும்பிய சூரியனாரிடம் தன்னுடைய தாயார் (அவனுக்கும்அவள் தன்னுடைய சின்னதாயார் எனத்தெரியாது) கொடுத்த சாபம் குறித்து உண்மையான ரவி ரண்டாலின் மகன் கூற, ஒரு தந்தை வேண்டுமானால் ஆத்திரத்தில் தன் குழந்தை என்று கூடப் பார்க்காமல் சபிப்பார், ஆனால் ஒரு தாய் தன் மகனுக்கு நிச்சயம் சாபம் தரமாட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவர் அவள் மீது சந்தேகம் கொண்டு, அவனை சாபமிட்டதிற்கான காரணத்தைக் கூறுமாறு நிர்பந்தம் செய்தார். அவளும் தன்னைப் பற்றிய உண்மைகளைக் கூறிவிட்டாள்.

அதிர்ச்சி அடைந்த சூரியனார் உடனே ரண்டால் தேவி வீட்டிற்கு சென்று அவள் இருக்கும் இடம் குறித்து விஜாரித்த பொழுது அவர்கள் அவள் அங்கு இல்லை, எங்கோ சென்று விட்டாள் என்ற உண்மையைக் கூறினர். அதைக் கேட்டு வருந்தியவர் தன்னுடைய சக்தியால் அவள் இருக்கும் இடத்தை தேடிக் கண்டு பிடித்து, தன்னையும் ஒரு குதிரையாக மாற்றிக் கொண்டு அவளிடம் சென்று சமாதானம் செய்து மீண்டும் அவளை தன்னிடம் அழைத்து வந்தார். திருமணம் ஆன பின் உண்மையிலேயே அவளால்; ஜொலிக்கும் முகத்தைக்பார்க்க முடியவில்லை என்ற உண்மையை உணர்ந்ததும் அவளுக்கும் தன்னைப் போலவே ஜொலிக்கும் சக்தியைத் தந்து நான்கு இடங்களில் அவள் சக்தி பூமியில் வெளிப்படும் என ஆசி கூறினார்.

அவர்கள் அங்கு குதிரை உருவில் இருந்த பொழுது மேலும் இரு குழந்தைகள் அவர்களுக்குப் பிறக்க அவர்கள் ஆயர்வேத மருத்துவ முறைக்கு அதிபதியாக்கப்பட்டனர். அதன்பின் இருவரும் சுயரூபம் அடைந்து வீடு திரும்பியதும் அவள் உருவில் இருந்தவள் தனக்கு நல்கதி தருமாறு அவர்களிடம் வேண்டிக் கொள்ள ,ரண்டால் தேவி தான் பூமிக்குச் சென்று வாழ இருப்பதாகவும், தன்னை அங்கு விரதம் இருந்து ஆராதிப்பவர்கள் இனி தன்னுடைய மாற்று உருவையும் சேர்த்து வணங்கட்டும்; என முடிவு செய்தாள். அது மட்டும் அல்ல அந்த விரத நாட்களில் சூரியனாரும் குதிரையாக அவர்களுடன் ஆராதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் மூவரையும் ஒருசேர ஆராதனை செய்யாவிடில் விரதம் நிறைவு பெறாது என்றும் கூறினாள்.

ரவி ரண்டால் தேவியின் ஆலயம் எழுந்த கதை

பின்னர் சௌராஷ்டிர மானிலத்தில் இருந்த ஒரு பகுதிக்கு சென்று அங்கு ஒரு மரத்தடியில் ஊமைக் குழந்தை வடிவில் அமர்ந்து விட்டாள். அந்த பிரதேசத்தில் அந்த நேரத்தில் பஞ்சம் தலை விரித்தாடியது. காட்டில் தனிமையில் இருந்த குழந்தையைக் கண்ட ஒரு விவசாயி அதை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். ஊமைக்குழந்தையை ஊருக்குள் கொண்டு சென்றதும் அடுத்த நாளே நல்ல மழை பெய்து நிலங்கள் செழிப்பாயின. அவனுடைய முடமான மற்ற குழந்தைகள் ஆச்சரியமாக நலம் அடைந்தனர். எவருக்கும் காரணம் புரியவில்லை காலம் ஓடியது. ஊரும் செழுமையாயிற்று.

ஒருநாள் பக்கத்து ஊரைச் சேர்ந்த மன்னன் குழந்தையாக இருந்த ரண்டாலை பருவப் பெண்போன்ற அழகிய உருவில் கண்டான். அவளை மணக்க விரும்பி பெண் கேட்டனுப்ப, குழந்தையை திருமணம் செய்து கொடுக்க அவளை வளர்த்தவர்கள் மறுத்துவிட்டனர். பருவப்பெண்ணை குழந்தை எனப் பொய் சொல்கின்றனர் எனக் கருதியவன் அந்த ஊரின் மீதுப் படை எடுத்து வந்து பலரை தாக்கி கொன்றான். அதைக் கண்ட குழந்தை உருவில் இருந்த ரண்டால் தேவி வெகுண்டு எழுந்தாள். தன் சுயரூபத்தைக் காட்டும் விதத்தில் அனைவர் முன்னிலையிலும் ஒரு பசுவை சிங்கமாக மாற்றி, மன்னனுடைய சேனையினருடன் போரிட்டு அவர்களைக் கொன்று குவிக்கத் துவங்க, மன்னன் உண்மையை உணர்ந்து கொண்டான். தானே நேரடியாக அங்கு வந்து அவளிடம் வந்து மன்னிப்புக் கோரி சரணாகதி அடைந்தான்.

அவள் யார் எனப்புரிந்ததும் அனைத்து மக்களும் அவளை வணங்கி தங்களுடைய தெய்வ மாக ஏற்று, ஆலயம் அமைத்துக் கொண்டாடினர். அவளை வழிபட்டு விரதம் இருந்தால் நிச்சயமாக குழந்தைப் பாக்கியம் கிடைக்கும், பேச முடியாதவர்களுக்கு பேச்சு வரும், தீராத நோய்கள் தீரும், கஷ்டங்கள் விலகும், வாழ்வில் ஒளிவரும் என்ற நம்பிக்கை அந்த கிராமத்தில் நிலவுகின்றது.

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply