சீதள மாதா  தேவி சீதளா என்றால் குளுமையானவள் என்ற அர்த்தத்தைத் தரும். சீதள மாதாவிற்குப் பல இடங்களிலும் பல ஆலயங்கள் உள்ளன. அந்த தேவியின் பெயரை வடநாட்டில் சீதள மாதா, மஹா மாயி, மாயி அன்னம்மா, சாத், சிடல் மாதா எனவும் தென்இந்தியப் பகுதிகளில் மாரியம்மன், ரேணுகா, குளிர்ந்த நாயகி, எல்லம்மா, எனவும்

முண்டகண்ணியம்மன், கெம்பம்மா, தொட்டம்மா, சுகஜம்மா, கங்கம்மா என்ற பெயர்களில் அழைத்தாலும் அனைத்து இடங்களிலும் அவள் அம்மை நோயில் இருந்து காப்பாற்றுபவள் என்பதே முக்கியமான நம்பிக்கையா க உள்ளது அம்மை நோயை மட்டும் தடுப்பதற்காக

அவள் பிறப்பு எடுக்கவில்லை, பக்தர்கள் அவள் மீது நம்பிக்கைக் கொண்டு வணங்குகையில் அவர்கள் வேண்டியவற்றை தந்து அருளுகின்றாள், ஊரைக் காக்கின்றாள், பஞ்ச காலத்தில் மழை பொழிய வைக்கின்றாள், குழந்தைப் பேறு தருகின்றாள், குடும்பத்தைக் காக்கின்றாள், நோய்களை விரட்டுகின்றாள் என பல்வேறு விதங்களில் பல இடங்களிலும் நம்பப்படுகின்றது. தென் இந்தியாவில் மட்டுமே அவளுக்குப் மிகப் பெரிய ஆலயங்கள் உள்ளன. கஞ்சி போடுதல், கூழ் காய்ச்சுதல், வேப்பிலை சுற்றிக் கொண்டு வலம் வருதல், தீ மிதித்தல் போன்ற சடங்குகள் அங்கு மிகவும் அதிகம். அப்படிப்பட்ட வழக்கங்கள் வடநாட்டில் இல்லை என்றாலும் அவளுக்கு பல இடங்களில் சிறு சிறு ஆலயங்கள் உள்ளன. ஆனால் சீதள மாதாவிற்கு மிக்பெரிய ஆலயம் வடநாட்டில் புது டெல்லியின் எல்லையில் உள்ள குர் காவூன் என்ற நகரில் உள்ளது. சீதளமாதா நான் குகைகளைக் கொண்டவள், சிவப்பு உடைகளை விரும்புபவள் என்ற நம்பிக்கை உள்ளது. அவளுடைய பூஜைகளில் வேப்பிலையும், எலுமிச்சம் பழமும் முக்கியமானவை. உண்மையில் சீதள மாதா துர்கையின் ஒரு அவதாரமே.

சீதளமாதா ஆலயம்

குர்காவூன் என்ற நகர ம் ஹரியான மானிலத்தின் ஒருபகுதியாகும். அந்த இடம் மகாபாரத நாயகர்களில் ஒருவரான பாண்டவர்களுக்கு வில் வித்தைப் பயிற்சி தந்த துரோணாச்சாரியார் பிறந்த பூமி என்ற பெருமை பெற்றுள்ளது. குர்காவூன் நகரில் ஒரு ஏரியின் கரையில் அமைந்துள்ள அந்த ஆலயம் எழும்பிய கதை மிகவும் சுவாரசியமானது மட்டும் அல்ல புராணப் புகழ் பெற்றதும் ஆகும். ஆலயம் சுமார் 350 வருடங்களுக்கு முன்னர் எழுந்தது எனக் கூறுகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகின்றனர். அங்கு வந்து குழந்தைகளுக்கு முதல் மொட்டை அடிப்பது மிக சாதாரணமான விஷயம்;.

சீதளமாதா ஆலயம் வந்த இரு கதைகள்

300 அல்லது 350 ஆண்டுகளுக்கு முன்பு குர்காவூவில் பாதராத் மற்றும் சிங்கா என்ற இரு சகோதரர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆயிரக் கணக்காக ஏக்கர் நிலம் வைத்திருந்தனர், மிகவும் ஒற்றுமையாக இருந்தனர். அவர்களில் சிங்கா என்பவர் பக்தியாளர்.பூஜைகள், பஜனைகள் எனச் செய்து வந்தவர். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையினால் இரண்டு சகோதரர்களுக்கும் இடையே கருத்து வேற்றுமைத் தோன்றி சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து கொள்ள இப்போது ஆலயம் உள்ள ஒரு பகுதி நிலம் சிங்காவிற்குக் கிடைத்தது. சிங்காவிற்குக் கிடைத்த அந்த நிலத்தின் பெருமை என்ன எனில் அந்த பகுதியில்தான் துரோணாச்சாரியார் பிறந்து இருந்ததாக நம்பப்பட்டது. பாகப் பிரிவினை ஏற்பட்டாலும் சிங்கா தான் வைத்திருந்த பழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் பஜனைகள் , பூஜைகளை செய்து வந்தார்.

ஒருநாள் அவருடைய கனவில் சீதளா தேவி தோன்றி அன்று முதல் நோயுற்று வரும் எவரையும் அவர் தொட்டால் அவர்களுடைய நோய் விலகி விடும் எனக் கூறி விட்டு மறைந்து விட்டாள் .அவரும் அதை நம்பி தன் நிலத்தில் ஒரு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு தியானம் செய்யத் துவங்கினார். அதற்கு முன் அந்த இடத்தில் தன் மனதில் தோன்றிய வகையில் கல்லால் ஆன சிறு ஆலயம் ஒன்றைக் கட்டி ஒரு கல்லை தேவியாகப் புதைத்து வைத்து அதை வணங்கி வரலானர். ஒருநாள் அவர் நிலத்தைத் தோண்டிக் கொண்டு இருந்த பொழுது அவர் கனவில் தோன்றிய அதே உருவில் இருந்த ஒரு சிலை கிடைத்தது. தனக்காகவே அந்த தேவி எழுந்துள்ளாள் என நம்பியவர் அதை எடுத்து வந்து அந்த ஆலயத்தில் வைத்து பூஜிக்கலானர். அது வே பின்னர் சீதள மாத ஆலயமாயிற்று.

அந்த சிலை அங்கு தோன்றியதற்கும் ஒரு கதை கூறப்படுகின்றது. ஒரு காலத்தில் முகலாய மன்னர்கள் பல பகுதிகளுக்கும் படை எடுத்துச் சென்று அந்தந்த நகரங்களில் இருந்த ஆலயங்களை இடித்து சேதப்படுத்தி; பொருட்களை கொள்ளையடித்துச் செல்வது மிக சாதாரணமாக நடந்து வந்தது. அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் தான் அந்த இடத்தில் படையெடுத்து வந்திருந்த முகலாய மன்னன் அங்கு இருந்திருந்த சீதளாமாதாவின் ஆலயத்தை இடித்துத் தள்ளிய பின் அதில் இருந்த சிலையை அங்கிருந்த ஏரியில் தூக்கி எறிந்து விட்டானாம். நாளடைவில் அந்த ஏரிமறைந்து விளை நில மாக மாறி இருந்தது. அந்த இடத்தில்தான் சிங்கா தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையும் அவருக்குக் கிடைத்தது. முகலாய மன்னன் அழித்துச் சென்ற ஆலயம் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் அதன் மகிமை மிகவும் அதிகம் எனவும் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக கைகால்கள் விளங்காமல் நோயுற்றிருந்த ஒரு மன்னனின் குழந்தையை அந்த ஆலயத்திற்கு கொண்டு வந்து அந்த ஆலய மண்ணினால் களிம்பு போட்டு வைத்திருக்க பத்து நாட்களில் குழந்தை நலமாகி விட்டது என்ற ஒரு கதை உள்ளதாகவும்; கூறுகின்றனர். ஆனால் அவை எதற்குமே ஆதாரபூர்வமான சான்றுகள் கிடைக்கவில்லை. வாய் மொழிச் செய்திகளுமே, பரம்பரை பரம்பரையாக கூறப்பட்டு வரும் நம்பிக்கை மிகுந்த செய்திகளுமே ஆதாரம்.

அந்த ஆலயம் கட்டப்பட்டது குறித்து மற்றும் ஒரு கதை நிலவுகின்றது. முன்னொரு காலத்தில் ஆலயம் உள்ள நகரை ஒட்டி பரூக் என்ற நகரம் இருந்தது.அந்த நாட்டு மன்னனின் அரண்மனையில் ஒரு தச்சன் இருந்தான். அவனுக்கு மிகவும் அழகான ஒரு மகள் இருந்தாள். அவளுடைய அழகு குறித்துக் கேள்விப்பட்ட ஒரு முகலாய மன்னன் அவளை அடைய ஆசைப்பட்டு தன்னுடைய ஆட்களை அனுப்பிய பொழுது அந்த தச்சன் அதற்கு சம்மதிக்கவில்லை.அந்த முகலாய மன்னனின் மிரட்டலுக்குப் பயந்து அவன் அந்த நாட்டு மன்னனிடம் சென்று முறையிட்டான். மன்னன் தன் நாட்டுப் பிரஜைக்கு அபயம் அளிக்க முடிவு செய்ததும் முஸ்லிம் மன்னனுடன் போர் ஏற்பட்டது. யுத்த பூமிக்குச் செல்கையில் அந்த மன்னன் தான் யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டு வந்தால் அவளுக்கு ஒரு ஆலயம் அமைப்பேன் என உறுதிமொழி எடுத்துச் சென்றானாம். இன்னொரு கதையின் படி அந்த மன்னன் யுத்தத்திற்குக் கிளம்பிய பொழுது துர்கையை வழிபடாமல் கிளம்பியதால் ஆலயம் உள்ள இடத்திற்கு அருகில் அவன் படை வந்த பொழுது அவன் சென்ற குதிரை மேலும் செல்ல முடியாமல் நின்று விட்டதாம். அதனால் கலக்க மற்றவன் துர்கையிடம்‘தான் யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டு வந்தhல் அவளுக்கு ஒரு ஆலயம் கின்றேன் ’என வேண்டிக் கொண்டானாம். அதன் படி யுத்தத்தில் வெற்றிபெற்று வந்து அங்கு ஆலயமும் அமைத்தானாம்.

சீதள மாதாவின் பிறப்பு

சீதளா தேவி பிறப்பு பற்றி கூறப்படும் இரண்டு புராணக் கதைகளில் இது ஒன்று. ரிஷி ஷரத்வன் என்பவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்த குழந்தைகள் தன்னுடைய தவத்திற்கு இடையூறாக இருக்கின்றனர் எனக் கோபமடைந்து அவர்களைக் கொண்டு போய் காட்டில் விட்டுவிட்டு வந்து விட்டாராம்.அப்பொழுது அந்த வனத்திற்கு வந்த சத்ருஜித் மன்னன் அழுது கொண்டு இருந்த குழந்தைகளைப் பார்த்து அவர்களை தானே எடுத்துச் சென்று வளர்க்கலானார். ஆண் குழந்தைக்கு கருபாச் சாரியா எனவும் பெண் குழந்தைக்கு குருபி எனவும் பெயரிட்டு வளத்தார். குருபியை துரோணாச்சாரியாருக்கு திருமணம் செய்து வைத்தார். துரோணாச்சாரியார் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் வில் வித்தை பயிற்சிகளை அளித்து வந்த பொழுது அவள் ஆலயம் இன்றுள்ள இடத்தில் அமர்ந்த படி தியானம் செய்து கொண்டு இருந்தாள். ஒரு சாபத்தின் விளைவாக பூமியில் பெண்ணாகப் பிறந்திருந்த துர்கையான குருபாதேவி நாளடைவில் மற்றவர்கள் கண்களுக்கு வயதானவள் போன்றத் தோற்றம் தரத் துவங்க அவளை அனைவரும் வணங்கத் துவங்கினர். அதி வெட்பத்தினால் தோன்றும் அம்மை நோயின் கடுமையைப் போக்கி பக்தர்களின் துயரைத் தீர்க்க குளுமையான உடல் கொண்ட தனது ஒரு ரூபமான சீதள மாதா வாக துர்கை அங்கு தோன்றினாள்;.

இன்னொரு கதையின் படி சீதளமாதாவை பிரும்மா படைத்தார்.அவளிடம் சிறிது உளுத்தம் பருப்பைக் கொடுத்து அதை அவள் வைத்திருக்கும் வரை அவளை கடவுளாக உலகத்தினர் வணங்குவர் என்றார். அவளுக்கு உதவியாக சிவபெருமானின் வேர்வையில் இருந்து தோன்றிய ஷஜூவாரரசுவா என்பவர் தோன்ற, இருவரும் ஒரு கழுதை மீது பருப்பை தைத்துக் கொண்டு செல்ல அது சிந்திய இடங்களில் பெரிய நோய் ஏற்பட்டது. அதனால் பீதியடைந்த தேவர்கள் அனைவரும் அவளை பூமிக்குச் சென்று வசிக்கும்படியும் அங்கு அவள் வணங்கப்படுவாள் எனவும் கூறி அனுப்ப பூமிக்கு வந்தவள் கையில் இருந்த பருப்பு எங்கெல்லாம் விழுந்ததோ அங்கெல்லாம் அம்மைநோய் தோன்றியது. மனிதர்கள் அவளிடமே தம்மைக் காத்தருளுமாறு வேண்டிக் கொள்ள சீதளா மாதாவும் அந்த நோயை குணப்படுத்திளாள். அது முதல் அந்த நோய் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவளுக்கு ஆலயம் அமைத்து வழிபாடுகள் செய்யத் துவங்க, மனம் மகிழ்ந்த தேவியும் தன்னை வேண்டிக் கொண்டவர்களை நோய் வராமல் தடுத்து காத்தருளி வருகின்றாள். சுற்றி முற்றிப் பார்த்தால் துர்கையும் பார்வரியின் ஒரு அவதாரமே

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply