இந்திய ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பாக விளங்கும் சுபாஷ் சந்திர அகர்வால்!!! டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் ஜவுளிக்கடை நடத்திவருபவர் சுபாஷ் சந்திர அகர்வால்,வயது 62.இவரது முழு ஈடுபாடும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முக்கிய விபரங்களைக் கேட்டுப்பெற்று குறைபாடுகளை அம்பலப்படுத்துவதும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவதும்தான்!

எந்த அடிப்படையில் தேசிய விருதுகளை வழங்குகிறீர்கள்? நீதிபதிகளின் சொத்து விபரம் என்ன? ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கும் எம்.பிக்கள் யார்? யார்?

போன்றவற்றையெல்லாம் கேள்விக்கணை தொடுத்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார் சுபாஷ் சந்திர அகர்வால்.

சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் பெற்ற விபரம் நமது நாட்டில் பெரும் வியப்பை பரவ வைத்துவிட்டது.வறுமைக்கோடு பற்றி வாய்ப்பந்தல் போடும் திட்டக்கமிஷன்,இரண்டு கழிப்பறைகளுக்காக ரூ.35,00,000/-ஐ செலவு செய்துள்ளது.அதில் நவீன கதவுக்காக மட்டும் செலவிடப்பட்ட தொகை ரூ.5,00,000/-ஆகும்.

ஆசிரியருக்கான கடிதம் எழுதுவதில் இவரது பொதுத் தொடர்பு ஆரம்பமானது.முதலாவதாக 'தைனிக் இந்துஸ்தான்' பத்திரிகையில் 1967 இல் சுபாஷ் சந்திர அகர்வாலின் கடிதம் வெளியானது.பேருந்து நடத்துனர் காசு வாங்கிக்கொண்டார்.ஆனால் பயணச் சீட்டு கொடுக்கவில்லை என்பதுதான் முதல் கடிதத்தின் சாராம்சம் ஆகும்.இது டெல்லி போக்குவரத்துக்கழகத்தின் கவனத்துக்கு வந்தது.அந்த அமைப்பு வருத்தம் தெரிவித்துக்கொண்டது என்கிறார் அகர்வால்.

இதையடுத்து அகர்வாலின் தைரியம் அதிகரித்தது.தொடர்ந்து கடிதங்களாக எழுதித் தள்ளினார்.3,699 கடிதங்கள் பிரசுரமாகியுள்ளன.இந்தச் சாதனையை 2006 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப்பேரேடு பதிவு செய்தது.

எந்த இலாகாவைப்பற்றி புகார் கூறி பத்திரிகையில் கடிதம் வெளியாகியுள்ளதோ அந்தப் பத்திரிகையின் நறுக்கை குறிப்பிட்ட இலாகாவுக்கு அனுப்பி நிவாரணம் கோருவது தன்னுடைய வழக்கம் என்று அகர்வால் குறிப்பிடுகிறார்.ரயில்வே அட்டவணையை உன்னிப்பாக கவனித்தபோது தாஜ் எக்ஸ்பிரஸின் பயண நேரம் சரியானதாக இல்லை என்பது எனக்குப் புலப்பட்டது.உடனே இது குறித்து ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினேன் என்பதைக் குறிப்பிடும் அகர்வால்,நாணயங்களின் வடிவமைப்பு குறைபாடாக உள்ளது என்பது குறித்து ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியதையும் பதிவு செய்கிறார்.25 காசுக்கும் 50 காசுக்கும் வித்தியாசம் தெளிவாக தெரிகிறது.ஆனால் 50 காசுக்கும் 1 ரூபாய்க்கும் இடையே வித்தியாசம் தெளிவாகத் தெரியவில்லை என்பதுதான் அகர்வாலின் புகாராகும்.இதே சங்கடத்தை நாமும் அனுபவித்துள்ளோம்.

ஏர்மெயில் கட்டணம் சரியான வகையில் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதை உணர்ந்தவுடன் அஞ்சல் துறைக்கு அகர்வால் புகார் அனுப்பினார்.தனித்தனிக்கட்டுகளாக அனுப்பினால் மலிவாக இருக்கிறது;ஒரே ஒரு பெரும் கட்டை அனுப்பினால் அது மலிவாக இல்லை;இதற்கு என்ன காரணம்? என்று அஞ்சல் துறையைக் கேட்டதற்கு, "இதற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் நகரில் இயங்கி வரும் சர்வதேச அஞ்சல் சங்கம்தான் காரணம்.அதுதான் இவ்வாறு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது" என்று பதில் அனுப்பியது.இந்த பதிலைக் கண்டு தளர்ந்துவிடவில்லை; அவர் உடனடியாக பெர்ன் நகரில் உள்ள சர்வதேச அஞ்சல் சங்கத்தைத் தொடர்பு கொண்டார்.இந்திய அஞ்சல் துறை தவறான தகவலைத் தெரிவித்துள்ளது என்று பெர்ன் நகரில் உள்ள சர்வதேச அஞ்சல் சங்கம் பதில் அனுப்பியது.இதை இந்திய அஞ்சல் துறைக்கு அனுப்பி வைத்தார்.(அதானே இந்தியாவில் சிறு பிரச்னைகளைத் தீர்க்கக் கூடிய பொறுப்பில் இருக்கும் அரசு உயர் அதிகாரிகள் அதைத் தீர்க்காமல் திசை திருப்புவதில், திறமைசாலிகள்!!!)

2005ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் அதைப் பயன்படுத்தி அவர் பல்வேறு விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பிரயோகித்து பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முயன்று வருவதாக அகர்வால் கூறுகிறார்.அவர் தினந்தோறும் 6 நாளிதழ்களை வாசித்து வருகிறார்.தொலைக்காட்சியில் எப்போதும் செய்திகளைப்பார்த்தும்,கேட்டும் வருகிறார்.அது மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் உள்ள சில அலுவலர்கள்,ஊடகவியலாளர்கல் போன்றோரும் அவ்வப்போது ஆலோசனை தெரிவித்து வருவதாகக் கூறுகிறார்.

அகர்வாலின் ஒரே பொழுதுபோக்கு ஜகத்சிங்கின் 'கசல்'பாடல்களைக் கேட்பதுதான்.காகிதப்படகுகள்,வண்ணத்துப்பூச்சிகள்,கதிர் ஒளி,மழை ஆகியவற்றைப்பற்றியெல்லாம் ஜெகத்சிங் உருக்கமாகப் பாடியுள்ளது நெஞ்சை நெகிழ்விக்கிறது என்கிறார் அகர்வால்.இவர் தேனீர் அருந்துவது கிடையாது;உணவில் வெங்காயம்கூட சேர்த்துக் கொள்ளமாட்டார் திரைப்படங்களைப் பார்க்கவும் பிடிக்காது, மாசுடைய உலகம் மாசற்ற உலகமாக மாற வேண்டும் என்பது மட்டுமே தனது குறிக்கோள் என்கிறார்.பொதுநலப் பணி செய்வதற்கு வசதியாக குழந்தையே வேண்டாம் என்று தீர்மானித்திருப்பதாகக்கூறுகிறார்.

இவரைப் போல நாம் ஒவ்வொருவரும் வாசகர்க் கடிதம் வாரம் ஒன்று என்று எழுத ஆரம்பித்தால்,நமது தமிழ்நாட்டில் இந்து தர்மத்துக்கு எதிரான சக்திகளின் கொட்டத்தை அடக்க முடியும்;தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தத் துவங்கினால் அரசாங்கத்தின் ஊழலை ஒழித்துக்கட்ட முடியும். இவைகளைச் சாதிக்கத் தேவை தினமும் தினசரிகளை வாசிப்பதும், கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்திருப்பதும், கொஞ்சம் துணிச்சலும் தான்! முயலுவோமா?

இப்படிக்கு கை. வீரமுனி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

Leave a Reply