பணியில் இருக்கும் பொழுதே இயற்கை எய்திய அஞ்சல்துறை ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் விதிவிலக்கு அளித்து தேர்வு செய்யப்பட்ட 90க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தமிழக அஞ்சல்துறையில் 1995 ஆம் வருடம் முதல் 18 வருடங்களாக பணி நிரந்தரம் செய்யப்படாமலேயே பணியாற்றி வரும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதே போன்று பணிநிரந்தரம் செய்யப்படாது, பணியாற்றி வந்த 202 பேர் பணி நிரந்தரம் செய்யும் கோரிக்கையை வைத்து உச்சநீதி மன்றத்தை அணுகிய போது 30.07.2010 அன்று அதற்கான முறையான உத்தரவை பெற்று பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் நீதிமன்றம் செல்லாமல் இருந்த 90 பேர், உச்ச நீதி மன்றத்தை அணுகிய போது சென்னையில் உள்ள மத்திய தீர்பாயத்தை அணுகுமாறு அறிவுரை கூறப்பட்டது. அதன் அடிப்படையில் விடுபட்டுப்போன 90 பேர்களும் சென்னை மத்திய தீர்பாயத்தில் (O.A.No:1072/2012) மனுதாக்கல் செய்தனர்.

CAT – அவர்கள் மனுவை விசாரித்து 25.10.2013 அன்று மேற்கூறிய மனுதாரர்களுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது.

சென்னை மத்திய தீர்ப்பாயத்தினால் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும், தமிழக அஞ்சல்துறை பாதிக்கப்பட்ட ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் மேல் முறையீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

18 வருடங்களாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் RRR ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம்; செய்ய தமிழக அஞ்சல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

என்றும் தாயகப்பணியில்
(பொன்.இராதாகிருஷ்ணன்)

பாஜக மாநில தலைவர்

Leave a Reply