இந் நோயின் காரணமாக 1700 களின் பிற்பாதியில் ஐரோப்பாவில் மட்டும் 4 லட்சம்மக்கள் வருடத்திற்கு மாண்டனர். 20 ஆம் நூற்றாண்டில் 30 முதல் 50 கோடி மக்களின் மரணத்திற்கும் இந்தநோய் காரணமாக அமைந்தது. அந்நோயே smallpox எனப்படும் பெரியம்மை.

ஆரம்ப காலத்தில் இந்நோய் தாக்கினாலே மரணம் என்ற நிலை இருந்தது. ஆரம்பத்தில் அரிப்பு, காய்ச்சல் எனத்தொடங்கும் இந்நோய் கிட்டத்தட்ட 12 நாட்களில் உயிரைக் குடித்து விடும்.இந்நோய் Variola Major ,Variola Minor என்னும் இரு வகை கிருமிகளால் தோன்றுகிறது. Variola Major தொற்று ஏற்பட்டவர்களில் 30 முதல் 35 விழுக்காடு மக்கள் மாண்டனர். Variola Minor தொற்றினால் மாண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அதுமுகத்திலும் உடம்பிலும் அழியா தழும்புகளை ஏற்படுத்தியது. Variola Major தொற்று ஏற்பட்டு பிழைத்தவர்கள் உடம்பெங்கும் மிகஅதிக அளவில் தழும்புகள் ஏற்பட்டன. நாம் இன்றும்கூட உடம்பெங்கும் அம்மைத்தழும்பு உடைய பலரைக் காணமுடியும்.

இந்நோய் அதிகமாக 20ம் நூற்றாண்டில் பரவினாலும் கிமு 10000க்கும் முற்பட்ட ஒரு எகிப்திய அரசனின் மம்மியிலேயே இந்நோய் தழும்புகள் கண்டறியப் பட்டுள்ளன.இந்நோய்க் கிருமி Orthopox என்னும் ஒருவகை நுண்ணுயிரிக் குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தில் Variola, Vaccinia, Cowpox, Monkeypox என்னும் நான்குவகை கிருமிகள் உண்டு. இவற்றுள் Variola மனிதனை மட்டும் தொற்றும். மற்றவை மனிதனையும் மிருகங்களையும் தொற்றும்.

இந்நோய்க்காக பல்வேறு மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டாலும் எட்வர்டு ஜென்னர் என்பவர் கண்டறிந்த மருந்தே இந்நோய்க்கான நிரந்தரமருந்தாக பின்னாளில் அங்கீகரிக்கப்பட்டது.

Vaccinia என்னும் அதே Orthopox குடும்பத்தை சேர்ந்த மற்றொருகிருமியே இந்த கிருமிக்கான எதிர்ப்பு ஆற்றலை உண்டு பண்ணுகிறது என்பதனை கண்டறிந்தார் ஜென்னர். Cowpox என்னும் நோயுடைய பசுவிலிருந்து பெற்ற Vaccinia நுண்ணுயிரியை ஒருசிறுவனின் உடலில் செலுத்தி பின் சில நாள்கழித்தி பெரியம்மை நோயை உண்டுபண்ணும் Variola நுண்ணுயிரியினை அச்சிறுவனின் உடலில் செலுத்தும்பொழுது அச்சிறுவனின் உடலில் அக்கிருமி எந்த ஒருதாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதனை சோதனை மூலம் கண்டறிந்தார்.

.1796 – ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் ஜென்னர் அவர்களின் வீட்டிற்குப் பால் கொண்டு வரும் சாரா நீல்ஸ் என்கிற பெண்மணி தனது கையில் மாடுகளுக்கு ஏற்படும் அம்மை நோய் லேசாகத் தாக்கியிருப்பதைக் காட்டி இனி தனக்கு பெரியம்மை ஏற்படாது என்று திட்டவட்டமாகக் கூறினார். இது, அக்கால மக்கள் அனுபவப்பூர்வமாகக் கண்டறிந்த உண்மை இதுவே அம்மை நோய் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்க வழிகோலியது.

அவரது சிறுவயதில் நடந்த சம்பவங்கள்:

ஒருபள்ளி விடுதியில் சில நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியது. எங்கிருந்து இந்தநாற்றம் வருகிறது என்று கண்டுபிடிப்பதற்காக வார்டன் தன் உதவியாளர்களுடன், ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்.

பல அறைகளை நன்றாக ஆராய்ந்தபின்பும் அவரால் நாற்றத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் எட்வர்ட் என்னும் மாணவனின் அறையை அடைந்தனர்.

"ஓ!… இந்த அறையிலிருந்து தான் கெட்டநாற்றம் வீசுகிறது!" என்று சொல்லிக்கொண்டே வார்டன் அங்கிருந்த கட்டிலிலிருந்து படுக்கையை விலக்கினார். அப்போது அவர் அந்த படுக்கைக்கு கீழே கண்டது என்ன தெரியுமா?

பலவிதமான முட்டைகள், வைக்கோல், இறந்த தவளை உடல், எலும்பு துண்டுகள்… இப்படிப் பலபொருட்கள் அங்கு இருந்தன. அவற்றில் பலபொருட்கள் அழுகி நாறின.

வார்டன் மிகவும் கோபம்கொண்டார். அந்த அறையில் தங்கியிருந்த மாணவன் எட்வர்ட் பயந்து நடுங்கி நின்றான்."என்னடா இதெல்லாம்?" வார்டன் அதட்டினார்.

தயங்கித் தயங்கி எட்வர்ட் சொன்னான்: "இயற்கைக் கண்காட்சி ஒன்றை உருவாக்குவதற்கான பொருட்கள் சார்…வார்டன் தன் பணியாளரிடம், "இதையெல்லாம் அள்ளி உடனே வெளியே போடு!" என்று உத்தரவிட்டார்.

அப்போதுதான் தலைமை ஆசிரியர் அங்கே வந்தார்.அவர் எட்வர்டின் அருகேசென்று அன்புடன் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். பிறகு வார்டனிடம் சொன்னார்:

"இப்பொருட்களையெல்லாம் வெளியே போட்டுவிடாதீர்கள். இது போன்ற இன்னும் பல பொருட்களை எட்வர்ட் சேகரிக்கட்டும். அதையெல்லாம் வைத்து நாம் பள்ளியில் இயற்கை அறிவியல்தொடர்பான கண்காட்சி நடத்தலாம்!'

தலைமை ஆசிரியரின் வார்த்தைகளை கேட்ட போது நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தான் எட்வர்ட். சில தினங்களுக்குள் அவன் இன்னும் நிறைய பொருட்களை சேகரித்து பள்ளியில் ஒருபெரிய கண்காட்சி நடத்தினான்.

குழந்தை பருவத்தில் இயற்கையை ஆராய்வதில் பெரிதும் ஆர்வம்காட்டிய அந்த மாணவன் பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானியாகவும் மாறினான்.

Leave a Reply